சிஐஎஸ்எஃப் படையின் முதல் பெண் தலைவரானார் நினா சிங்!
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force), என்பது 1983 ஜூன் 15ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இப்படையின் தலைவராக முதல்முறையாக ஒரு பெண் அதிகாரியான நினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அங்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதே வேகத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பீகாரைச் சேர்ந்தவர் நினா சிங். பாட்னா மகளிர் கல்லூரியைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். தொடர்ந்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ராஜஸ்தான் கேடர் அதிகாரியாக பணியை தொடங்கியவர், அந்த மாநிலத்தின் டிஜிபி பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்கு ஆளானவர். 2000-வது ஆண்டில் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்தபோது, துயருக்கு ஆளாகும் பெண்களை தேடிச்சென்று உதவும் முன்னோடித் திட்டத்தை கொண்டு வந்தார். 2013-2018 ஆண்டுகளில் சிபிஐ-யின் இணை இயக்குநராக இருந்தபோது, ஷீனா போரா கொலை வழக்கு மற்றும் ஜியா கான் தற்கொலை வழக்கு போன்ற உயர்மட்ட வழக்குகளை மேற்பார்வையிட்டார். 2020-ம் ஆண்டில், தொழில்முறை சிறப்பிற்காக அவருக்கு அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுப்லோ ஆகியோருடன் இணைந்து 2 ஆய்வுக் கட்டுரைகளை நினா சிங் எழுதியுள்ளார். 2005-2006-ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திற்காக, காவல் நிலையங்களை பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் திட்டத்திலும் நினா சிங் பணியாற்றினார்.
தற்போது சிஐஎஸ்எஃப் படையின் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு ஆளாகி இருக்கிறார். டெல்லி மெட்ரோ மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவில் விமான நிலையங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி நிலையங்கள், இதர முக்கிய தொழில் மையங்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு பணிக்காக சுமார் 1.76 லட்சம் பேர் கொண்ட வலுவான மத்திய ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் சிஐஎஸ்எஃப் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2021 முதல் சிஐஎஸ்எஃப்-ல் பணியாற்றி வரும் நினா சிங், தற்போதைய உயர்பதவியில், அவர் ஓய்வு பெறவிருக்கும் 2024, ஜூலை 31 வரை பணியாற்றுவார்.