ஐபிஎல் 2024 தொடர்: எப்போது? எங்கே நடக்கும்?
பிசிசிஐயின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும்ம் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம்பியனானது. அதன் பிறகு இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் முதல் முறையாக கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதனிடையே இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நம் நாட்டில் பொதுத் தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், “நாங்கள் ஐபிஎல் அட்டவணை பற்றி விவாதித்தோம். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவலுக்காகக் காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல்கள் ஐபிஎல் நேரத்தில் வரக்கூடும். இப்போட்டிகள் இந்திய மைதானங்களில்தான் நடைபெறும் இது பற்றி எந்த கேள்வியும் இல்லை. வேறு நாட்டுக்கு மாற்றுவது என்ற யோசனையும் இல்லை. வாக்குப்பதிவுத் தேதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஏனெனில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, அங்கிருந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார்.
அதே சமயம் மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டிகளுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. மகளிர் பிரிமியர் லீக் தொடக்க போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இப்போது பெங்களூரு, டெல்லியில் ஆடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது