மூளைக்கு இன்னலாகும் இணையம்!
டிஜிட்டல் யுகம், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஒருசேர கட்டிப்போட்டிருக்கிறது. இணைய உலகில் எந்நேரமும் மக்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வொன்றை நடத்தினர். அதில், இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது, மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, கவனிக்கும் திறன், ஞாபகசக்தி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்டறியப்பட்டது. உலக மனோதத்துவ இதழிலும் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. நினைவாற்றலில் கடுமையான மற்றும் நீடித்த மாற்றங்களை இணையத்தால் உருவாக்க முடியும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
''இணையத்தில் தொடர்ச்சியாக வரும் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் கட்டற்ற தகவல்கள், நம்முடைய கவனத்தைத் திசைதிருப்புவதால் மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகின்றன'' என்கிறார், மூத்த ஆராய்ச்சியாளரான ஜோசப் பிர்த்.
''டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், சமூகத்திலிருந்து விலகிப்போவதுடன், உடற்பயிற்சி போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கவனம் சிதறுகிறது. போதைப் பழக்கம், சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகமுண்டு. இதைத் தடுப்பதற்கு, சில குறிப்பிட்ட செயலிகள் (Apps) இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அதிக நேரம் இணையத்தில் உலாவுவதிலிருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் தடுக்கலாம்'' என்றும் வழிகாட்டுகிறார் பிர்த்.
இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது பெரியவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே தெரியவந்துள்ளது. இளைஞர்களின் இணையப் பயன்பாட்டால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கண்டறிய இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்னும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் 2018ம் ஆண்டின் வழிகாட்டுதலின்படி, 2 வயதிலிருந்து 5 வயது வரையிலுள்ள குழந்தைகளில், நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக கணினியைப் பார்க்கும் நேரத்தை (Screen time) குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக 'இவான் கோல்டுபர்க்' என்னும் உளவியல் நிபுணர், அதீதமாக இணையத்தைப் பயன்படுத்துவதை " இன்டர்நெட் அடிக்சன் டிஸ்ஆர்டர்" என்று பெயரிட்டு உள்ளார். இணைய பயன்பாட்டாளர்களை பல வகைகளாக அவர் பிரித்துள்ளார். "பாலியல் தளங்களின் பிரியர்கள், இணைய சந்தைப் பிரியர்கள், பிளாக்-சமூக வலைதளப் பிரியர்கள், இமெயில் பிரியர்கள் எனப் பல வகை இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர்" என்கிறார் அவர். இப்படி, நேரம் காலமின்றி இணையத்தைப் பயன்படுத்துவதால், மூன்று வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார். ஒன்று, மனம் சார்ந்த, உணர்வுரீதியான பிரச்சனைகள், இரண்டு, சமூகம் அவர்களை நடத்தும் விதம், மூன்றாவது அவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்பு. உதாரணமாக, பல மாதங்களாக இணையத்தில் சூதாட்டம் ஆடுபவர்கள் , பொருட்களை ஏலம் எடுப்பவர்கள் அந்தப் பழக்கங்களைக் கைவிட முடியாமல், தொடர்ந்து பணத்தை இழக்க நேரிடுகிறது.
தொடர்ந்து, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதன் மூலம், ஒரு கட்டத்தில் தங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை வாங்க நேரிடும். பாலியல் தளங்களைப் பார்ப்பவர்கள், திருமணமான பின்னும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் பார்த்துவந்தால், தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டாகும். உணர்ச்சி பாதிப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இணையத்தைத் தோழனாக நினைக்கும் விர்ச்சுவல் மீடியா மனநிலை. இவர்கள், தங்கள் தனிமையைப் போக்கிக்கொள்ள இணையத்தை நாடுகின்றனர். காலப்போக்கில் இது பழகிவிட, நண்பர்கள் சுற்றி இருந்தாலும், இவர்கள் இணையத்திலேயே மூழ்கிவிடும் நிலை உருவாகும். இதனால், இவர்கள் மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
தொடர்ந்து இணையம் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
ஐரோப்பாவில் "இன்டெர்ஸ்பெரியன்ஸ்" (Intersperience) என்னும் சர்வதேச நுகர்வோர் ஆராய்ச்சி மையம், 18 - 65 வயதுக்கு உட்பட்ட1,000 ஐரோப்பியர்களை வைத்து, இது தொடர்பான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. 24 மணி நேரம் இவர்களிடம் இருந்து ஸ்மார்ட் போனைப் பறிமுதல் செய்து, தனியறையில் அமர்த்தப்பட்டனர். இவர்களுள், இளைஞர்கள் பலர் கதவை உடைத்து வெளியே வர முயற்சி செய்துள்ளனர். 24 மணிநேரம் முடிந்து அவர்கள் வெளியே வர அனுமதித்தபோது, அவர்களது அனுபவத்தை உளவியல் மருத்துவர்கள் கேட்டனர். சிலர், "தங்களால் தங்கள் நண்பர்களிடம் தொடர்புகொள்லாமல் இருக்க முடியவில்லை, தனிமை வாட்டுகிறது" என்றனர். சிலர், "இப்போதுதான் ஏதோ சிறையிலிருந்து விடுபட்டது போல் உள்ளது; இது நாள் வரை இணையம் தங்களை அடிமைப்படுத்தியதைத் உணரவில்லை, உணர்த்தியமைக்கு நன்றி, இனி, இணைய பயன்பாட்டைக் குறைத்துக்கொள்கிறோம்" என்று சொன்னது குறிப்பிடத்தக்கது
ஆக இன்றைய நவநாகரிக உலகில் பெருகும், இணையத் தேவைகளுக்கு மத்தியில் யாராலும் இணையத்தை முழுதுமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.வர்த்தகம், வேலை, உலக அறிவு, பொழுதுபோக்கு என பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், தகவல்களைப் பரிமாறவும் இணையம் பயன்படுகிறது. ஆனால், இது, உடல், மனஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம் இல்லையா?
டாக்டர்.செந்தில் வசந்த்