தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக இளைஞர் தினம்!

06:19 AM Aug 12, 2024 IST | admin
Advertisement

னைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். ஐக்கிய நாடுகள் அவையினால் 1999 இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஆக.,12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு உள்ள பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளும் இந்த நாள் மூலமாக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், சிறப்பான எதிர்காலத்தை திட்டமிடுதல் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்கின்றனர்.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம். விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது.

Advertisement

இவர்களை இளையோர் , இளைஞர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளையோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது. இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சாக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று" என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்" என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார்.

'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.'அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

ஐ.நா., அறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தை முன்னேற்ற வேண்டியது, இவர்கள் கையில் உள்ளது. எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் சிலர், இளமைப் பருவத்தில் ஆல்கஹால், புகையிலை, போதைப் பொருள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். மாறாக திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
12 Augustawareness dayconcertscultural eventsInternational Youth Dayworkshopsyouthஅனைத்துலக இளையோர் நாள்உலக இளைஞர் தினம்!
Advertisement
Next Article