பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்!
கைம்பெண்கள் எனப்படும் விதவைகளின் குரல்கள் மற்றும் அனுபவங்களுக்கு கவனத்தை ஈர்க்கவும், அவர்களுக்குத் தேவையான தனித்துவமான ஆதரவை வலுப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 23ஆம் தேதி கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? அல்லது கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு கடைப்பிடிக்கத்தான் முடியும் ”விதவைகள் தினத்தை” கொண்டாட முடியாது என்பது தான் உண்மை நிலை.பெண் தன் கணவனை இழந்த பின்பு அவள் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே மாறிவிடுகிறது. ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் இன்னும் அவர்களுக்கான மறுமணம் நிறைய இடங்களில் ஆதரிக்கப்படவில்லை. இன்றளவும், அவர்கள் தான் வேலைக்கு செல்லும் இடங்களில், சுற்றுப்புறங்களில், நிறைய துன்பத்திற்கு ஆளாகின்றனர். தன் பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பதற்கு நிறைய போராட்டங்களை மேற்கொள்கின்றனர். தனி ஒரு பெண்ணாக இருந்து தன் பிள்ளைகளை வளர்ப்பது என்பது இன்றே சூழ்நிலையிலும் மிகவும் கடினமாக தான் உள்ளது.
பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது, நிதி சார்ந்த தேவைகளுக்கு கணவனை மட்டுமே நம்பி இருந்த நிலையில் கணவன் இறந்த பிறகு அவள் தனிமையில் தள்ளப்படுகிறாள். காலம் மாறி இருக்கலாம் ஆனால் காட்சிகள் இன்னும் மாறவில்லை. ஒரு சிலர் முற்போக்கு சிந்தனைவாதிகளாக இருந்தாலும் கூட பலர் மறுமணத்தை ஆதரிக்க மறுக்கிறார்கள். இன்னும் இந்த சமுதாயம் பழைய மூடநம்பிக்கைகளையே ஆதரித்து வருகிறது. ஓரளவு கைம்பெண்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டாலும் கூட இன்னும் ஒரு சில இடங்களில் இந்த பழைய நிலை தொடர்ந்து தான் வருகிறது. ’விதவைத் தன்மை’ ஒவ்வொரு பெண்ணையும் வறுமையில் தள்ளி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. இத்தகைய விதவைத் தன்மையின் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே ’உலக விதவைகள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச விதவை தினத்தை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா. சபையில் பல தடவை பேசியுள்ளனர்.காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வியா போங்கோ ஒனடிம்பாவின் கோரிக்கைப்படி, ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23 ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.இன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைகள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து தீர்வுக்கு வழி வகுத்து வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் சுமார் 258 மில்லியன் விதவை பெண்கள் இருக்கின்றனர், அவர்களில் 115 மில்லியன் பெண்கள் கணவனை இழந்து வறுமையில் வாடுகின்றனர், 85 மில்லியன் விதவை பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்லாமல் 1.5 மில்லியன் குழந்தைகள், தந்தையை இழந்து தாய்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அக்குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதைத் தாண்டும் முன்பாகவே தனது தாயையும் இழந்து விடுகின்றனர்..இவர்களில் கிட்டத்தட்ட 11.5 கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள்.குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஆண் இறக்கும் நிலையில்,சமூக நீதி அடிப்படையில் விதவை பெண்களுக்கு அரசு வேலை அளிப்பது அவசியமாகிறது.அப்போதுதான் நாட்டில் வறுமையில் வாடும் கைம்பெண்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதே நேரத்தில் நிறுவனங்களும், தனிநபர்களும் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் கைம்பெண்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலைக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்...!
பொருளாதார ரீதியில் கைம்பெண்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மன ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்வது, குடும்ப பெண்களை விட விதவை பெண்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது.இது காலம் கொடுத்த வல்லமை என்றே சொல்ல வேண்டும்...! குறிப்பாக கணவனை இழந்த ஒரு பெண் இந்த சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறாள். எந்த வித சுபக்காரியங்களிலும் அவள் பங்கேற்க விரும்புவதில்லை, அப்படி அவள் பங்கேற்க நினைத்தாளும் சில சமூகம் அவளை ‘அபசகுணம்’ எனக் கருதியும் ‘பாவம்’ எனக் கருதியும் அங்கீகரிக்க மறுக்கிறது. சில இடங்களில், தனது இறந்த கணவனின் உடலை கழுவியத் தண்ணீரைக் குடிக்கும் அளவிற்குக் கொடுமைப்படுத்தப்படுகிறாள். இத்தகைய விதவை நிலை அவர்களை மட்டும் பாதிப்பதில்லை, அவர்கள் குழந்தைகளையும் பாதிக்கிறது.
எனவே மாற்றுங்கள் உங்கள் எண்ணங்களை. இறப்பு என்பது இயற்கை. அதில் ஏன் பாகுபாடு? பூ, பொட்டு என்பது பிறப்பில் இருந்து வருவது. இடையில் வந்தது கணவன் என்ற உறவு மட்டுமே. ஆகவே எண்ணங்களை மாற்றுங்கள். மறுமணம் என்பது தேவை உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, நண்பனாக இருப்பதற்கு தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆண்களைப் போல பெண்களுக்கும் உணர்வுகள், விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை உணர வேண்டும். விதவைகளை சபிக்கப்பட்டவர்கள் போல் பார்க்காதீர்கள். பாலினப் பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் உணர்வுகள் ஒன்றுதான் என்பதை இந்த நாளில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.