சர்வதேச நகர திட்டமிடல் நாள்/உலக நகரமய நாள்!
உலகளவில் குறிப்பாக இந்தியாவில் பசுமை நகரங்களை உருவாக்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டம், அடல் மிஷன் ஃபார் ரெஜுவெனேஷன் அண்ட் அர்பன் டிரான்ஸ்ஃபார்மேஷன் (AMRUT) மற்றும் தேசிய நகர்ப்புற புத்துணர்வுத் திட்டம் (NURM) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த திட்டங்கள், நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.பசுமை நகரங்களை உருவாக்குவது, நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான மற்றும் வாழக்கூடிய உலகை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். பசுமை நகரங்கள், நகர்ப்புற வாழ்க்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இச்சூழலில் திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம்; அது போல, ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்துக்கு ஏற்ப, திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ., 8ம் தேதி, “உலக நகர திட்டமிடல் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புறவியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகர்ப்புறவியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, தொழில்நுட்ப, தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்
பயணம் முதற்கொண்டு எதற்குமே திட்டமிடல்தான் நமக்கு நிம்மதியைக் கொடுக்கிறது. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணம் செய்கிறோம் என்றால், அந்தப் பயணம் பாதுகாப்பாகவும், இனிமையாகவும் அமைய வேண்டும் என்றால் நாம் முன்கூட்டியே சில திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகிறது. ரயில் அல்லது பஸ்ஸில் செல்கிறோம் என்றால், சற்று தொலைதூரம் என்றால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையான இருக்கை அல்லது படுக்கை வசதியை அமைத்துக்கொள்ள வேண்டும்.
திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும், நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
திட்டமிட்ட தலைநகரங்கள்:
உலக நாடுகளின் தலைநகரங்களில், கான்பெரா (ஆஸ்திரேலியா), வாஷிங்டன் (அமெரிக்கா), பிரேசில்லா (பிரேசில்), புதுடில்லி (இந்தியா), அபுஜா (நைஜீரியா), அஸ்டானா (கஜகஸ்தான்), இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) ஆகியவை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை.
இந்தியாவில்…:
இந்தியாவில் முதன் முதலில் திட்டமிடப்பட்ட நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு பொது தலைநகர். உலகின் பெரிய திட்டமிடப்பட்ட நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படிஉருவாக்கப்பட்டது. நொய்டா, ஜெய்ப்பூர், காந்திநகர் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்ட நகரங்கள்.
இந்நிலையில் கடைசியாக எடுக்கப்பட்ட 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 31.2% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 26% மட்டுமே நகர்ப்புறம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரங்கள் என்பவை 5,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருப்பவை, ஒரு சதுர கிமீ பரப்புக்குள் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசிப்பவை, 75%-க்கும் அதிகமானவர்கள் விவசாயம் சாராத பணிகளைச் செய்பவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இவ்வாறு வரையறுக்கப்பட்ட நகரங்களில் பலவும் ஊராட்சி அமைப்பின் கீழேதான் இருக்கின்றனவேயொழிய அவற்றுக்கென்று தனி நகராட்சி அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. பெருநகரங்களையொட்டிய புறநகர்ப் பகுதிகள் பலவும் இப்படி ஊராட்சி அமைப்பின் கீழாகத்தான் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன.
இந்தியாவில் அமையவிருக்கும் புதிய நகரங்கள் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் அமையவுள்ளனவா அல்லது முற்றிலும் பசுமை நகரங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு நிலைகளிலுமே புதிய நகரங்களின் தேவை இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவுத் துறை விவாதங்களில் நகர்ப்புறத் திட்டமிடுதல் தவிர்க்க இயலாததாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்