For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்!

05:55 AM Sep 30, 2024 IST | admin
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்
Advertisement

ந்த பரந்த பூமியில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியாது. அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான் மொழிபெயர்ப்பு அவசியம். இதை கவனத்தில் கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.. வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார். மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் ஜெரோம் 420 செப்டம்பர் 30-ல் இறந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை ஜெரோம் நினைவை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பு போட்டியினை நடத்தி இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தினத்தில் பைபிளுக்கு பின் அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்ட நுால் திருக்குறள் என்பதை பெருமிதமாகக் கொள்ள வேண்டும்.

Advertisement

உலகில் உள்ள பல நாடுகளில் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முக்கியமானதாகக் கருதப் பட்டாலும், படைப்பு இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மொழி பெயர்ப்பாளர்களுக்கு இல்லை. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பதற்காக பரிசு பெற்ற படைப்பாளிகள் கண்டுகொள்வதே இல்லை என்று குரல் இன்னும் உண்டு. மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்கு பாராட்டும், அங்கீகாரமும் மிகவும் அவசியம்.காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையெனில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 93 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. லெனின் படைப்புகள் 321 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. தமிழகத்தில் படைப்பாளிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தாய் நாவலை யாரும் மறக்கமுடியாது. இவை அனைத்தும் மொழிபெயர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சாத்தியம் ஆயிற்று. ஆகையால் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Advertisement

இந்நிலையில் நம் தமிழ்நாட்டில் எவ்வாறு எங்கெங்கே யார்யாரால் இத்தினம் கொண்டாடப்பட்டது என்ற சரியான தகவல்கள் இல்லை. பண்டைக் காலம்தொட்டே தமிழில் மொழிபெயர்ப்புக்கான பாரம்பரியம் இருந்துவந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு பாரதியிலிருந்து தொடங்குகிறது எனலாம். மிகச் சிறந்த எழுத்தாளர்களாக அறியப்பட்ட பலரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்நிய இலக்கியங்களை நமது மொழியில் கொண்டுவந்துசேர்த்த அவர்தம் பணியை நகைப்புக்குள்ளாக்குவது நமது நோக்கமல்லவென்றாலும், மொழிபெயர்ப்புகளில் தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிடுகிற சறுக்கல்களை சுட்டிக்காட்டுவதற்காக சில உதாரணங்களைச் சொல்லலாம்.

நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் நாள்தோறும் பெருகிவருகின்றன. ஆனால், புதுமைப்பித்தன் என்கிற மேதை அவற்றையெல்லாம் பாடமாகக் கற்றுத் தேராமலேயே அற்புதமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கும் சறுக்கல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ‘எமனை ஏமாற்ற’ என்கிற ஜப்பானியக் கதையில் எம்மோதாவோ என்ற ஜப்பானிய மரணதெய்வத்தை இந்துக் கடவுளாக மாற்றி ‘எமதர்மன்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘பலிபீடம்’ குறுநாவலில் பல வசனங்கள் தமிழக வட்டார வழக்கில் வருகின்றன (“அவாளவாளுக்கு எது பிரியமோ அதுபடி..”).தி.ஜானகிராமன் மிக அற்புதமான எழுத்தாளர்; அரிதாகவே மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்திருக்கும் பேர் லாகர்க்விஸ்ட்டின் ‘குள்ளன்’ என்ற ஸ்வீடன் நாட்டு நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே ‘தம்பிடிக்கும் பிரயோஜன மில்லாத...’ என்ற வாக்கியம் வருகிறது. தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், கலிலியோ என மேலைநாட்டு அறிஞர்கள் கண்டுபிடித்த தகவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அறிவியல் வளர்ச்சியால் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அன்னா கரீனினா, போரும் வாழ்வும், புத்துயிர்ப்பு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் லியோ டால்ஸ் டாய், குற்றமும் தண்டணையும், சூதாடி, மரணவீட்டின் குறிப்புகள் படைப்பு ஆசிரியர் தஸ்தாவ் யெவ்ஸ்கி என பிற படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Online translation, foreign languages learning concept. Man working with a computer laptop, translate text on the screen.

இத்தனைக்கும் மொழிபெயர்ப்புக்கென்று அரசில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது மட்டும் தெரிகிறது. பல்கலைக்கழகங்களில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மட்டும் மொழி பெயர்பபுக்கென்று தனித்துறை இயங்குகிறது. தமிழ்ப்பாட நூல் நிறுவனம், எண்பதுகளில் பலநூல்களை தமிழ்வழிப் பாடத்திட்டத்திற்கென்று தயாரித்து வெளியிட்டது. இவற்றில் பல நேரடி மொழிபெயர்ப்புகள். வழக்கமான வறட்சியான பாடத்திட்ட நூல்களாக, பல இருந்தாலும் சில அபூர்வமான அருமையான நூல்களும் அவற்றில் இருந்தன. ஆனால் அவை பயன்பாடற்று குப்பையாயின. எல்லா பொதுநூலகங்களுக்கும் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கும் அவை இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்து, இன்றைக்குப் பெரும்பாலும் அவை டிஸ்போஸ் செய்யப்பட்டுவிட்டன. பொதுவாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது எதிர்ப்படும் முக்கியமான சிக்கல், மிக நீண்ட கூட்டுவாக்கியங்கள். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கூட்டுவாக்கியத்தை எழுதிக்கொண்டே போவதைப்போல, தமிழில் எழுதுவதற்கு நமது இலக்கணம் அனுமதிக்காது. தொடர்வாக்கியமாகத்தான் எழுதமுடியும். பண்டையத் தமிழ்ச் செய்யுள்களில் முற்றுப்புள்ளியே இல்லாமல் பக்கம் பக்கமாகச் செல்வதைக் காணமுடியும். ஆனால், நவீனத் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளனுக்கு இது பெரிய சவால்தான். நீளமான வாக்கியங்களை, சிறு வாக்கியங்களாக வெட்டி வெட்டி மொழிபெயர்க்கும்போது மூலப்படைப்பின் வீரியம் நீர்த்துப்போகின்றது.

வட்டார வழக்குகளை மொழிபெயர்ப்பது இன்னொரு சவால். ஒருவிதத்தில் அது சாத்தியமும் அல்ல. அடிக்குறிப்புகள் புனைவு வாசிப்பில் தளர்ச்சியைக் கொண்டுவரும். மரபுத்தொடர்களை, அவை மரபுத்தொடர் என்றே அறியாமல் நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் உதாரணங்கள் தமிழில் நிறைய உண்டு.போர்த்துகீசிய எழுத்தாளரான ஜொஸே சரமாகோ நிறுத்தக்குறிகளே இல்லாமல் எழுதுவார். அவருடைய நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களும், அதே பாணியில்தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால், அவருடைய ஒரு நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர் எல்லாவிதமான நிறுத்தக்குறிகளையும் வாக்கியங்களில் சேர்த்திருக்கிறார். இப்படி மொழிபெயர்ப்பாளர்களின் சித்து விளையாட்டுகள் கணக்கற்றவை.

வேதமொழி, இதிகாச மொழி, சமஸ்கிருதம், பிராகிருதம் முதலிய வடமொழிப் பழம் இலக்கியங்கள் பல தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்புநாதனின் வேதமொழிபெயர்ப்புகள், மகாபாரதத்தின் கும்பகோணம் பதிப்பு போன்றவை உண்மையில் கொண்டாடத்தக்கவை. ஜகந்நாதராஜாவின் பிராகிருத, பாளி மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. இந்தி, வங்காளி, மராத்தி மற்றம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிபெயர்ப்புகள் தமிழில் பேரளவில் வந்துள்ளன. தாகூர், சரத்சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, காண்டேகர் நூல்கள் அறுபதுகள் எழுபதுகளில் எக்கச்சக்கமாக தமிழ்ப்படுத்தப்பட்டன. இவ்வகையில் அமெரிக்க, ஆங்கில, ஐரோப்பிய இலக்கியங்களை தமிழ்ச்சடர் நிலையமும் ஜோதிநிலையமும் மொழிபெயர்த்து வெளியிட்டுத் தமிழுக்கு சேவைசெய்துள்ளன. அரபி, பாரசீக, உருது இலக்கியங்கள் முஸ்லீம் எழுத்தாளர்களால் தொடர்ந்து அதிக அளவில் தமிழாக்கப்பட்டுள்ளன.

த.நா.குமாரசாமி, ஆர்.ஷண்முகசுந்தரம், முக்கியமாக க.நா.சுப்ரமண்யம் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் தமிழின் படைப்புமுகத்தையே மாற்றியமைத்தன என்றால் யாரும் மறுக்கமுடியாது. மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பக நூல்கள் தமிழுக்குக் கிடைத்த அரிய கொடையென்றுதான் கூறவேண்டும். இதற்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரத்திற்காக வெளிவந்த பெர்ல் பப்ளிகேஷன் சில நல்ல அமெரிக்க இலக்கிய நூல்களை அளித்தது. க்ரியாவினுடைய மொழிபெயர்ப்புகளில் காஃப்கா, ஆல்பெர் காம்யு, அந்த்வான் து எக்சுபெரி ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. இன்றைய கணினி, இணைய, குளோபலைஷேசன் காலத்தில் பழைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மறுபதிப்புப் பெற்றுள்ளன. புதிய மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றியுள்ளனர். சமகால நூல்கள் இன்று மொழிபெயர்ப்பாக உடனுக்குடன் கிடைக்கும் சூழல் மெதுவாக உருவாகிவருகிறது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்புதினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement