For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் - நவம்பர் 16

01:07 PM Nov 16, 2013 IST | admin
சர்வதேச சகிப்புத் தன்மை தினம்   நவம்பர் 16
Advertisement

ல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

நம்மைப் பொறுத்தவரை சகிப்புத் தன்மை என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டிருக்கிறோம்? மனைவி தரும் சுவையில்லாத உணவை மறுப்பேதும் தெரிவிக்காமல் சாப்பிடுவதையும், மின்சாரம்இல்லாமல் இரவுகளில் கொசுக்கடியில் துாங்குவதையும், அத்தியாவசியபொருட்கள் விலை உயர்வை மவுனமாக ஏற்றுக்கொள்வதையும்,குடிநீர்வரி செலுத்தியும் அடிகுழாயில் தண்ணீர் வராததையும், குண்டும் குழியுமான ரோடுகளில் எந்தவித லஜ்ஜைம் இல்லாமல் பயணிப்பதையும், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்கள் விடும் புகையினைக் கண்டும் காணாமல் கடப்பதையும், தனியார்கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தையும், .பேருந்துக்குள் மழைக்காலங்களில் குடைபிடிக்கும்இம்சையையும்... இப்படி நாம் சகித்துக் கொள்ளும் பல விஷயங்களையே சகிப்புத்தன்மை எனக் கருதுகிறோம். ஆனால், சகிப்புத்தன்மை இவைகள் அல்ல,,

பல்வேறு ஜாதி, மதம், இனம், கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதோடு அதனைப் போற்றுவதும்தான் சகிப்புத்தன்மை. நான் நானாக இருப்பதும், நீ, நீயாக இருப்பதும், அதேநேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதுமே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதாகும். "ஒற்றைப் பண்பை வலியுறுத்துவதுவன்முறை" என்பது நோபல் பரிசு பெற்ற அமிர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.சகிப்புத் தன்மை என்பது ஒரு தார்மீகக் கடமை. உலக மக்கள் கூட்டாக வாழ்வதை உறுதி செய்கிறது. .

Advertisement


சகிப்புத்தன்மை உள்ள மனிதன் பெருந்தன்மை உடையவன் ஆவான் என கூறப்படுகிறது. மனிதனின் அன்பு, அடக்கம், பரிவு, இரக்கம், உண்மை, எளிமை, நேர்மை, மதிப்பளித்தல், பொறுமை, ஒற்றுமை,சகோதரத்துவம்,கருணை,மனிதநேயம் உள்ளிட்ட வாழ்வியல் நன்னெறிப் பண்புகளின் அடிப்படையே சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மைக்கு முதலாவது எடுத்துக்காட்டானவர் மகாத்மா காந்தியடிகள்.மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினை,நெருக்கடிகள்,ஆனவம் போன்ற சூழ்நிலைகளால் சகிப்புத்தன்மை நிலை மாறுகிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மை காப்பது வாழ்வியல் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மற்றவர்களின் சதந்திரத்தை பரித்தல்,அடிப்படை உரிமை இழக்கச் செய்தல்,கருத்துக்கு மதிப்பளிக்காமை,மனதை புண்படுத்துதல்,இழிவாக நடத்துதல் அடிமைப் படுத்துதல்,கலாச்சாரத்தை இழிவு செய்தல்,தீங்கிழைத்தல் போன்ற எதிர்மறை காரணிகள் சகிப்புத்தன்மையை சிதைத்து விடும்.எதிர்வரும் பிரச்சனைகளை, நெருக்கடிகளை,துயரங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தாலே சகிப்புத்தன்மையில் வாழ்வில் வேறூன்றி நிலைத்த பெருமையை கொடுக்கும்.

சகிப்புத்தன்மையைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும். குழந்தைகள் வெறுப்பு மற்றும் சந்தேக உணர்வுகளுடன் வளரக்கூடாது. மற்றவர்கள் மீது வெறுப்புடனும் பொறாமையுடனும் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியற்றவர்களாக மாறுகிறார்கள். மேலும் சில கருத்துக்களை திணித்து வளர்க்கப்படும் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்காதவர்களாக உருவாகுவார்கள். இது அவர்களின் எதிர்காலத்தை பெருமளவில் பாதிக்கும். இளம்பிராயத்தில் சிறந்த வாழ்க்கை விழுமியங்களை கற்றுக்கொள்வது அவர்களின் வாழ்க்கை முழுவதட்குமான மகிழ்ச்சிக்கான விதை ஆகும். குழந்தைகள் அன்பையும் சகிப்புத்தன்மையையும் சிறுவயது முதலே கற்று வளர்ந்தால் அவர்கள் வளர்ந்து ஆளுமை மிக்கவர்களாக உயரிய குணங்கள் கொண்டவர்களாக , நிறைவான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழுவர் .

நாமும் வாழ வேண்டும்,மற்றவர்களும் வாழ வேண்டும்,மற்றவர்களின் நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வது சகிப்புத் தன்மையின் ஒரு அங்கம்.ஒவ்வொரு மனிதருக்கும் பொறுமையின் அடையாளச் சின்னமான சகிப்புத்தன்மை மிக மிக அவசியம். மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

வாத்தியார்

Tags :
Advertisement