For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டு திக்குவாய்/திணறல் விழிப்புணர்வு நாள்!

06:13 AM Oct 22, 2024 IST | admin
பன்னாட்டு திக்குவாய் திணறல் விழிப்புணர்வு நாள்
Advertisement

லக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.

Advertisement

20ம் நூற்றாண்டின் மத்தியில் திக்கி திக்கி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்து திக்குவாய் பிரச்னையால் சிரமப்படுவோர் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வகையிலும், ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் சுய உதவிக்குழுக்களை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தார்கள்.திக்குவாய் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 1995ம் ஆண்டு சர்வதேச திக்குவாய் சங்கம் உருவானது. அந்த சங்கத்தின் நோக்கம், திக்குவாய் பிரச்சனையால் அவதி படுவோர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.1998ம் ஆண்டு இந்த சங்கம் அதிகாரப்பூர்வமாக சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு நாளை அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி திக்குவாய் பிரச்சனை உள்ள ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் பெர்ணாட்ஷாவின் பிறந்த நாளை சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.பெர்ணாட்ஷாவின் இந்த பிரச்சனை அவர் சாதிக்க ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என்பதை உணர வைப்பதற்காகவே அவரின் பிறந்தநாளை திக்குவாய் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

திக்குவாய் உள்ளவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்களே. இதில் 65 சதவீதத்தினருக்கு பரம்பரை மூலம் எற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெர்விக்கின்றன. எது எப்படி இருப்பினும் 5 வயதுக்கு முன்னரே திக்குவாய் தொடங்கி விடுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காதபோது 10 அல்லது 18 வயதில் இது உச்ச நிலையை அடைகிறது. இது பிற்பாடு நிலையாக இருந்துவிடலாம் அல்லது மறைந்து விடலாம்.ஒரு ஆய்வின் படி, 8% குழந்தைகள் ஏதாவது ஒரு பருவத்தில் பேசும்போது திக்குவார்கள். பல குழந்தைகளுக்கு இது தானாகவே சரியாகிவிடும். சில குழந்தைகளில் ஓரளவு பாதிப்பு இருக்கும். சிலருக்கும் எந்த முன்னேற்றமும் இருக்காது.

திக்குவாய் என்பது ஒரு நோய் அல்ல....தன்னுடைய எண்ணத்தை கோர்வையாக ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளிப்படுத்த முடியாத நிலையே திக்குவாய். அதற்க்காக அவர்கள் வேகமாக எத்தனிக்கும்போது வார்த்தை தடுமாற ஆரம்பிக்கிறது. இவர்கள் ஆரம்பித்துவிட்டால் மிகவும் விரைவாக தடங்கல் இல்லாமல் சொல்லிமுடித்து விடுவார்கள்......ஆனால் இடையில் சிறு தடங்கல் வந்தால் அவ்வளவுதான் மனமும்.... வாயில் உள்ள தசைகளும்...உடலின் செய்கைகள் அனைத்தின் கோ ஆர்டினேசன் இல்லாமல்போவதால் பேச்சு தொடர முடியாமல் போய் விடும்.

திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.

அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங்களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுபாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ் நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைபடுகிறது. இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைபடுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மன தடையால் நரம்புகள் ஒத்துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.

உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும். மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸ் எடுக்கும்போது, தொலை பேசியில் பேசும்போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும்போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.

எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்தவார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை. உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்னைகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சு பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன்களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்கு வாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேச துவங்கிவிடுகின்றனர். யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்திசார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்குவாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல்பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களிலேயே இதை தீர்க்க முடியும்.

இந்நாளில் ஒவ்வோர் ஆண்டும், உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி, சமூகத்தின் சில அம்சங்கள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்; எதிர்மறை அணுகுமுறைகளைம் பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல்; திக்குவாய் நபர்கள் பதட்டமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த நிகழ்வுகளையும் பிரச்சாரங்களையும் நடத்துகின்றன.இந்த பாதிப்பில் இருந்து மீண்ட அறிவியல், அரசியல், தத்துவம், கலை, திரைப்படம், இசை ஆகிய துறைகளில் உலகில் தடம் பதித்த அல்லது பதித்துக் கொண்டிருக்கும் பல குறிப்பிடத்தக்க நபர்களையும் இந்நாள் கொண்டாடுகிறது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ளவேண்டும் என்பது கீழ்வருமாறு :
--------------------------------------------------------------

--> என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.

--> பொறுமையாக கேட்கவேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.

--> பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.

--> இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும்.

--> தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விடவேண்டாம்.

--> திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.

இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வமானவர்களின் வழிகாட்டுதலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement