சர்வதேச ’காணாமல் போன’ குழந்தைகள் தினம்!
அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த மே 25-ம் தேதி உலக காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் ஆண்டுக்கு சராசரியாக இருபாலரும் அடங்கிய ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இதில் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகம் என்பதும் குறிப்படத்தக்கது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 45ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக குழந்தைகள் காணாமல் போகும் மாநிலமாக மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 2013 முதல் 2015 வரையில் காணமல்போய் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிகிதம். டெல்லியில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 22,000 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 9,000 குழந்தைகளை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல்போன சிறுமிகளில் 45 சதவிகிதத்தினர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் ஒரு லட்சம் சிறுமிகள் ஆண்டுதோறும் கட்டாயமாக விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். இப்படிப் பல ஊர்களில் காணாமல்போகும் சிறுவர்களை யார் கடத்திச் செல்வது? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இன்றளவும் பல குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அலட்சியமாக இருப்பதற்கு அவர்கள் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்ததுதான் காரணமா? ஏழைகள் என்றால், அவர்களுக்கும் பந்தம் பாசம் இருக்காதா?
வறுமை, பெற்றோரின் கண்டிப்பு அலட்சியம் இவைகளால் வீட்டை விட்டுக் காணாமல் போகும் அறியாத வயதில் உள்ள சிறுவர் சிறுமியர் பெரும்பாலும் புகாரின் பேரில் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதிலும் 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். இப்படி பிச்சை எடுக்க வைக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளுக்காகவும். கயவர்களால கடத்தப்பட்டு காணாமல் போகும் குழந்தைகளின் நிலைதான் வேதனைக்குரியது. அப்படி காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட் டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் உள்ளனர். மேலும் செவிதிறன் குறைபாடு, பார்வை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டா லும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் கொண்டு சேர்ப்ப தில் பெரும் சிரமம் உள்ளது என்பதும் சோகம்.
தமிழ்நாட்டில் கடத்தப்படும் பெரும்பாலான ஆண் குழந்தைகள், ஆந்திராவின் உள்கிராமப் பகுதிகளில் இருக்கும் முறுக்குத் தொழிற்சாலைகள், பேக்கரிகள் போன்ற தொழில்களுக்கும், சிறுமிகள் பாலியல் தொழிலுக்கும் கொண்டுசெல்லப்படுவதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். ஆனால், இதுகுறித்த எவ்வித ஆய்வும் புள்ளிவிவரங்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பது வேதனையான விஷயம்.
உங்கள் ஊர் சிக்னல்களில், நீங்கள் பார்க்கும் பிச்சைக்காரக் குழந்தைகளில் பலர், இப்படி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்ட குழந்தைகளாக இருக்கலாம். இந்தியாவில் 11 குழந்தைகளில் ஒரு குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் கட்டாயமாக வேலையில் அமர்த்தப்படுகிறது. இவர்களில் 80% குழந்தைத் தொழிலாளர்கள், கிராமப் பின்னணிகொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் விவசாயத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், இவர்கள் அதிகபட்சமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்படும் குழந்தைகள், தினசரி 50 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்தே ஆக வேண்டும் என்று கடத்தல்காரர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
எனவே குழந்தைகளைத் தொலைத் தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். சைல்டு ஹெல்ப்லைன் அறக்கட்டளையை 1098 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தெரிவித்தால் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொலைந்து பின் மீட்கப்படும் குழந்தைகளை தகுந்த விபரங்களை சேகரித்து பெற்றோரிடம் சேர்க்கவும் உதவி கிடைக்கும். ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண் அது. இந்தப் புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் தொடர்பு கொண்டு குழந்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். அத்துடன் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தினால் (NCPCR) “GHAR (GO Home and Re-Unite)” இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுப்பது மற்றும் உரிய இடத்திற்கு அவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பான தரவுகளை டிஜிட்டல் முறையில் எளிதில் கண்காணிக்க முடியும்.