சர்வதேச எழுத்தறிவு நாள்!
ஒரு மொழியில் எளிதான வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது எழுத்தறிவு என கருதப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஐநாவின் ஓர் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு1966-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நடத்திய 14-வது கூட்டத்தில்தான் செப்டம்பர் 8-ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் தலையாய நோக்கங்கள்.
எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின் தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடு பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை உட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு பெறவில்லை, இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் பள்ளிக்கூட வசதிகள் இல்லாத நிலையில் உள்ளனர். இதனால், இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இளைஞர்களையும் குழந்தைகளையும் அதிகளவு கொண்டுள்ள இந்தியா, இன்னும் எழுத்தறிவில் முழுமை பெறவில்லை என்பது சோகமான ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இந்தியாவில் தேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் 2017 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு சராசரி 77.7% என்றும், ஆண்கள் 84.7%, பெண்கள் 70.3% என்றும் இருக்கிறது. இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிளில் கேரளா அதிக அளவாக 96.2% என்றும், இங்கு ஆண்கள் 97.4%, பெண்கள் 95.2% என்றும் இருக்கிறது. ஆந்திரப்பிரதேசம் குறைந்த அளவாக 66.9% என்றும், இங்கு ஆண்கள் 80%, பெண்கள் 59.5% என்றும் இருக்கிறது. இப்பட்டியலில் தமிழ்நாடு 16 ஆம் இடத்திலிருக்கிறது. தமிழ்நாட்டில், சராசரியாக 82.9% என்றும், இங்கு ஆண்கள் 87.9%, பெண்கள் 77.9% என்றும் இருக்கிறது.
இத்தனைக்கும் நாடு முழுவதும், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்' 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) எழுதப் படிக்கத் தெரியாத 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்காக தமிழகம் முழுதும் கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 30,814 தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனுடன், கற்போரையும், தன்னார்வலர்களையும் ஊக்குவிப்பதற்காக அவர்கள் வசிக்கும் பகுதி சார்ந்த தொழிற் திறன்களை வளர்த்தல், கற்போரின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்தல், தேசிய, மாநில அளவிலான முக்கிய தினங்களை கொண்டாடுதல் உட்பட செயல்பாடுகளும் எழுத்தறிவு மையங்களில் நடத்தப்படுகின்றன.
மேலும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அனைத்து எழுத்தறிவு மையங்களிலும் செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி ஏற்பு, சிறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். இந்நிகழ்வில் மாணவர்கள், கற்போர்கள், தன்னார்வலர்கள், திட்ட ஒங்கிணைப்பாளர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும். அதன்படி, உலக எழுத்தறிவு தின வார நிகழ்வுகளை அனைத்து மையங்களிலும் சிறப்பாக நடத்திட வேண்டும். அந்நிகழ்வுகள் சார்ந்த ஆவணத் தொகுப்பை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்