உலக இடதுகை பழக்கமுடையோர் தினம்!
இடது கை பழக்கம் உள்ளவர்களின் வேறுபாடுகள் மற்றும் தனித்துவத்தை அங்கீகரிக்க சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 கொண்டாடப்படுகிறது.உலகில் பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடது கை பழக்கம் உள்ளவர்களை அங்கீகரிப்பதற்காக இது ஒரு வழியாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவருகிறது. ஆகவே, இடது கைப்பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் 1976-ம் ஆண்டு முதன்முதலில் இடது கை பழக்கம் உடையவர்கள் தினத்தை அனுசரித்தவர் Left-Handers International Inc-ன் நிறுவனர் டீன் ஆர் கேம்ப்பெல்.
பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது வலது கை பயன்படுத்தும் போது இடப்பக்க மூளை வேலை செய்யும். அதுவே, இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது மூளை வேலை செய்யும். இதனால் சாதாரணமாக வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் வேளையில் நேர்த்தியுடன் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் டீன் ஆர் கேம்ப்பெல்.
உலகில் மிகவும் பிரபலமான தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் செல்வி