இன்டர்நேஷனல் கிஸ்ஸிங் டே டுடே!
“ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது ஒரு புகைப்படம்” என்று சொல்வது போல அன்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளுக்கு இணையானது ஒரு முத்தம் எனலாம். அப்படியாப்ப்பட்ட முத்தத்திற்கு ஒருநாள் கொண்டாடப்படுகிறது என்றால் அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே. காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். அன்பின் வெளிப்பாடுதான் முத்தம். ஆதி மனிதன் தொடங்கி தற்கால மனிதர்கள் வரை பொதுவாக நீடித்து வரும் ஒரு உண்ணத உணர்வு உண்டு என்றால் அது காதல் தான். அன்பு நிறைந்த காதல் உணர்வை உணர்த்துவதற்கு அழகான சாதனம் முத்தம். காதல் உணர்வை வெளிப்படுத்தும் பிரதான குறியீடாக முத்தம் உள்ளது.
இந்த முத்தமிடும் பழக்கம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகள் ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பண்டைய மத்திய கிழக்கில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே உதடுகளில் முத்தமிடுவது ஒரு பொதுவான வழக்கமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு தான் முத்தமிடுவது பரவலான செயலாக இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. அதேவேளை, சில ஆவணங்கள் 3500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் அதாவது இந்தியாவில் மனிதர்கள் முத்தமிடும் வழக்கம் பொதுவான செயலாக இருந்தது என்று கூறுகின்றன.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால், `அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா...’ என நமது கலாசாரத்திலேயே முத்தம் இருக்கிறது. அன்பின் வெளிப்பாடு', `ஆபாசம்'... இப்படி இருவேறு எல்லைகள் முத்தத்துக்கு உண்டு. உதாரணத்துக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் `ஒண்ணு கொடுக்க மறந்துட்டியே செல்லம்...’ என்று முத்தத்தைக் கேட்கும் அதே அப்பாக்கள்தான், வீட்டின் நடு ஹாலிஸ் தொலைக்காட்சியில் ஒரு முத்தக்காட்சி வந்தால் பதறிப்போய் சேனலை மாற்றுவர்!
குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்முடைய உதடு இத்தகைய பழக்கத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறது. உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் பழக்கம் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே விருப்பம் ஏற்படும் வகையில், நாம் சில பரிமாண மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளோம் என்ற பார்வையும் உள்ளது. ஏனெனில், நாம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்பு, தாய்ப்பால் ஊட்டும் காலத்திற்கு முன்பு, தாய் முதலில் உணவைத் தன் வாயால் மென்று அதைக் குழந்தைக்குத் தன் வாயாலேயே ஊட்டுவார். ப்ரீமாஸ்டிகேஷன் (premastication) என இது அழைக்கப்படுகிறது. இது, மனிதக்குரங்கு இனத்தில் நன்கு அறியப்பட்ட பழக்கமாக உள்ளது. மேலும் , நம் உடலில் உணர்திறன் அதிகம் உள்ள பகுதி உதடு. அதை நாம் ஆடையால் மூடுவது இல்லை. மானுடவியல் அறிஞர் வில்லியம் ஜான்கோவியாக் கூறுகையில், "நாம் அதிகமான ஆடைகளை அணியும்போது நாம் அதிகமாக முத்தமிடுகிறோம். குறைவான ஆடைகளை அணியும்போது குறைவாகவே முத்தமிடுகிறோம்," என்றார்.
அதே ச,மயம் காமசூத்ரா, கொக்கோகம் போன்ற காமசாஸ்திர வல்லுநர்கள் நம் இந்தியர்களே. வேதக் காலத்திலேயே முத்தம் இருந்திருக்கிறது என்பது காஜூரஹோ சிற்பங்கள் ஒன்றையொன்று முத்தமிடுவதிலேயே புரிகிற மாதிரி செதுக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர். முத்தத்தில் முப்பது வகை இருக்கிறதென்பதைக் கண்டறிந்து உலகிற்கே அன்பை ஏற்றுமதி செய்தவர்கள் நாமே. அத்தகைய பெருமை வாய்ந்த நாம்தான் பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு என்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஓர் இந்தியக் கணவன் பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன் மனைவியைக் கெட்ட வார்த்தையில் திட்டுவதற்கும், அடிப்பதற்கும் அசிங்கப்படுவதில்லை. ஆனால், அன்பை, நேசத்தை வெளிப்படுத்த இதமான ஓர் அரவணைப்போ ஒரு முத்தமோ கொடுத்து விட இப்போதும் தயக்கம் காட்டுவோரே அதிகம்.
ஒரு நிமிடத்திற்கு இருபது முறை சுவாசிப்பது சாதாரணமென்றால் முத்தமிடும் வேளையில் அது கிட்டத்தட்ட அறுபதாக உயர்ந்து நுரையீரலை நன்கு வைத்திருப்பதாக ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். முத்தமிடுதல் உடலில் பௌதீக, ரசாயன, வேதியியல் மாற்றங்களையும் நிகழ்த்துகிறது. இந்த முத்தம் குறித்த படிப்பை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பிலிமெட்டாலஜி (philematology) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர்.
முத்தம் ஒரு சிறந்த கலோரி கொல்லி. முத்தமிடும் போது நொடிக்கு மூன்று அல்லது நான்கு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு நிமிடத்தில் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அப்போது உடல் முழுவதும் உள்ள 146 தசைகள் ஒன்றிணைக்கப்படுகின்றன. முகத்தில் உள்ள 34 அகத் தசைகளும் 112 புறத்தசைகள் அடங்குகிறதாம். இதனால் முகத்தின் இளமை நீட்டிக்கப்படுகிறது. என்ன ஒன்று முத்தமிடுவது உங்கள் துணையாக இருந்தால் உங்கள் உடல்நலன் காக்கப்படும்.முத்தமிடும் வேளையில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இடம் மாறுகின்றன என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது கெட்ட பாக்டீரியாவைக் கொல்லும் ஆன்டிபாடிகளை வெளியிடுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்கசெய்து, நம் பற்கள் பாதிக்காத வண்ணம், கேவிட்டி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. 10 விநாடிகளுக்கு மேல் நீங்கள் முத்தமிடும் போது 80 மில்லியன் பாக்டீரியாக்கள் வரை மாற்றப்படுகின்றனவாம். இந்த பாக்டீரியாக்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.
முத்தமிடுகையில் உடலில் அட்ரீனலின், நோரடனினலின், டோபமைன் உள்ளிட்ட சிலபல சுரப்பிகள் தாறுமாறாகச் சுரந்து தள்ளுகின்றன. அடுத்தடுத்த நமது மூவ்களுக்கு இந்தச் சுரப்புகள் உதவுகின்றன. முத்தம் கார்டிசோல் என்ற மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை அடித்துத் துரத்துகிறது. மகிழ்ச்சியை உண்டாக்கும் ஆக்ஸிடோஸின், எண்டார்பின் ஆகியவை எக்கச்சக்கமாகச் சுரக்கும்.
முத்தம் என்பது இல்லாத குருட்டுக் காமத்தைவிட, காமமே இல்லாத ஆழ்ந்த முத்தத்திலேயே ஆர்கஸம் என்பது கைவரக்கூடியது தான். வெறும் உடல்களின் சங்கமமாக இல்லாமல் உணர்வுகளின் கூடல்களே உயிர்ப்பைத் தருகிறது.
உளவியல் ரீதியாகவும் முத்தம் என்பது நெகிழ்ச்சியைத் தரும் ஒன்று. நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது. பட்டாம்பூச்சி முத்தம், எஸ்கிமோ முத்தம், ஃப்ரீஸ் முத்தம், ஃப்ரூட் முத்தம் என்று எக்கச்சக்க முத்தங்கள் உலகெங்கும் உலாவுகின்றன.
எனி வே ஹேப்பி கிஸ்ஸிங் டே!
நிலவளம் ரெங்கராஜன்