For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் தினம்!

06:44 AM May 04, 2024 IST | admin
பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் தினம்
Advertisement

ண்டு தோறும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் நாள் தேசிய தீயணைப்பு படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை தீ விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 4ம் தேதி சர்வதேச தீயணைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. விளக்கமாகச் சொல்வதனால் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக இறந்ததை முன்னிட்டு அவர்களின் தியாகத்தைப் போற்ற உலகம் முழுவதும் கடிதங்கள் அனுப்பப்பட்டு விடுத்த கோரிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்டதே இந்த தினம்.

Advertisement

நம்மைப் படைத்த நாம் வாழ்வதற்கு ஏதுவாக பஞ்சபூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயத்தையும் படைத்தது பிரபஞ்சம். இவைகளால் மனிதர்களுக்கு நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு பெரும் ஆபத்துகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. நம்மை மீறிய இயற்கை சீற்றங்களுக்கு இயற்கையுடன் நமது அஜாக்கிரதையும் வாழும் முறையும் கூட ஒருவகையில் காரணமாகலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள். நாம் சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென ஏற்படும் மழை வெள்ளம் பயங்கர தீவிபத்து கொடும்புயல் போன்றவைகளால் பொருள் சேதங்களுடன் உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன. சமயங்களில் நம்மை நம்பி வாழும் வாயில்லா ஜீவன்களும் புதைக்குழி, சாக்கடை போன்ற விபத்துகளில் மாட்டுகின்றன. இது போன்ற ஆபத்தான நேரத்தில் நாம் உடனே அழைப்பது தீயணைப்பு நிலையத்தைதான். தகவல் பெற்றதும் எந்த நேரம் என்றாலும் உடனே பாதுகாப்பு சீருடை அணிந்த சிவப்பு நிற வாகனத்தில் மணி சப்தம் எழுப்பியபடி சீறிக்கொண்டு மீட்புப்பணிகளில் ஈடுபடுவார்கள் தீயணைப்பு வீரர்கள். அப்போது தீயில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மற்ற உயிர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைத்து துணிச்சலுடன் செயல்படும் தீயணைப்பு வீரர்கள் உண்மையில் அந்த நேரத்தில் காப்பற்றப் பட்டவர்களுக்கு தெய்வமாகவே தெரிவார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி. மளமளவென பற்றிப் எரியும் நெருப்போ, சடசடவென சரிந்து விழும் கட்டடமோ, சுனாமியோ, பூகம்பமோ எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் கரங்கள் நீளும்.

Advertisement

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணி. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் வீரர்களின் உடல்நிலை, மன நிலை பாதிக்கக்கூடும். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல இவர்கள் பணி.கோடைகாலத்தில் திடீரென்று ஏற்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பரவும் காட்டுத்தீயும், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலைத் தரும் விஷயங்கள். ஆனால் அது போன்ற நேரங்களில் என்ன செய்ய வேண்டும் எப்படி மற்றவர்களுடன் தங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை பயிற்சிகளின் மூலம் கற்றுத் தெரிந்து துணிச்சலுடன் அவற்றை கட்டுக்குள் கொண்டுவந்து களப்பணியில் ஈடுபடும் இவர்களின் தேவை என்றாவது மட்டுமே என்பதால் நம் கவனத்திற்கு வருவதில்லை இவர்கள்.

தீயணைப்பு வீரர்கள் தின சின்னங்களாக சிவப்பு மற்றும் நீல நாடாக்கள் உள்ளன. அவைகள் ஐந்து சென்டிமீட்டர் நீளமும் ஒரு சென்டிமீட்டர் அகலமும் கொண்டு இரு தனித்தனி நிறங்களாக மேலே இணைந்திருக்கும் .சிவப்பு நிறம் நெருப்பையும் நீல நிறம் தண்ணீரையும் குறிக்கிறது. பொதுவாகவே இந்த வண்ணங்கள் அவசர சேவைகளைக் குறிக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறங்கள் என்பதை அறிவோம்.

1908 ஆம் ஆண்டு சென்னையில் பதினாறு இடங்களில் தீயணைப்புப் பிரிவு பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு மெட்ராஸ் தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டது. பின்னாட்களில் தீயணைப்புத்துறையின் முக்கியத்துவம் உணரப்பட்டு 1967 ல் மாநிலத்தின் வளர்ச்சிக்கேற்ப தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு காலகட்டங்களில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையையும் மீட்பு ஊர்திகளின் எண்ணிக்கையும் உயர்த்தி தீயணைப்புத்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு செய்திகளில் சில:

காய்ந்த புல்வெளிகள்:

கோடைகாலங்களில் அதிக வெப்ப நிலை காரணமாக காய்ந்த புல்வெளிப் பகுதிகளில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டுள்ள இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்குறிப்பிட்ட பகுதிகள் தீ விபத்துக்கு ஏதுவானதாகும். ஆகையால், தங்களது வாகனங்களை இது போன்ற இடங்களில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கோடை வாசஸ்தலங்கள்:

விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளோடு கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது. அதே போன்று ஷாப்பிங் மால்கள் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அதிகமான கூட்ட நெரிசல்கள் மேற்கண்ட இரண்டு இடங்களிலும் தற்போது இருக்கும். இங்கெல்லாம் எதிர்பாராத தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உயிரிழப்புகள் நேரலாம். ஆகையால் கூட்டம் குறைவான நாட்களில், நேரங்களில் இவ்விடங்களுக்கு செல்வது நல்லது.

தீ தடுப்பு சாதனங்கள்:

சுற்றுலா தளங்களுக்கோ அல்லது ஷாப்பிங் மால்களுக்கோ செல்ல நேரிடும் போது நீங்கள் உள்ள இடங்களில் போதுமான தீத்தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவை அனைத்தும் பாதுகாப்பானதுதானா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.

இது போன்ற இடங்களில் உள்ள தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம். அவ்வாறு தெரியவில்லை என்றால் அங்கு அசம்பாவிதம் நிகழும் போது உடனடியாக அவசர வழிகளில் பாதுகாப்பான முறையில் அவ்விடத்தை விட்டு குழந்தைகளோடு அகன்று சென்று விட வேண்டும்.அதேபோன்று ஏதேனும் மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிட்டால் அங்கு இது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் உள்ளனவா என்பதையும் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்குள்ள அவசரகால வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

லிஃப்ட்டு:

ஷாப்பிங் மால்கள் மருத்துவமனைகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகியவற்றில் அவசர காலங்களின் போது லிஃப்டுகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் தீ விபத்து காலங்களில் முதல் நடவடிக்கையாக அங்குள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். அச்சமயம் லிஃப்ட்டுகள் இயங்காது. அந்த நேரத்தில் நீங்கள் உள்ளே பயணிக்க நேர்ந்தால் அதில் சிக்கி விட வாய்ப்பு ஏற்படும் . இதனால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எல்பிஜி தீ விபத்துக்கள்:

தற்போது எல்பிஜி தீ விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சரியான பராமரிப்பின்மையே. அவற்றை எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்ற புரிதல் இன்மை காரணமாக இந்த விபத்துக்கள் நிகழ்கின்றன.

ஆண்டிற்கு ஒரு முறை குழாய், அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை பரிசோதித்து பராமரிப்பது அவசியம். லீக்கேஜ்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும். அதுபோன்று லீக்கேஜ்கள் ஏற்படும் போது பயந்து ஓடாமல் அந்த சிலிண்டரை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்து விட வேண்டும்.

வீட்டிற்குள் இருப்பதை விட திறந்த வெளியில் அதற்கான ஆபத்து மிகவும் குறைவு. இதனை சரியான முறையில் அப்புறப்படுத்த முயற்சி செய்து பாருங்கள் அவ்வாறு இல்லாவிட்டால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது கேஸ் ஏஜென்சிக்கு உடனடியாக தகவல் அளித்து விடுங்கள்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement