தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்வதேச பழங்குடியினர் தினம்!

06:12 AM Aug 09, 2024 IST | admin
Advertisement

கஸ்ட் ஒன்பதாம் தேதியான இன்று சர்வதேச பழங்குடியினர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநாவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக் குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 9 -ம் தேதி சர்வதேச பழங்குடியினர் நாளாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது. உலகமெங்கும் உள்ள பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் இந்த நாள் வருடாந்தோறும் கொண்டாடப்படுகிறது

Advertisement

உலக வரலாறே பழங்குடியின அழிப்பில் தான் துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது.ஓவ்வொரு நாடு உருவான கதையும் அதன் பழங்குடிகளின் ரத்தத்தை கொண்டு எழுதப்பட்டுள்ளது. செவ்விந்தியர்களை அழித்து உருவான அமெரிக்கா, அமேசான் பழங்குடியின அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடியின அழிப்பு என தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிகுடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக்குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள், உலகளாவிய நிலையில் 370 மில்லியன் பேர் வாழ்ந்து வருகின்றனர்.உலக மக்கள் தொகையில் இது மிகவும் சொற்பம் (5 சதவிதம்) என்றாலும் 7000-க்கும் அதிகமான மொழிகள், 5000-க்கும் மேற்பட்ட பண்பாட்டு நடத்தைகளை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவில் 702 பழங்குடி இனங்கள் அடர்ந்த மலைகள், வனங்கள், சமவெளிகள், தீவுகளில் பழங்காலத் தன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலை மீதும், காடுகளுக்குள்ளும், இனக்குழுக்களாகவும் வாழ்ந்த பழங்குடியினரிடம் சென்று இனி இந்த மலையும், காடும், மண்ணும் உங்களுக்கு சொந்தமில்லை. நீங்கள் மிருகங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள், இயற்கையை காய படுத்துகிறீர்கள் அதனால் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று யாரவது சொல்லியிருந்தால் ஈட்டியை எடுத்தே சொருகியிருப்பார்கள். அல்லது சிரித்து விட்டு குடிலுக்கு திரும்பியிருப்பார்கள்.ஆனால், இன்று இதே வாசகங்களை சொல்லி பூர்வீக குடிகளை துரத்தி விட்டு அதே காடுகளை சூறையாடி கொண்டிருக்கிறது நாகரிக சமூகம். மனிதன் தோன்றிய பூர்வகுடி சமூகத்தின் எஞ்சிய மக்கள் தொகை உலகம் முழுவதும் வெறும் 370 மில்லியன் தானாம். காடுகளை விட்டு விரட்டப்படும், வலுக்கட்டாயமாக மறுகுடியமர்வு செய்யப்படும், வாழ்வாதாரத்தை தேடி சென்றும் என பழங்குடியினர் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

பழங்குடியினர் என்பவர்கள் மனித சமூகத்தின் ஆதி வடிவம், இவர்களிடம் தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் இவர்களிடம் மத அடையாளங்கள் எதுவும் இல்லை இதற்கான சான்று. இவர்கள் பெரும்பாலும் இயற்கையை வணங்கும் முறையையே கடைபிடிக்கின்றனர், உலகமெங்கும் வாழும் பெரும்பாலான பழங்குடிகளின் இறை என்பது இயற்கையே. இயற்கையின் பிள்ளைகளான இவர்களின் வாழ்வியலை சக மனிதர்களும், அரசுகளும் புரிந்துகொள்வதுதான் இவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் கிடைப்பதற்கும், இவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதற்குமான ஒரே வழி. அதிலும் பழங்குடியினரை காப்பது என்பது ஒரு பெரும் வரலாற்றை, மனித சமூகத்தின் ஆதியை காப்பதன் பொருள். பழங்குடிகளின் மொழிதான் மூத்த மொழி, அவர்களின் பண்பாடும், கலாச்சாரமும் தான் முதல் வந்தவை. இதில் பல சுத்தமாக வழக்கொழிந்து விட்டன. எஞ்சியுள்ள 700க்கும் குறைவான மொழிகள் மட்டுமே தற்போது இந்தியாவில் அழிவின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எப்படி மிருகங்கள் காடுகளின் உயிர் சுழற்சியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனவோ அப்படியே தான் பழங்குடியின மக்களும். எனவே, அவர்களை தொந்தரவு செய்யாமல், அவர்களின் வாழ்வாதரத்தை அழிக்காமல், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

நம் தமிழ்நாட்டில் தோடர், கோத்தர், இருளர், கசவர், முள்ளுக் குரும்பர்,பொட்டக் குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், பளியர், குறவர், மலைமலசர், மலைவேடர், காணிக்காரர், மலையாளி, காடர், முதுவர் என்று 36 வகையான பழங்குடியினத்தவர் வசிக்கின்றனர். நீலகிரியில் மட்டும் 7 வகையான பழங்குடியினர் உள்ளனர். சமீபத்தில் நரிக்குறவர்கள் 37-ஆவதாகப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நீலகிரியில் வாழும் தோடர்கள், இயற்கையை வர்ணித்துப் பாடுவதில் வல்லவர்கள். அவர்களின் இசை மொழி தனித்துவமானது. தோடர்களின் கைத்திறனில் உருவாக்கப்படும் ‘பூத்குளி’ என்ற ஆடைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கோத்தர் இன மக்கள் கைவினைத் தொழில்கள் மற்றும் இசைக்கருவிகளை இசைப்பதில் திறமையானவர்கள்.

இருளர்கள் பாம்புகளைக் கையாள்வதில் புகழ் பெற்றவர்கள். ஆனைமலைக் காடர்கள் யானைகளின் போக்குகளை அறிவதில் வல்லவர்கள். பழநி மலையில் வாழும் பளியர்கள் மலைத்தேன் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். கொல்லிமலை மலையாளிகள் மரபுவழி வேளாண்மையில் திறன் உடையவர்கள். பொதிகை மலையில் வாழும் காணிக்காரர்களின் மாந்திரீக மருத்துவம், பணியர்களின் ஒப்பனை போன்றவை தனித்துவமானவை. இயற்கை சார்ந்த அறிவு, பருவ நிலை மாற்றங்கள் குறித்த தெளிவு என்று ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு விதமான தனித்திறன் பெற்றுள்ளனர். பாரம்பரிய வாழ்க்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர்.

பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. பட்டா வீடு, நிலம், வனப்பொருள் சேகரிப்பு உரிமை, வனத்தை பாதுகாக்க இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை பழங்குடிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். குடியரசுத்தலைவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பார்வை தங்கள் மீது படும் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடையே உள்ளது. அந்நம்பிக்கை நனவாக விரும்புவோம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
9 AugustInternational Day of the World's Indigenous Peoplesraise awarenessrights of the world's indigenous populationபழங்குடிபழங்குடியினர் தினம்!
Advertisement
Next Article