பன்னாட்டு சைகை மொழி நாள்!
உலகெங்கிலும் சர்வதேச சைகை மொழிகளின் தினமானது ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்த சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்பது இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது. 1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது.
மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே உன்னதமானதாக அறியப்படுவது மொழியாகும். நாம் கண்டுபிடித்துப் பயன்படுத்திவரும் மொழிகளே மனிதகுலத்தை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தியும் உயர்த்தியும் விளங்கச் செய்கின்றன. தொடக்க காலங்களில் உடலசைவுகள், ஒலிகள் மற்றும் குறியீடுகள் மூலமாகவே மனிதர்கள் அவர்களுக்குள் தொடர்புகொண்டார்கள். படிப்படியாக வளர்ச்சி பெற்ற மொழிகளால் நாம் இன்று அனைத்தையும் நயம்பட அழகாக வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கும் மொழிகளே நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கருவியாகவும் உள்ளது வியப்பாக உள்ளது.
சைகை மொழி: பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் “சைகைமொழி”யும் உலகில் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. மற்ற மொழிகளைப் போலவே இதிலும் பல்வேறுவடிவங்களும் வகைகளும் உள்ளன.அவற்றுள் பன்னாட்டு சைகை மொழி,அமெரிக்க சைகை மொழி, தென்னாப்பிரிக்க சைகை மொழி, இந்திய சைகை மொழி உள்ளிட்ட இன்ன பிற நாட்டு சைகை மொழிகளும் அடங்கும்.தேவைக்கேற்ப எந்த மொழிக்கும் சைகை மொழியை உருவாக்க முடியும். சைகை மொழி பயன்படுத்துவதால் மூளை செயல்பாடுகள் மேம்படவும் வாய்ப்புள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றைஉணர்ந்த தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சைகைமொழி பள்ளிக் கலைத் திட்டத்தில் அனைவருக்குமான ஒரு பாடமாகவே இணைத்துக் கற்பிக்கப்படுகிறது.
உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுள் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.
சைகை மொழிகள் ஏன் முக்கியம்: உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் தங்கள் காது கேளாத குழந்தைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது என்று தெரியவில்லை என்று ஆராய் சில கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சைகை மொழியை பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்பதுதான். காதுகேளாமை உள்ளவர்களுக்கான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதில் சைகை மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் மொழியியல் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் சைகை மொழிகளை ஆதரிப்பதும் மேம்படுத்துவதும் முக்கியமானது.
உலக சுகாதார அமைப்பு தகவலின் படி இந்தியாவில் 6.3 கோடி பேர் காது கேளாதோர் உள்ளனர். இவ்வளவு பெரிய புள்ளி விவரங்கள் இருந்தும், கூட 120 அதிகமான இந்திய மக்கள் தொகையில் ஒரு சிலர் மட்டுமே காது கேளாதோருடன் தொடர்பு கொள்ளும் அறிவை பெற்றுள்ளனர். உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் தாய் மொழியை தவிர ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கற்றுகொள்ள பெரிதும் ஆர்வம், காட்டுகின்றனர். ஆனால் உலகின் மூத்த மொழியாக இருந்த சைகை மொழியை இன்று பலரும் மறந்து விட்டனர். மனிதர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு முதலில் சைகை மொழியை பயன்படுத்தியதாகவும் பின்னரே எழுத்து ,பேச்சு வடிவங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
தற்போது சைகை மொழிக்காக பல புதிய வடிவங்களில் செயலிகள் அறிமுகபடுத்த பட்டு வருகின்றன .மேலும் சில செய்தி நிறுவனங்கள் காது கேளாதோருக்கென பிரத்யோகமாக செய்தி வாசிப்பாளர்களை நியமன செய்துள்ளது பாரட்டதக்கதாகும். சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்