For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்!

07:32 AM Dec 03, 2023 IST | admin
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்
Advertisement

2007 வரை, இது "ஊனமுற்ற நபர்களின் சர்வதேச தினம்" என்று அழைக்கப்பட்ட நாளிது. உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களது சுயமுயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவருகின்றனர். அவர்களைச் சமூகம் கண்டுகொள்வதில்லை. மாறாக, அவர்களை ஊனமுற்றோர் என்று அலட்சியப்படுத்துவதும் இங்கே நடக்கிறது சரீர ரீதியாகவோ, புலன் ரீதியாகவோ நீண்ட கால இயலாமை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தன்மையுடையவர்கள் மாற்றுத் திறனாளிகளவர்.உலகில் 15% மக்கள் ஏதாவது ஒரு வகையான இயலாமையை அனுபவிக்கிறார்கள். இதில் 80 சதவீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வாழுகிறார்கள். இந்நிலையில் உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கிறது. அதிலும் 1981ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது. 1982ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியை பன்னாட்டு மாற்றுத் திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.பொதுவாக தன்னார்வலர்கள் இந்நாளில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

பல நாடுகள், அரசு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோரின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்றன. அவர்களின் முயற்சிகளுக்கு பல்வேறு வகைகளில் உறுதுணை புரிகின்றன. சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

ஆனால் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.. பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. மண்ணில் பிறக்கும் ஒரு குழந்தையானது எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எப்படியான தோற்றத்தோடு பிறக்கும் வேண்டும் என்பதை அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. அவ்வாறாகவே மாற்றுத்திறனாளிகள் எவரும் அப்படி விரும்பிப் பிறப்பதில்லை. உடலிலோ அல்லது உள ரீதியாகவோ ஏற்பட்ட குறைபாட்டினால் சில செயல்களை ஆற்ற முடியாதவர்களையே மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகள், கருவில் இருக்கும் போது தாய் நோய்களுக்கு ஆளாகுதல், விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணிகள் ஒருவரை மாற்றுதிறனாளி ஆக்குகின்றன.

உடல் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடும் போது சற்று இயலாத்தன்மை உள்ளவர்களையே மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாக கருதப்பட்டாலும் தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாக, மற்றவரில் தங்கி நிற்காமல் வாழ்க்கையில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த சமூகம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

முன்னரே சொன்னது போல் குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்று, உலக மாற்றுத் திறனாளிகள் தினம். தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒருசில சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பு இதோ…

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இவர் உலகறிந்த கணிதமேதை, மற்றும் இயற்பியலாளர். ஆனால், இளமையில் மூன்று வயதுவரை பேசமுடியாமல் இருந்தார். வளர்ந்த பிறகும் அவருக்கு பேசுவது கடினமாகவே இருந்தது.

போனை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பல் கற்கும் திறமையற்றவர்.

ஹெலென் கெல்லர்

இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தி மிராக்கிள் உமன்’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

ஸ்டீபன் ஹாகிங்

1942ல் பிறந்த இந்த அறிவியல் மேதை தனது 21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப் பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவரது ‘ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம், விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது. 2009ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதிலும், அசராமல் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளார் இவர்.

ஜான் நேஷ்

நோபல் பரிசு பெற்ற இவர், கணிதத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியவர். இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் எனப் பல இடங்களிலும் பயன்படுகிறது. சைசோப்ரேனியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட நேஷ், ஜாமெட்ரி, டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தீவிர மன நோயால் பாதிக்கப்பட்ட இவர், கற்பனையாக சில விஷயங்களை புனைந்து கொண்டு பயப்படுவார் என்று அவரது மனைவி கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு மிகவும் பிடித்த கணிதத்தை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. கணிதத்தோடு வாழ்ந்ததால்தான் அவர் நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் நிணைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பீத்தோவன்

இசை உலகின் பிதாமகனாய் கருதப்பட்டவர் பீத்தோவன். மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞரான இவர், மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும் பாலமாய் விளங்கியவர். இவர் முதன்முதலில் இசைக் கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது 8. தனது 26-வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீத்தோவன். ஆனால் இவர் அசரவில்லை. இசையிலேயே மூழ்கினார். இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. பைபோலார் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த இசை மேதை.

மர்லா ருன்யான்

அமெரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனையான இவர் பார்வையற்றவராவார். மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1992 பாராலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களும்,1996ம் ஆண்டு 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஹெப்டத்லான், மாரத்தான், 500 மீட்டர், 20000 மீட்டர் ஆகிய பிரிவுகளில் அமெரிக்காவின் தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான்.

நிக் வுஜுசிக்

வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. 1982ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக்கிற்கு இரண்டு கைகள், கால்கள் கிடையாது. சிறு வயதில் பல துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளான நிக், பின்னர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். ‘லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்காக உதவி செய்து வருகிறார். பட்டர்பிளை சர்க்கஸ் எனும் குறும்படத்தில் நடித்து, அதற்காக சில விருதுகளும் வென்றுள்ளார். 2005-ம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியன் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “என்னுடைய வீட்டில் நான் எப்போதும் ஷூக்கள் வைத்திருப்பேன். எனக்கு ஆச்சரியங்களின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது” என்று சிரிக்கிறார் நிக்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

மாற்றுத்திறன் கொண்ட வீரர்கள் பாராலிம்பிக் போட்டிகளில் கலக்க, இவரோ அதற்கும் ஒரு படி மேலே போனவர். மாற்றுத்திறன் கொண்டிருந்தாலும் சாதாரண சக வீரர்களோடு 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, உலகை வியப்பில் ஆழ்த்தினார். இரண்டு கால்களும் இல்லாமல் கார்பன் பிளேடு எனப்படும் செயற்கை காலின் உதவியோடு ஓடும் இவர், 2011-ம் ஆண்டு உலக தடகளப் போட்டியில் 4x400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலகப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் மாற்றுத்திறன் கொண்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பாராலிம்பிக் போட்டிகளில் இவர் 1 வெண்கலம்,1 வெள்ளி மற்றும் 6 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். 2007ம் ஆண்டின் சிறந்த மனிதராக இவரை BBC தேர்வு செய்தது.

நெல்சன் பிரபு

இவர் பிரிட்டானியாவின் கடற்படை ஹீரோ, ஆனால், ஒரு கண் பார்வை இழந்தவர். இந்த குறையோடு பிரான்ஸ் நெப்போலியனின் படையையே 1798 ல் வெற்றிபெற்றார். அது ஒரு மாற்றுத்திறனாளியின் வெற்றியாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நெல்சன் தன் குறையை பற்றி கூறுகையில்,“நான் கடலில் கப்பலை டெலஸ்கோப்பை கண்களில் வைத்து பார்ப்பேன் எனக்கு எந்த சிக்னலும் தெரிவதில்லை” என்றார்.

அருநிமா சின்ஹா

இந்திய மூவர்ணக் கொடியை உலகின் மிக உயரத்தில் பறக்கவிட்டவர் இந்த கால் இழந்த சாதனைப் பெண். 2011ல் தொடர்வண்டியிலிருந்து சில திருடர்களால் வெளியே தூக்கி வீசப்பட்டார். மற்றொரு டிராக்கில் வந்த இன்னொரு ரயில் இவரது காலை நசுக்கியதில் தனது காலை இழந்தார் அருநிமா. தனது பிரச்சனையையே தனது பலமாகக் கருதிய இவர், 2013-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நம் தேசியக் கொடியை நட்டு தேசத்திற்குப் பெருமை தேடித் தந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய் மாற்றுத் திறனாளி இவர்தான். முன்னாள் தேசிய வாலிபால் மற்றும் கால்பந்து வீராங்கனையான இவர், புற்றுநோயிலிருந்து விடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கால், தான் மிகவும் ஊக்கம் பெற்றதாகக் கூறினார்.

சுதா சந்திரன்

நம்மில் பலருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தமிழ் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். மிகச் சிறந்த பரதக் கலைஞர். இயற்கை இவரோடு விளையாடியபோது இவருக்கு வயது 17. திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இழக்க நேரிட்டது, அதன் பிறகு, ‘ஜெய்ப்பூர் ஃபூட்’ எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார். ஆனால் இவர் நடப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தேர்ந்த பரதக் கலைஞரான இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவரது வாழ்க்கையைத் தழுவி தெலுங்கில் ‘மயூரா’ ( தமிழில் 'மயூரி') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் இவர். தனது சோதனையை பெரிதுபடுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் இவர்.

இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல பலரும் தங்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர். உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே செல்ஃபி எடுக்கச் செல்லலாம்.

மொத்தத்தில் இயலாத மனிதர்களும் உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இயன்ற சகமனிதர்கள் அவர்களை பகிர்ந்து சுமப்பதுதான் இயற்கையின் கோளாறுகளை ஒரு சமூகமாக எதிர்கொள்ளும் முறை. இது ஒரு கருத்தாக இருந்தாலும் இயன்றவர்கள் கூட செய்யாத பல சாதனைகளை இந்த மாற்றுத்திறனாளிகள் செய்து அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கும் பயன்படுவது ஒரு நல்ல கைமாறு.அங்க ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று தன்னம்பிக்கை ஊட்டும் பெயர் வைத்ததிலே நம் சமூகம் உயர்ந்து நிற்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நம்மை பழிக்கவும் புறக்கணிக்கவும் செய்யும்போது, அவர்கள் மீது ஆறாத சினம்கொள்வதுதான் பாதிக்கப்பட்ட மனதின் சுபாவம். உடல் ஊனம் ஒருபுறம், சமுதாயம் பழிப்பதால் உண்டாகும் காயம் மறுபுறமுமாக தாழ்வு மனதோடு ஈனமாக வாழ்ந்து, தனக்குள் இருந்த மாற்றுத்திறன் வெளிப்படாமலே மண்மூடி போனவர்கள் ஏராளம். அந்த குற்றம் மாற்றுத்திறனாளிகளை சரியாக கையாளத் தெரியாத நம் சமூகத்தினுடையதுதான். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உதவிகள் வழங்குவது வெறும் மனிதாபிமான அடிப்படையில்தான் என்பதைவிட, சமூக தர்மப்படி அது கடமையாகவும் நினைப்பதுதான் அரசு ஆனாலும், தனியார் அமைப்புகளானாலும் நோகச்செய்யாத நோக்கமாகும்.

மரங்களில் உள்ள பழங்களை சாப்பிடும் பறவைகள் அதன் விதைகளை வேறு இடங்களில் கழிவுகள் மூலம் பரப்புவதுபோல ஒரு பணித்தொடர்புதான், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த சமுதாயம் உதவுவது, மாற்றுத்திறனாளிகளின் இயலாமைக்கு நாம் உதவினால், நம் இயலாமைக்கு கூட அவர்கள் வழி கண்டுபிடிப்பார்கள்.சிங்கம் பற்கள், நகங்கள் படைத்ததுதான். ஆனாலும், வலைக்குள் அகப்பட்டால் சிறிய எலியின் உதவி தேவைப்படுவது போலதான் இங்கு மனிதர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் உதவிகள் என்பதை நினைவில் கொள்வது நலம்

நிலவளம் ரெங்கராஜன்.

Tags :
Advertisement