For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அடிமை வணிக ஒழிப்பு தினம்!

05:30 AM Aug 23, 2024 IST | admin
அடிமை வணிக ஒழிப்பு தினம்
Advertisement

ருடா வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் பணியாளர் நாயகத்தின் சுற்றறிக்கைப் படி பல நாடுகளின் கலாசார அமைச்சர்களின் வழியுறுத்தலின் காரணமாக 1791 ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி இரவு தற்போதைய ஹெய்டியில் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுகூறும் வகையில் இந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது கடந்த 1791, ஆகஸ்ட் 22-ம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் செயின்ட் டோமிங் (Island of Saint Domingue) என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி நாடு) அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இது கலவரமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதை நினைவுகூரும் விதமாகவே இந்தத் தினம் உருவானது.

Advertisement

சர்வதேச அளவில் அடிமைத்தனம் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அடிமை வர்த்தகம் முற்றுமுழுதாக மறைந்துவிடவில்லை. அந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. சமூகத்தின் ஏழை எளிய கடைநிலை மக்கள் கூட்டத்தை அது இப்போதும் அச்சுறுத்துகிறது. நவீன உலகில் மனிதக் கடத்தல், கொத்தடிமை முறைமை, குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் அடிமை முறை நீடித்துவருகிறது. அதே நேரத்தில், அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டமும் உலகெங்கிலும் ஓயாது தொடர்கிறது. உலகம் முழுவதும் 40.3 மில்லியன் மக்கள் இன்றும் நவீன அடிமைத்தன முறைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கட்டாய உழைப்பில் 24.9 மில்லியன் மக்களும், கட்டாய திருமணத்தால் 15.4 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சர்வதேச அலவில் ஆயிரம் பேரில் 5.4 பேர் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனத்தால் 4 குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர்.கட்டாய உழைப்பில் 24.9 மில்லியன் மக்களும், தனியார் துறையினரால் 6 மில்லியன் மக்களும் சுரண்டப்படுகிறார்கள்; கட்டாய பாலியல் வன்முறையால் 4.8 மில்லியன் மக்களும், அரசு அலுவலர்களால் திணிக்கப்பட்ட கட்டாய உழைப்பில் 4 மில்லியன் மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார். 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சுழ்நிலையில், குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் - பாலியல் வணிகச் சந்தை வர்த்தகத் துறையில் 99% பேரும், பிற துறைகளில் 58% பேரும் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

அடிமை வணிகம்

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர். கல்வெட்டுகள் மூலம் அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது. புராதன எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அடிமைகள் முதலில் அரசர் குடும்பத்துக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாக கொடுக்கலாம். இந்த அடிமைகளை கொண்டு கடுமையான மற்றும் மனிதர்கள் செய்ய கூசும் வேலைகளை வாங்கி இருக்கிறார்கள்.நம் ஊர்களில் கூட செங்கல் தயாரிப்பு சூளைகள் போன்றவற்றில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக குறைந்த கூலிக்கு வேலை வாங்குவதாக அணமை ஆண்டுகளில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக, மற்ற மனிதர்களை அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் விலைக்கு வாங்கி அல்லது அடிமைப்படுத்து அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் முறையை அடிமை முறை. ஓர் அடிமையின் விலை என்பது அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, பணிவு மற்றும் அடிமைத் தனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. வசதி படைத்த கிரேக்கர்கள் பத்து, இருபது அடிமைகளை கூட வைத்திருக்கிறார்கள். கிரேக்க அடிமைகள் சொந்த பெயரை பயன்படுத்த முடியாது. ஏஜமானர்களே பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த மனிதாபிமானமற்ற அடிமை முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் என்பவர்கள் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டனர்

அடிமை வியாபாரம்

ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பியர்கள், அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமை முறை மிகவும் மோசமான முறையாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமை முறை தொடர்ந்திருக்கிறது. அடிமை முறையால் சுமார் 6 கோடி ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோடி அடிமைகள் சித்திரவதை, நோய், மன துயரத்தால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்:

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்' முதல் தலைவர்.பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

ஹெய்டி எழுச்சி

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும், கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது. இக் கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும், டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும், ஈகுவடார் 1854இலும், பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

அமெரிக்காவின் நிலை

இன்றும் அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆப்பிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது. உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆப்பிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார். சட்டப்படி ஆப்பிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆப்பிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார். அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த, ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள், தனிக் கோவில்கள், தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின. கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

உலகளாவிய அடிமைத்தன குறியீடும், இந்தியாவும்

கட்டாய உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட மூலப்பொருள்கள் மற்றும் சேவைகளை வணிகத் தளத்தில் தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டங்கள், கொள்கைகள் அல்லது நடைமுறைகளை இன்னும் இயற்றாத ஜி 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கள்ளச் சந்தையில் மனித உடல் உறுப்பு வர்த்தகம் இந்தியாவில் இன்றும் தொடர்கிறது. இந்தியாவில் மட்டும் நவீன அடிமைத்தன முறையில் சுமார் 8 மில்லியன் மக்கள் வாழ்ந்து வாழ்கிறார்கள். சர்வதேச அளவில், 40 முதல் 49.9 புள்ளிகளுடன் பி குழுவில் இந்தியா நீடித்துவருகிறது.

மீன்பிடித் தொழிலில் நவீன அடிமைத்தனத்தை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா “நடுத்தர இடர்” பட்டியலில் இடம்பிடித்தது. நவீன அடிமைத்தனம் நடைமுறையில் உள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இணையாக இங்கும் அடிமைமுறை தொடர்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையில் இந்தியாவில் 79 லட்சத்து 89ஆயிரத்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிமைகள் அதிகம் உள்ள 167 நாடுகள் பட்டியலில் (எண்ணிக்கை அடிப்படையில்) 1.83 கோடியுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகில் உள்ள மொத்த நவீன அடிமைகளில் 58 சதவீதம் பேர் (2.66 கோடி) இந்த 5 நாடுகளில் உள்ளனர்.

பிரச்னை

நாடு முழுவதும் பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் / கொத்தடிமைகள் முறையை ஒழிக்க பல மாநிலங்களில் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய அளவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்த ஆய்வில், பிகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 50% பிணைக்கப்பட்ட தொழிலாளர்கள்/ கொத்தடிமைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெற்றுள்ள போதிலும் அவை குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் வழக்குகளை பெரும்பாலும் பதிவு செய்வதில்லை என்றும் அறியமுடிகிறது.

பிணைக்கப்பட்ட தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் 1976 (பி.எல்.எஸ்.ஏ) கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டில் 463 வழக்குகளும், 2018 ஆம் ஆண்டில் 778 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பி.எல்.எஸ்.ஏ இன் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை மீதான விசாரணை சுமார் 4.9 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தொடங்குகின்றன.

பி.எல்.எஸ்.ஏ இன் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 84 % உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அதே போல, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பிணைக்கப்பட்ட தொழிலாளர் வழக்குகளை குறைந்தபட்ச ஊதிய மீறல்களாக பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட அமலாக்க முயற்சிகளின் பலவீனம் காரணமாக, 10 மாநிலங்களில் மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடிமைத்தன முறையை ஒழிக்கவும், மனித-கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கவும் ஒருங்கிணைந்த பணிகளை சட்டம், காவல்துறை மற்றும் அரசின் கண்காணிப்பு அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

தனியார் கடன் வழங்குநர்கள், முதலீட்டாளர்கள் போன்றோரின் வணிக நடைமுறைகளில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement