உலக வறுமை ஒழிப்பு நாள்!
வறுமை என்பது உணவு, உடை ,உறைவிடம் ,பாதுகாப்பான குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கல்வி கற்கும் வாய்ப்பு , பிற குடிமக்களிடம் வாழ்க்கை தரத்தை இழந்த நிலை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். பட்டினியும், வன்முறையும் வறுமைக்கு வழிவகுக்கிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற கொடிய நோய்களை விட வறுமையினால் மரணமடைந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகில் 87 கோடி மக்கள் உணவின்றி வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் "வறுமையே உனக்கு ஒரு வறுமை வராதா?" என்று எண்ணி, தனது சிறுவயதில் இருந்தே வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் போராடிய ஜோசப் ரெசின்கி என்பவரால், 1987-ம் ஆண்டு அக்டோபர் 17 அன்று முதன்முதலாக உலக வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. அதாவது 1987, அக்டோபர் 17 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள மனித உரிமைகள் மற்றும் விடுதலைக்கான சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் ஓரணியில் திரண்டனர். பசி, வறுமை, வன்முறை மற்றும் அச்சம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் திரள் அது. ஜோசப் ரெசின்ஸ்கியின் நினைவுத் தூணின் திறப்பை முன்னிட்டு கூடிய கூட்டமும் கூட.மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் மூலமாக வறுமையை ஒழிப்பை முன்னெடுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இன்டர்நேஷனல் மூவ்மெண்ட் ஏடிடி போர்த் வேர்ல்ட் அமைப்பை நிறுவியவர் அவர். சரியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1992 வாக்கில் ஐ.நா சார்பில் அதே நாளை உலகில் வறுமையை ஒழிப்பதற்கான சிறப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
120 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இதில் 45 கோடி சிறுவர்கள். 180 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் மக்களின் ஒரு நாள் வருமானம் 150 க்கும் கீழ் உள்ளது. 22 சதவீதம் மக்களின் வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது. காரணம் அரசியல் வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது போன்றவைதான். மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லை என்பது முக்கிய காரணம். உலகின் வறுமை நிலைக்காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் செய்திடல் வேண்டும் என்றெண்ணி அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்ஙேறு வேலை திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அடிப்படை அல்லது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பெறுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இருக்கின்ற நிலையே வறுமை. இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வீடு, சுகாதார வசதி, கல்வி உட்பட உயிர் வாழ அவசியமானதாக கருதப்படும் எந்தவித வசதியும் இல்லாமல் இருப்பது.இதற்கு காரணமாக பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முதன்மையானதாக இருப்பது வேலைவாய்ப்பு இல்லாமை. வாழ்வாதாராம் இல்லாத காரணத்தால் அன்றாட வாழ்வுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் மறுக்கப்படுகிறது. அதன் காரணமாக அவர்களது குடும்பம் மற்றும் குழந்தைகளின் தேவைகள் மறுக்கப்படுகிறது. அது கல்வி, சுகாதாரம், குடிநீர், உணவு போன்றவற்றை அடக்கி உள்ளது.
போர், வன்முறை, பயங்கரவாதம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது, இயற்கை பேரிடர், வறட்சி, பெருந்தொற்று நோய்களும் வறுமைக்கான மற்ற காரணிகளாக உள்ளன. அதனால் உலக நாடுகள் வறுமைக்கு ஆளாகின்றன. அதனை ஒழிக்க உலக நாடுகள், தன்னார்வ அமைப்புகள் போன்றவை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. பெரும்பாலும் உலக நாடுகளில் நிலவும் வறுமை சதவீதம் ஒரு சில வழிகள் மூலம் கணக்கிடப்படுகிறது. அதற்கென சில தியரிகளும் உள்ளன. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.90 டாலர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் பிரிவினர் அதீத வறுமையில் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில், வன்முறையையும் குற்றங்களையும் தவிர்க்க முடியாது. இந்த வறுமை வெறும் பணம் இல்லாததால் மட்டுமல்ல உழைப்பின்மை, பகிர்ந்து உண்ணும் மனப்பான்மையின்மை, பொது நலப்பான்மையின்மை, நேர்மையின்மை , உழவுத்தொழில் புறக்கணிப்பு போன்றவையும் வறுமைக்கு காரணம்.வறுமை காரணமாக மக்கள் உணவு, குடிநீர், உடை, சுகாதாரம்,வாழ்விடம், கல்வி போன்ற எதுவுமே கிடைக்காத சூழலில் வாழ்கின்றனர். எனவே வறுமை ஒழிப்பு என்பதுதான் மனித இனத்தின் பரிபூரண விடுதலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.”
என திருவள்ளூவர் எழுதிவைத்திருக்கிறார். வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலக இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும் என்பதே இந்த குறளுக்கு பொருள். அதேநேரத்தில் வறுமையிலும் மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத எத்தனையோ மனித மனங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.. ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் அதே வேளையில் வறுமை பட்டியலில் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக நைஜீரியா, காங்கோ, எத்தியோபியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வறுமையில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சேர்ந்திருப்பது வேதனைக்குரியது.யார் எப்படியே, வறுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்போடு, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம். நாம் விருப்பமான உணவை சாப்பிட ஆசைப்படும் அதே வேளையில், பலர் சாப்பிட ஏதாவது இருந்தால் போதும் என்ற படியில் நிற்கின்றனர் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நாம்மால் உதவ முடியவில்லையே என நினைக்கும் பலர், தான் வீணாக்கும் உணவையும், செல்வத்தையும் வழங்க முன்வந்தாலே பலருக்கு பசிப்பினை போகும் என்பதுதான் உண்மை.
நிலவளம் ரெங்கராஜன்