வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்!
வருடந்தோறும் ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர் களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும்.இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச்சிறுவர்களும் கொண்டாடிவருகின்றனர். சர்வதேச உள்ள வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை - சுமார் 10 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு இல்லாததால், இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.
பிறந்தக் குடும்பத்தின் மோசமான சூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை நீடிக்கிறது.வீதியோரச் சிறுவர்களுக்கு அடிப்படை உரிமை, பாதுகாப்பு, கல்வி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால் கடந்த 2011-ல் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் இந்தத் தினத்தை அங்கீகரித்து விழிப்பு உணர்வுக்கு வித்திட்டு வருகின்றன. 💝எனினும், இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை😇. இதற்காக, தொடர்ந்து உலக அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் குழந்தைகளின் நலனுக்காக இயங்கிவரும் ஹெல்ப் லைன் 1098, வீதியோரச் சிறுவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இத்தகையச் சிறுவர்களைக் கண்டால், 1098-க்கு அழைத்துத் தகவல் சொல்ல மறந்துடாதீங்க!
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் வீட்டுத் தோட்டத்தில் களை அகற்ற மறந்துவிட்டால் புதர் வளர்ந்து விடும்.
பிள்ளைகளைச் சரியாய் வளர்க்காவிட்டால் நாட்டுக்கும் இதே நிலையே ஏற்படும்.”
- லுத்தர் பர்பான்க்
இன்று நாட்டில் நடைபெறும் குற்றங்களில் சிறுவர்கள் தான் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்கிறபோது, வேதனையாக இருக்கின்றது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக, பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்களாக, அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்களாக சிறுவர்கள் இருக்கின்றார்கள்
ஒரு காலங்கள் வரை டீ கடைகள், ஹோட்டல்கள், பீடி சுற்றும் கம்பெனிகள், செங்கல் சூளைகள் என்று சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்தியவர்கள், இன்று சமூகத் தீமைகளின் ஆணிவேறாக திகழக்கூடிய போதை பொருட்கள், கள்ளச்சாரயம், மது விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுதல் போன்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த சிறுவர் சமூகம் கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றது. பொது சமூகங்களும் இவர்களை குற்றப்பரம்பரையாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர். இவர்களின் பெற்றோர்களே தங்களின் வறுமையை காரணம் காட்டி, அவர்கள் செய்யக்கூடிய தறவான தொழிலை ஆதரிக்கின்றனர். இதனால், இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் நம்மை வேதனையடையச் செய்கின்றது. இதைப்பற்றிய, காரணங்களை கண்டு அதை களையடுக்க முயற்சி செய்யாவிட்டால், எதிர்கால இளைய தலைமுறை எப்படி உருவாகும் என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் மற்றும் ஆக்ஷன் எய்டு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து நடத்திய ஒரு கணக்கெடுப்பில், மும்பை நகரில் 2013ல் இருந்த தெருக் குழந்தைகளின் எண்ணிக்கை 37,059 ஆகும். அவர்களில் படிக்காதவர்கள் 24 சதவீதத்தினரும், போதைப் பழக்கங்களில் சிக்கியவர்கள் 15 சதவீதத்தினர் என்றும் கூறியுள்ளது. இதில், ஏதோ ஒரு வகையில் நேரடியாக பாலியல் வக்கிரத்திற்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட அவமதிப்புகளைச் சந்தித்தவர்கள் அல்லது அப்படிப்பட்ட மோசமான செயல்களுக்கு மற்றவர்கள் உட்படுத்தப்பட்டதை பார்த்தவர்கள் 40 சதவிகிதத்தினரும் இருக்கின்றனர் என்று கூறியுள்ளது.
இவர்களில் 65 சதவீதத்தினர் தங்களுடைய குடும்பத்தினரோடு தெருவில் வாழ்கின்றவர்கள். 24 சதவீதத்தினர் ஏதாவது வேலை செய்து பிழைக்கிறவர்கள். 8 சதவீதத்தினர் எந்தப் பாதுகாப்புமின்றி தங்கள் சொந்த முயற்சியில் வாழ்கிறவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் சமூகவிரோதிகளிடமும், வக்கிரப்பேர் வழிகளிடமும் அகப்படுகிறவர்கள். ஆதரவற்ற பெண் குழந்தைகளில் பலர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.
பெரும்பாலான தெருக்குழந்தைகள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில், சாக்கடைகளுக்குப் பக்கத்தில், மேம்பாலங்களின் அடிப்பகுதியில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலைய நடைமேடைகளில் வசிக்கிறார்கள். பட்டினியோடு உறங்கும் குழந்தைகளில் 72.2 சதவீதத்தினர் சொல்லும் காரணம் உணவு வாங்க காசு இல்லை என்பதுதான்.
மேலும், 88.5 சதவீதத்தினர் தாங்கள் பிறந்த ஊரைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். 50.8 சதவீதத்தினர் வீடுகளில் நிலவிய சங்கடமான நிலைமைகள் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள். 15.8 சதவீதத்தினர் வேலை தேடியோ அல்லது சினிமாக் கனவுகளுடனோ வந்தவர்கள். 7.7 சதவீதத்தினர் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். 11 சதவீதத்தினர் தங்களது பெற்றோர்களால் விரட்டப்பட்டவர்கள். குடும்ப வறுமையும், அதைச்சார்ந்த நிலைமைகளும் தான் பல குழந்தைகள் அந்த தெருவுக்கு வரக்காரணமாக இருந்திருக்கின்றது என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இது மும்பை நகரத்தின் நிலையாகும். இதே ஆய்வுகளை ஒட்டுமொத்த மாநிலத்திலும் எடுத்தால், இதேப்போன்று பல தகவல்கள் வெளிவரும். இதுதான், சிறுவர்களின் இன்றைய நிலைமை என்பதை நாம் உணர வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்களும், பொது சமூகமும் குழந்தைகளை அணுகுவதில் கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் வீடுகளில் இருந்து, வீதிகளுக்கு செல்வதற்கு நாம் ஒரு காரணமாக ஆகிவிடக்கூடாது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்