பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்
பல்லுயிர் என்பது பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிக்கிறது. இதில் மிகப்பெரிய நீல திமிங்கலம் முதல் மிகச்சிறிய பாக்டீரியா வரையிலான அனைத்து உயிரினங்களும் அவற்றின் மரபணு (மூலக்கூறு) வேறுபாடுகளும் அடங்கும். பூமியில் நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்ற போதிலும் அவற்றில் இனங்கானப்பட்டிருப்பது 1.7 மில்லியன் மாத்திரமே ஆகும். இவற்றில் பாதி உயிரினங்கள் கிருமிகள். கால்நடைகளில் 4000 வகைகள் உள்ளன. 9000 வகைகளுக்கு மேலான பறவைகளும், 4000 வகைகளுக்கு மேலான ஈருடவாளிகளும், 6000 வகைகளைத் தாண்டிய ஊர்வனவும், 19000 வகைகளுக்கு மேலான கடல் வாழ் உயிரினங்களும் இருப்பதாக அறியப்படுகின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை அன்றே நம் முன்னோர்கள் உணர்ந்தால் தான், “பார்க்கும் உயிர்களனைத்துமே அந்த பரம்பொருளின் அம்சம் தான்” என்றனர்.பல்லுயிர்கள் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்து “பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு” எனும் ‘Biodiversity Conservation’ தொடர்பான விவாதங்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் தற்போது உலகம் முழுமையிலும் பரவலாக நடைபெற்று வருகின்றன. மனிதனுக்கு இந்த உலகில் வாழ உரிமையுள்ளதோ அந்தளவிற்கு மற்றைய உயிரினங்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுண்டு. ஆனால் இந்தப் பூமி நமக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே.
அதாவது மற்றைய எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டுமென நினைப்பதில்லை. பார்க்கும் இடமெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் மனிதனிடம் மட்டுமே உண்டு. ஆனால் பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனது தலையாய கடமையாகும் என்பதனை மறந்துவிடலாகாது. இந்த உலகில் ஐந்தில் இருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்கவும், பல்லுயிரிகளின் பெருக்கம் குறித்த தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது உணவுத் தேவையின் பெரும்பகுதி தாவரங்களையும் விலங்குகளையும் சார்ந்ததாகவே இருக்கிறது. தாவரங்கள், உயிரினங்களிருந்துதான் இயற்கையான மருந்துகள் கிடைக்கின்றன. அதேபோல் நாம் அணியும் ஆடைகள், வாழும் இருப்பிடம் ஆகியவற்றிலும் தாவரங்கள், விலங்குகளின் பங்கு மகத்தானதாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், இறைச்சி, கடலுணவு என உணவின் பெரும்பகுதியும் தாவரங்களாலும் விலங்குகளாலும் கிடைப்பவைதாம். ஆக, உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்காக மனிதன் உயிரினங்களையே நம்பியிருக்கிறான். அந்த வகையில் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ நம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கையாக நடைபெறும் சுற்றுச்சூழல் செயல்பாட்டினை பலகோடி ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறது.
பல்லுயிர் பெருக்கச் சமநிலையில் தேனீக்களின் பங்கு மகத்தானது. வாழை, மா, கொய்யா தொடங்கி, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு எனப் பழ வகைகள், பருத்தி, காபி, ஏலக்காய், முந்திரி போன்ற பணப் பயிர்கள், நெல், கோதுமை, சிறுதானியங்கள் என உணவு தானியங்கள், காய் கறிச் செடிகள், கொடிகள் வரை உணவுத் தாவரங்களின் விளைச்சல் பெருகிட காரணமாக இருக்கும் மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீக்கள்தாம் தேவதைகள்போல் காரணமாக இருக்கின்றன. ஆனால், கொடிய பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்தித் தேனீக்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன்? மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து அதன் வளத்தைக் கூட்டும் மண் புழுக்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லுயிர்ப் பெருக்கத்தின் சமநிலை வீழ்ச்சியடைந்தால் அறிவியலின் துணைகொண்டு அதை மீட்டெடுக்க முடியாது.
இந்த வாழிடம், உணவு, இனப்பெருக்கம் போன்ற பல்வேறு வாழ்நிலைகளில், முற்றிலும் வேறுபடுகின்ற இக்கோடிக் கணக்கான உயிரினங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவையாக, ஒன்றையொன்று சார்ந்தவையாக வாழ்ந்து வருகின்றன. அதேநேரம், ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட சுற்றுச்சூழலைத் தேர்ந்துகொள்கின்றன.எடுத்துக்காட்டாக வெப்பமண்டலக் காடுகளில் பல்வகை மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் ஆகியவற்றுடன், பூச்சியினங்கள், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர்கள், காளன்கள், மீன்கள், ஊர்வன, பல்வகைப் பறவைகள், பாலூட்டிகள் வசிக்கின்றன. இந்த உயிர்கள் அழியாமல் இருக்கும்போதுதான் அக்காடுகள் உருவாக்கி வைத்திருக்கும் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ பாதுகாக்கப்படும்.
மாறாக, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களாலும் மனித இனம் செய்துவரும் ‘இயற்கை அழிப்பு’ உள்ளிட்ட தவறுகளாலும் பல உயிரினங்களின் வாழ்விடமும் அவற்றின் உணவுச் சங்கிலியும் சீர்குலையும்போது அவை அழிந்துபோகின்றன. அதன் விளைவாக அப்பகுதியில் நிலைத்திருந்த ‘பல்லுயிர்ப் பெருக்க’ச் சமநிலை மீது மரண அடி விழுகிறது. அது மனித வாழ்க்கையின் மீது விழும் மரண அடிதான். இப்படிச் சமலநிலைச் சீர்குலைவதை அத்தனை எளிதாக மீண்டும் அதன் இயல்புக்கு மாற்றியமைக்க முடியாது. அதாவது மரம் என்பது பூமிக்கு பாரமான உயிரினம் இல்லை. அது தன்னுடைய ஒவ்வொரு உறுப்பாலும், இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள். பறவைகளும், விலங்குகளும் அதேபோலத்தான். இந்த கருப்பொருட்களை பாது காக்காவிட்டால் தற்போது பூமியில் அதிகரித்து வரும் கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் தலைப்பிரட்டைகள் காணாமல் போகும்.
மலேரியா, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் முன்பை விட வேகமாக பரவி மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய ஏரிகளிலும், குளங்களிலும் பறவைகள் தென்பட்டால்தான் அந்த நீர் பயன்படுத்துவதற்கு உகந்தது. ஆனால், மனிதர்களால் கழிவும், குப்பையுமாகக் காணப்படும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் பறவைகள் எப்படி வரும். இயற்கை சிலந்தியைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும் மொத்த இடத்திலும் அதிர்வு ஏற்படும். எனவே, உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித் தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் தினமே இது