சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்!
சமூகம் சீரழியப் பெரும் காரணமாக இருக்கும் போதைப்பொருள்களை ஒழிக்கவும் உலக அளவில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் அதன் தீமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐநா சபை அறிவித்ததன் பெயரில் 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று கல்வியறிவும் சுதந்திரமும் அறிவியல் முன்னேற்றமும் பெருகி விட்டாலும் போதை எனும் அரக்கனிடம் மாட்டிக்கொண்டு இந்த சமூகம் பாழாகி வருவதை அனைவரும் அறிவோம் . போதையினால் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் முதல் பொது வெளியில் நிகழும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடும்ப வன்முறைகள் வரை எத்தனை எத்தனை சம்பவங்கள்? ஆம்.. மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும். அநீதிகளும், கொடுமைகளும், அராஜகங்களும், வன்முறையும் நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஒருவர் போதைக்கு அடிமையானால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல. அவரது குடும்பமும்தான். முக்கியமாக அவர்களின் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி அவர்களும் போதையின் வழியில் செல்லும் வாய்ப்புகள் அதிகம். போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் தகப்பனின் பிள்ளைகளை பரிதாபமாக பார்க்கும் உலகம் அவர்களின் நியாயமான உணர்வுகளை முடக்கியும் விடுகிறது. பொருளாதாரம் கல்வி வேலை போன்றவற்றில் பின்னடைவை சந்திக்க வைக்கிறது. போதைப் பொருள்களைஅதிகம் பயன்படுத்துவதால் கொள்ளை வன்முறை கொலை, தற்கொலை போன்ற பல குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலக்குறைவு மற்றும் மனநலபாதிப்புகளும் அதிகமாகி குடும்பக் கட்டமைபுகள் உடைந்து வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள் ஆவர். மது, சிகரெட் ஆகியவை முதலில் வழிகெடுத்து பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழிகின்றது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்றப் பாதைக்கே போதை தடையாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் கொடிகெட்டிப் பறக்கிறது.
இதில் படித்த இளைஞர்கள், செல்வந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டும் காணாத அதிகாரிகளும் இருக்கின்றார்கள். இதனால் ஊழலும் இலஞ்சமும் பெருகுகிறது. போதைப்பொருள்களைக் கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்து வோரின் குடும்பமும் பாதிக்கப்படுவதோடு பொருளாதார நெருக்கடியால் பரிதாபமான நிலையில் தற்கொலையும் நடந்து கொண்டிருக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராகப் பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. பொது இடங்களில் புகைத்தல், மது அருந்துதல் தென்படும் போது அதற்கான சரியான நடவடிக்கையை உடனுக்குடனே அரசு கண்டிப்பாக எடுத்தல் அவசியம். தலைக்கவசம் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிவித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கை போதைப் பொருள்களாலும் உயிருக்கும் சமூகத்திற்கும் ஆபத்து என்பதைக் கண்டித்தும், தண்டித்தும் அவர்கள் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். திரைப் படங்களில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் இப்போதை பழக்கம் குறித்து கவனமாக இருந்து அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வுடன்அன்பையும் தந்து நம் பிள்ளைகளை போதையிலிருந்து பாதுக்காக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது எனலாம்.