For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டு நடன நாள்!

06:06 AM Apr 29, 2024 IST | admin
பன்னாட்டு நடன நாள்
Advertisement

டனம் என்பது நம் உடலின் ஆன்மாவுக்குள் ஒளிந்திருக்கும் மொழி என்றார் புகழ்பெற்ற மேற்கத்திய நடனக்கலைஞர் மார்த்தா கிராஹாம். அந்த ஆன்மாவின் மொழி, வார்த்தைகளாக வருவதில்லை. அவை உணர்ச்சிகளாக, கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக, பெரும் சோகத்தின் அனலாகப் பீறிட்டு எழுபவை. அப்படியொரு பேரூற்றுதான் நடனம். இப்போதும் நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.

Advertisement

உலகம் முழுவதும் பல்வேறு நடனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டுக்கான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை உலகத்தில் பலரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவ்வகையான பல நடனங்கள் புகழை பெற்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புகழை பெற்று உலகம் முழுவதும் அதனை பின்பற்றுவதால் இனி எந்த ஒரு நடனமும் ஒரு தனிப்பட்ட இடத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு நடனத்தின் ஸ்டைல்களையும் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளும் வசதியும் இப்போது வந்து விட்டது. ஆனாலும் மேற்கத்திய நடனம், தமது ஆக்டோபஸ் விரல்களால் உலகம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாவற்றின் மீதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற மேற்கத்திய மோகம் நடனக்கலைக்கும் வந்திருக்கிறது என்பதில் ஆச்சரியமேதும் இல்லை.

Advertisement

பாலே, ஜாஸ், பெல்லி, டேப், ராஸ், சல்சா, லயன், சபீன், ஹிப் ஹாப், புயோ, அர்த்தா என உலகம் முழுவதும் ஆடப்படும் நடனக் கலைகளின் வகைகள் மட்டும் ஆயிரக்கணக்கைத் தாண்டும். இதில், பெல்லி, சல்சா (லத்தீன்) உள்ளிட்ட சில நடன வகைகள், உடல் எடையைக் குறைப்பதற்காக, சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்களோ?

இந்தியாவை எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் பரதம், கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டம், கேரளாவில், கதகளி, மோகினி ஆட்டம், ஆந்திராவில் குச்சுப்பிடி, ஒடிசாவில் ஒடிசி, மணிப்பூரில் மணிப்புரி, பஞ்சாப்பில் பாங்ரா என நீளும் நாட்டுப்புற நடனங்களின் வகைகள் அதிகம். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்குப் பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள குச்சிலாபுரம் என்ற குக்கிராமத்தில் இந்த நடனம் பிறந்து வளர்ந்ததால் நடனத்துக்குக் குச்சிப்புடி என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். பெரும்பாலும் புராண, இதிகாக் கதைகள்தான் பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக இந்த வகை நடனத்தில் ஆடப்படும். கதாபாத்திரங்களில் பெண் வேடத்தையும் ஆண்களே ஏற்றுக்கொண்டு ஆடுவர். அதுவும் தனி நபரே அனைத்துக் கதாபாத்திரங்களையும் அபிநயம் பிடிப்பது என்பது வழக்கத்தில் வந்துவிட்டது.

இந்த நாட்டிய நாடகம் மூலம் எந்த ஒரு கருத்தினையும் தெளிவாக எடுத்துக் கூற முடியும். ஆந்திர மாநிலத்தின் மன்னரான நரச நாயக்கர் விதித்த வரியினால் மக்கள் அவதியுற்றனர். இதனை மன்னனிடம் எடுத்துச் சொல்ல ஆஸ்தான கலைஞர்கள் குச்சிப்புடி நடனத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அந்த நாட்டியத்தின் மூலம் மக்கள் குறைகளை மன்னர் உணர்ந்தார். வரியில் மாற்றங்களைச் செய்து மக்களை மகிழ்வித்தார் என்று ஒரு செய்தி உள்ளது. இந்த நாட்டியத்துக்குப் பக்க வாத்தியக் கருவிகளாக ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை, வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வாய்ப்பாட்டும், நட்டுவனார் ஜதியும் பிரதானமாகப் பயன்படுத்தப்படும். பாடலில் உள்ள சொற்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்ற விதத்தில் அபிநயம் பிடிக்கப்படும். இன்று இந்தியா முழுவதும் இந்த நடனம் மக்களால் ரசிக்கப்படுகிறது.

உணர்ச்சிக் கூறுகள் பாவனைகளாக வெளிவரும் நடனக் கலை, நமக்கானது. அது, பரதம். தொன்மையான அந்த நடனத்தில் மட்டுமே, நவரசங்களையும் பாவனைகளால் வெளிப்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது. வேறு எந்த நடனக்கலையிலும் இது இல்லை. மேல்தட்டு வர்க்கத்துக்கான கலையாக பரதநாட்டியம் இங்கு மாறியிருக்க, நமது நாட்டுப்புற நடனக்கலைகளான, அதாவது உழைக்கும் மக்களின் நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கும்மி போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளும் மேற்கத்திய நடனங்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் நமது நாட்டுப்புற நடனமும் நடனக் கலைஞர்களும் வேறு வேலைகளுக்குச் செல்ல நேர்ந்துவிட்டது. எங்கோ ஒரு கிராமத்தில் மிச்ச சொச்ச பேர் அந்தக் கலையை இன்னும் பிடித்துக் கொண்டு கொஞ்சமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நடனமாடுவது உற்சாகத்தை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் அது ஒருவகையான உடற்பயிற்சியாகவும் உள்ளது. வயது, பாலினம் அல்லது வேறு எந்த காரணிகளையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இது பொருந்தும். தினமும் நடனமாடுவதில் இருக்கும் நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வோமா?

மகிழ்ச்சியை தருகிறது :

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அது போலவே மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் உடல்நலப் பிரச்சினைகளில் பாதியை உங்களிடமிருந்து விலக்கி வைக்கிறது. நடனம் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு தரும். மேலும் நடமாடுவதால் உங்கள் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

இதய ஆரோக்கியம் மேம்படும் :

உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நடனம். ஏனெனில் இது உங்கள் இதயத் துடிப்பை சீராக ஆக்குகிறது மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை குறைக்கிறது. நீங்கள் நடமாடும் போது உங்கள் உடல் ஆக்டிவாக இருக்கும் இதனால் மூச்சுத் திணறல் போன்ற உணர்வு இருக்காது.

எலும்புகளை வலுப்படுத்தும் :

நடனமாடுவதால் எலும்புகள் வலுப்படும். நடமாடும் போது கை, கால்கள் உட்பட உடல் உறுப்புகள் வேலை செய்வதால் எலும்புகள் மற்றும் தசைகளில் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இதனால் மூட்டுகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் மூட்டு வலி குறையும்.

மூளைக்கு சிறந்த உடற்பயிற்சி :

நடனம் ஆடுவதால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. இதனால் வயதாகும் காலத்தில் தோன்றும் ஞாபகமறதி பிரச்னை தவிர்க்கப்படும். நடமாடுவதால் வெவ்வேறு நகர்வுகள் மற்றும் வடிவங்களைக் கற்றல் மற்றும் நினைவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உங்கள் கவனத்தை அதிகரிக்க முடியும்.

மன அழுத்தத்தை குறைக்கிறது :

நடனம் ஒரு அற்புதமான மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவம் எனலாம். நீங்கள் மன அழுத்தமாகவோ, பதட்டமாகவோ அல்லது மனச்சோர்வடைந்தவராகவோ உணர்ந்தால் தனி அறையில் நடமாடுங்கள். இது உங்கள் மனஅழுத்தத்தை குறைத்து உங்கள் மனநிலையை அமைதிப்படுத்தும். நீங்கள் நடனமாடுவது எப்படி என்று கூட தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை, நீங்கள் விரும்பியபடி உங்கள் உடலை அசைத்து ஆடலாம். இதனால் உங்கள் மன அழுத்தம் குறைந்து அமைதி திரும்பும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

நடனம் ஆடுவதால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது. ஒரு சராசரி நபர் நடனமாட ஒரு மணி நேரத்திற்கு 300-800 கலோரிகள் எரித்துவிடும். இது உங்கள் உடல் எடை மற்றும் நடனம் ஆடும் நேரத்தை பொறுத்து மாறுபடும். ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் எடை இழப்புக்கு உதவுவது போலவே நடனமும் உதவுகிறது. பால்ரூம் நடனம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக ஈடுபாட்டை உள்ளடக்கியது, இது கொழுப்பின் அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தினமும் நடனமாடலாம்.

இந்த நேரத்தில், உலக நடன தினம் கடைப்பிடிக்கப்படுதற்கான நோக்கத்தை ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும். நடனத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே அதிகரிக்கச் செய்தல். ஒவ்வொரு நாடும் நடனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுதல், நடனக் கல்வியை தொடங்கத் தூண்டுதல் போன்றவைதான் இந்த தினம் கடைபி டிக்கப்படுவதற்கான நோக்கம். ஆனால் வேர்களை வெட்டிவிட்டு செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மாதிரி, நமது கிராமப்புற நடனக்கலைகளையும் கலைஞர்களையும் மொத்தமாகக் கைகழுவிவிட்டு, நடன தினம் பற்றிப் பேசுவதாலும் எழுதுவதாலும் என்ன கிடைத்துவிடப் போகிறது? என்ற எண்ணமும் இந்நாளில் எழாமல் இல்லை

பாலே கலைஞரின் பிறந்த தினம்

நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

வாத்தீ.அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement