பங்குச் சந்தையில் ஆர்வமா?
பங்குச் சந்தையில் நடமாடுவோர் அறிந்திருக்க வேண்டியவை என்று இவற்றைச் சொல்லலாம் :
1. சந்தையில் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களின் பங்குகள் உள்ளன. அவற்றில் நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட பங்கினைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? அதற்கான விடை உங்களுக்குத் தெரியவேண்டும்.
2. சந்தையில் நிலவும் இன்றைய விலை இதற்கு முன்பாக நுழைந்தவர்களுக்குக் கூறுப்படுகின்ற விடை / விளைவு ஆகும். உங்கள் நுழைவிற்கான விடை எதிர்காலத்தில்தான் கிடைக்கும்.
3. ஒரு பங்கினை வாங்குவதற்கு எந்தக் கட்டாயமும் வற்புறுத்தலும் இல்லை. ஆனால், நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க உங்களின் தற்பொறுப்பே ஆகும்.
4. சந்தை ஏறியே ஆகவேண்டுமென்று எவ்வுறுதியுமில்லை. சந்தை இறங்கியே ஆகவேண்டுமென்றும் உறுதியில்லை. சந்தை நகர்வுகட்குப் பின்னே நாடுகளின், நிறுவனங்களின் பொருளியல் இயக்கம் உள்ளது என்பதை அறியுங்கள்.
5. நீங்கள் ஒரு மகிழுந்து நிறுவனத்தின் பங்கினை வாங்கினால் அந்தப் பங்கு எதிர்காலத்தில் நீங்கள் மகிழுந்து வாங்குமளவுக்கு வளருமா என்பது தெரியாது. ஆனால், மகிழுந்துக்காகும் எரிபொருள் செலவினைச் சிறிதேனும் ஈடுகட்டுமளவு வளர்வதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
6. சில்லறை முதலீட்டாளர்கள் என்ற வகையில் உங்களிடமுள்ள சிறுமுதலுக்குத்தான் பங்குச் சந்தை நல்ல வாய்ப்பாகும். பெருமுதல் உள்ளதெனில் இதனினும் நல்வாய்ப்புகள் எவை என்று தேடுங்கள். தற்காலத்தில் வேறு வாய்ப்புகள் அருகிப்போய்விட்டன என்பதால்தான் எல்லாரும் சந்தையை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.
7. பங்குச் சந்தையில் வெற்றி பெறுவது என்பது அந்தச் சந்தையும் நாடும் அந்நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதோடு நெருங்கிய தொடர்புடையது.
8. நம்மிடமுள்ள பழைய பொருட்சேர்ப்பு முறைகள் ஏன் கவர்ச்சியிழந்துவிட்டன என்றால் இவ்வுலகம் வளரும் விரைசலுக்கேற்ப அவற்றின் வளர்ச்சி இல்லையோ என்னும் ஐயம்தான்.
9. எந்தப் பங்கும் மலிவாகக் கிடைக்காதுதான். ஆனால், அதனை மலிவாக்கும் அத்தனைக் கூறுகளும் சந்தையில் செயல்படும். எந்தப் பங்கும் எளிதில் உயராதுதான். ஆனால், அதனை உயர்த்துவதற்கான அத்தனைக் கூறுகளோடும் அந்த நிறுவனம் இயங்கவேண்டும்.
10. உங்களிடம் காசு இருக்கிறது என்பதனால் சந்தையில் வெற்றி பெற்றுவிட முடியாது. பொறுமையும் காத்திருப்பும்தான் சந்தையில் வெற்றி பெறுகின்றன. முதலிடுவதற்கும் உரிய காலம்வரும்வரை காத்திருந்தும் உரிய விலையை எதிர்பார்த்திருந்தும் நுழையவேண்டும். வெளியேறுவதற்கும் இது பொருந்தும்.