For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அறவுணர்வற்ற சௌகிதார்கள்!

01:44 PM Dec 22, 2023 IST | admin
அறவுணர்வற்ற சௌகிதார்கள்
New Delhi, Dec 21 (ANI): Opposition MPs including Adhir Ranjan Chowdhury, Mallikarjun Kharge, Mahua Maji and others march to Vijay Chowk from Parliament to protest against the suspension of 143 MPs for the winter session, in New Delhi on Thursday. (ANI Photo/Rahul Singh)
Advertisement

நேற்று வரை 143 எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். சஸ்பெண்ட்டுக்குக் காரணம் இவர்கள் அவை நடைபெற விடாமல் தடுத்தார்கள் என்பதுதான். அப்படித் தடுத்ததற்குக் காரணம் இவர்கள் வைத்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்து வருவதுதான். அது என்ன கோரிக்கை: நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளித்து கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதுதான்.உள்நாட்டுப் பாதுகாப்பு அமித் ஷா வசம்தான் இருக்கிறது. நாடாளுமன்றப் பாதுகாப்பும் அமித் ஷாவின் கீழ்தான் இயங்குகிறது. எனவே அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விஷயம்தான். நியாயமாகப் பார்த்தால் இவர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவர் நாடாளுமன்றத்தில் வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். அப்படித் தவறியதால்தான் எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். அதுதான் அவர்கள் வேலையும் கூட.

Advertisement

அரசின் அணுகுமுறைகளைக் கேள்வி கேட்பதும், விமர்சிப்பதுமே எதிர்க் கட்சிகளின் கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக எதிர்க் கட்சியாக இருந்த போதும் இதைத்தான் செய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு அவைக் கூட்டம் விடாமல் கலாட்டா செய்து தடுத்துக் கொண்டிருந்தார்கள். தொட்டதற்கெல்லாம் மன்மோகன் பதில் சொல்ல வேண்டும் என்று கேரோ செய்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அது பொறுப்பான அணுகுமுறை என்று தோன்றிய விஷயம் இன்று எல்லை மீறலாக அவர்களுக்கே தோன்றுகிறது.

Advertisement

அதை விடுவோம். ஆனால் இந்த நேரத்தில் அமித் ஷா என்ன செய்திருக்க வேண்டும்? மோடி என்ன செய்திருக்க வேண்டும்? இவர்கள் வெறும் பிரதமர், உள்துறை அமைச்சர் மட்டுமல்ல. இவர்கள் தங்களைத் தாங்களே 'சௌகிதார்' என்று பெருமையாக அழைத்துக் கொண்டவர்கள். இந்தியாவின் வாட்ச்மேன் என்று சுயபெருமை பாராட்டியவர்கள். 56, 66 என்று மார்பு அளவை வெளியே சொல்லி பீற்றிக்கொண்டவர்கள். வெளிநாட்டில் இருந்து ஊடுருவாளர்கள் உள்ளே வரக் கூடாது என்று கவலைப்பட்டு சிஏஏ கொண்டு வந்தவர்கள். உள்நாட்டில் இருக்கும் சொந்த தேசத்து மக்களையே'கறையான்கள்' என்று அழைத்தவர்கள். பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகளில் மன்மோகன் சிங் தெளிவாக பதில் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டி அவருக்கு மௌன மோகன் சிங் என்று பட்டம் கட்டியவர்கள். அப்படிப்பட்ட உத்தமர்கள் இவர்கள். உறுதி கொண்டவர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களின் பாதுகாப்புக் கோட்டையை நாலு சின்னப் பசங்கள் எட்டி உதைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். எனில் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்திருக்க வேண்டும்?

பிரதமர் மோடி தேசத்தின் முன்பு தொலைக்காட்சியில் பேசி இருக்க வேண்டும். ஒரு ஊடக சந்திப்பு நடத்தி இருக்க வேண்டும். அமித் ஷா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும். தாக்குதல் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்கிறோம் என்ற உறுதிமொழியை வழங்கி இருக்க வேண்டும். அதற்கான வேலைகள் முடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன செய்கிறார்கள்? மோடி, அமித் ஷா இருவருமே கனத்த அமைதி காக்கிறார்கள். கேள்வி கேட்கும் எம்பிக்களை சப்ஜாடாக சஸ்பெண்ட் செய்கிறார்கள். தன் ஆட்சிக் காலத்தில் ஒன்பது ஊடக சந்திப்புகளை நிகழ்த்திய மன்மோகன் சிங்குக்கு மோடி கொடுத்த பட்டம் மௌன மோகன் சிங். ஆனால் ஒரே ஒரு ஊடக சந்திப்பைக் கூட நிகழ்த்த திராணியற்ற மோடி தனக்குத் தானே அளித்துக் கொண்ட பட்டம் "56 இன்ச்".

ஒப்பீட்டளவில் நம் அபார்ட்மெண்ட் சௌகிதார்கள் பொறுப்புணர்வு மிக்கவர்கள். வீட்டில் ஒரு தோசைக் கரண்டி காணாமல் போனால் கூட நம் முன்னே நின்று கூனிக் குறுகி மன்னிப்புக் கேட்டு விளக்கம் அளிப்பார்கள். மோடியோ அமித் ஷாவோ நம் அபார்ட்மெண்டுக்கு சௌகிதார்களாக இருந்திருந்தால் தோசைக் கரண்டி காணாமல் போன அடுத்த நாள் நம்மையும் ரெஸிடெண்ட் அசோசியேஷன் செகரெட்டரியையும் அபார்ட்மெண்டை விட்டுத் துரத்தி விடுவார்கள்.

அறவுணர்வற்ற அந்த சௌகிதார்களுக்கு வலிமையான கண்டனங்கள்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement