நான்கே மாதமான பேரனை கோடீஸ்வரனாக்கிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!
நம் நாட்டின் ஐ.டி திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லி நிரூபித்தவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. 77 வயதான அவர் தற்போது தனது 4 மாத பேரனுக்கு 15 லட்சம் பங்குகள், அதாவது இவரின் மொத்த பங்கு இருப்பில் 0.04% பங்குகளை (ரூ.240 கோடி மதிப்பு) பரிசளித்து இன்றைய செய்திகளில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளார்
இந்த நாராயண மூர்த்தி முன்னொரு காலத்தில் வேலை தேடி விப்ரோ நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பத்தை தேர்வு செய்யாமல் விப்ரோ நிராகரித்து விட்டது.. அதனால் சோர்ந்து போகாமல் 1981-ஆம் ஆண்டில், அவருடைய ஆறு நண்பர்களுடன் சேர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தன்னிடம் உள்ள 10,000 ரூபாய் பணத்தை முதலீட்டுக்காக அவருக்கு கொடுத்தார்.இன்று ஐ.டி துறையில் விப்ரோவின் மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒன்றாக இன்ஃபோசிஸ் நிறுவனம் வளர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.6.65 லட்சம் கோடி ஆகும். அதே சமயம் அவரை வேலைக்கு வேண்டாம் என்று நிராகரித்த விப்ரோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடியாக உள்ளது.
நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட அவரது இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாகச் சிறப்பாகவே இயங்கி வருகிறது. நாராயண மூர்த்தி ஓய்வு பெற்றாலும், அவரும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பிடித்து வருவார்கள். குறிப்பாக, நாராயண மூர்த்தி கூறும் ஒவ்வொரு கருத்துகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு "இளைஞர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்" என்று நாராயண மூர்த்தி கூறி கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் இல்லாமல், நாராயண மூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தி எகானமி கிளாஸில் பயணித்து இருந்ததும், இவர்களது மகள், பேரக்குழந்தைகள் அனைவரும் சாதாரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு சாலையோர கடைகளில் புத்தகங்களை வாங்குவதும் இணையத்தில் டிரண்டானது.
இப்படி இன்றைக்கும் எடுத்துக்காட்டாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார். இரண்டு கால்களில் நடக்கக் கற்பதற்கு முன்பே, நான்கு மாத குழந்தையான ஏக்கிரா ரோஹன் மூர்த்தி கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
கடந்த நவம்பர் மாதத்தில் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாத்தா, பாட்டியானார்கள். இதன் மூலம், நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்திக்கு மூன்றாவது பேரக்குழந்தைகள் ஆவார். ஏற்கனவே, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில்தான், தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி. இதன் மூலம், ஏக்ரகா ரோஹன் முர்த்தி 15,00,000 பங்குகள் அல்லது 0.04 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அதே நேரத்தில், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்