For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியர்களிடம் வெளிநாட்டு வேலை மோகம் குறைகிறது:நம் நாட்டிலே பணிபுரிய ஆர்வம் அதிகரிப்பு!-சர்வே ரிசல்ட்

09:37 PM May 04, 2024 IST | admin
இந்தியர்களிடம் வெளிநாட்டு வேலை மோகம் குறைகிறது நம் நாட்டிலே பணிபுரிய ஆர்வம் அதிகரிப்பு  சர்வே ரிசல்ட்
Advertisement

ம் இந்தியாவின் வாழ்க்கை நிலை 80களிலிருந்து ஒப்பிடும்போது எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் வெளிநாட்டு வாழ்க்கையின் சிறப்புக்கள் இன்னும் உயர்ந்தவையாகவே இருப்பதால் அங்கே செல்லும் இந்தியர்கள் அங்கேயே இருந்து விடும் முடிவை எடுக்கின்றனர்.ஐந்து நாட்கள் வேலை, இரண்டு நாள் விடுமுறை, எது வேண்டுமானாலும் கிடைக்கும் வசதி, ஆளுக்கொரு கார் வைத்துக்கொண்டு சர் சர் என்று போய்வரும் சவுகரியம், குளிர் காலத்தில் ஹீட்டிங், வெயில் காலத்தில் ஏசி, எல்லா ஊரிலும் கோவில் வருடத்திற்கு பல முறைகள் தமிழ் டிராமாக்கள் ,கர்நாடக சங்கீதம், சினிமா நடிகர்களின் நிகழ்ச்சிகள், சரவணாபவன் சங்கீதா ஓட்டல்களில் கிடைக்கும் இட்லி வடை பொங்கல்…எல்லாம் அங்கு கிடைக்கும்போது எதற்கு இந்தியா வரவேண்டும் என்னும் கேள்வி அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் அந்த காலமாகி விட்டது.

Advertisement

ஆம்.. வெளிநாட்டு வேலை மோகம் இந்தியர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணிபுரிய விரும்பும் இடமாகவும் இந்தியா உள்ளது. இந்த தகவலை உலக அளவில் பிரபல ஆலோசனை நிறுவனமான (பிசிஜி) பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.

Advertisement

கொரோனா காலத்துக்கு முன் வரை வெளிநாடுகளில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் விரைவாக முன்னேறி விடலாம் என்று இளைஞர்களுக்கு எண்ணம் வந்த காலம் உண்டு. சிறந்த வேலைவாய்ப்பு, அதிக ஊதியம், ஆகிய காரணங்களுக்காக ,வளர்ந்த மேற்கத்திய நாடுகள் மட்டும் இல்லாமல் துபாய், சிங்கப்பூர், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் இந்திய இளைஞர்கள் வேலைக்காக செல்வதுண்டு . இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. உலக அளவில் பிரபலமான ஆலோசனை நிறுவனமான (பிசிஜி) பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ‘சர்வதேச மொபிலிட்டி ட்ரெண்ட்ஸ்’ ஆய்வு ஒன்றை நடத்தியது.அந்த ஆய்வு அறிக்கையின்படி, வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 78 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2023 ஆம் ஆண்டில் 54 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிய வந்துளளது.வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் இருந்தபோதிலும், 59 சதவீத இந்தியர்கள் தாய் நாட்டில் மீதான உணர்ச்சிப் பூர்வமான பற்றுதல் காரணமாக புலம் பெயர விரும்பவில்லை என்று கூறி உள்ளனர். இது மற்ற நாடுகளை விட சராசரியான 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

பணி புரிய விருப்பமான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் வேலை செய்ய விரும்புவோரின் விருப்பமான நகரங்களாக பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன. இந்த ஆய்வறிக்கை வெளியிட தொடங்கிய ஆண்டில் இருந்து,முதன்முறையாக பணிபுரிய விரும்பும் 100 நகரங்களின் வரிசைக்குள் அகமதாபாத் இடம் பெற்றுள்ளது. வேலைக்கு எந்த நாட்டுக்கு செல்வீர்கள் என்ற கேள்விக்கு ,இந்தியாவை வேலை வாய்ப்புக்கு தகுந்த நாடாக வெளிநாட்டினர் பலர் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியா மற்றும் கென்யாவைச் சேர்ந்தவர்களும் இந்தியாவையே தங்கள் விருப்பமாக சொல்லி இருக்கிறார்கள்.கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவின் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி , உலக அளவிலும் ஆற்றல்மிக்க தொழில் வாய்ப்புகளைத் தேடும் வல்லுநர்களுக்கு இந்தியா ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

இது மட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய தகவலையும் இந்த ஆய்வு வெளி கொண்டு வந்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் nri 13.6 மில்லியன் என்றும் , இந்திய வம்சாவளியினர் 18.68 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பங்களிப்பில் இந்தியா முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது என்று பிசிஜி ஆய்வறிக்கை கூறி உள்ளது. 188 நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேரிடம் கேட்டு , பெற்ற பதில்கள் மூலம் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலருக்கு வெளிநாடு வேலைக்கு செல்வது ஒரு கனவாகவே இருக்கிறது. தொழில் திறமை உடைய வல்லுநர்களில் 23 சதவீதத்தினர் பிற நாடுகளில் தீவிரமாக வேலை தேடுகிறார்கள். வெளிநாட்டு வேலை என்பதற்கு காரணமாக பொருளாதார வளர்ச்சியே முதல் காரணமாக பலருக்கு இருக்கிறது . இரண்டாவது காரணமாக தொழில் திறமை வளர்ச்சி மற்றும் வேலை அனுபவம் இருக்கிறது என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. என் பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை என்பது ஒரு காலத்தில் பெருமையாக இருந்தது . இப்போது , என் தாய் நாட்டில் வேலை பார்ப்பது பெருமை என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement