இனப் படுகொலையில் இந்திய ஆயுதங்கள்!
சுப்ரீம் கோர்ட்டில் இஸ்ரேலுக்கு இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை வழங்கல் கூடாது, பாலஸ்தீன மக்கள் மீது காஸா பகுதியில் இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் நிகழக் காரணமாக உள்ளதாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சமூக செயற்பாட்டாளர் ஹாரிஸ் மந்தர், கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா உட்பட்ட சனநாயக ஆர்வலர் குழு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டம் 51 C பிரிவின் படி சர்வதேசச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அதானியின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனமும் இஸ்ரேலின் எல்பிட் என்ற நிறுவனமும் இணைந்து ஹைதராபாத்தில் Adani Elbit Unmanned Aerial Vehicles Complex (UAV) என்ற பெயரில் ஆளில்லா குண்டு வீசும் விமானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் பெயர் Hermes 900 Medium Altitude Long Endurance UAV. இது 36 மணி நேரம் பறக்கும், மேலும் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறந்து குண்டு வீசும். மேலும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரேலின் குண்டு வீச்சில் இந்திய ஆயுதங்கள் பெருமளவு உள்ளதாகக் கூறியது. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கிளம்பிய கப்பல் மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் இஸ்ரேலின் போர் தளவாடங்கள் உள்ளதால் அதனை தங்கள் நாட்டின் துறைமுகப் பகுதியில், எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஸ்பெயின் அரசு மறுத்து விட்டது. முதல் கப்பலில் 20 டன் ராக்கெட் எஞ்சின்கள்,12.5 ராக்கெட் மற்றும் அதை பற்றைக்குள் வெடி சார்ஜர் ,1500 கிலோ வெடிபொருட்கள், 740 கிலோ பீரங்கிக்குத் தேவையான வெடி பொருட்கள் இருந்ததாகவும், இரண்டாவது கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருந்ததாகவும் அந்த நாடு தெரிவித்தது. இவை முழுவதும் இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இஸ்ரேல் சில மாதங்களுக்கு முன் காஸா கரைப் பகுதியில் உள்ள நசிரத் அகதிகள் முகாமின் மீது நிகழ்ந்த வான் வழித் தாக்குதலில் சிதறிய வெடி பொருட்களில் இந்தியத் தயாரிப்பு என்ற முத்திரை இருந்துள்ளது. இந்திய அரசு அரபு நாடுகளுக்கு அப்பால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்த முதல் நாடு. இஸ்ரேல் உருவான ஓராண்டில் அதனை அங்கீகரித்தபோதும் அதனுடன் எந்தத் தூதரக உறவும் மேற்கொள்ளவில்லை. மேலும் 1990 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் செய்து கொண்ட ஒஸ்லா சமாதான உடன்படிக்கைக்குப் பிறகே இஸ்ரேலுடன் உறவு ஏற்பட்டது. அணி சேராக் கொள்கையினை உலகுக்கு வழிகாட்டிய தலைவர்கள் இருந்த நாடு இது. சமாதானம், அமைதி, சார்புத் தன்மையற்ற ஒரு வெளி உறவுக் கொள்கை இந்தியாவின் கொள்கையாக இருந்துள்ளது.
ஆனால் 2017 ல் மோடி இஸ்ரேலுக்குச் சென்றது முதல் இஸ்ரேலின் மீதான நேர்மையற்ற கூட்டு வளர்ந்தது. அதன் உளவுச் செயலிகளான பெகாசஸ் உள்ளிட்டவை சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளை உளவு பார்க்கவும், பொய் வழக்குப் போடவும் சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்பட்டன.சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கையை உறுதி செய்து உள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிராகப் போராடும் சூழலில், இங்கிலாந்து போன்ற நாடுகள் கூட இஸ்ரேலுக்கு ஆயுதம் தருவதைத் தடை போடும் அளவுக்கு மக்கள் போராடும் நிலையில், அதானி உள்ளிட்ட ஆயுத வியாபாரிகளால் இந்தியா தலைகுனிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த 1960 ஆம் ஆண்டில் இந்தியா ஒப்புக்கொண்ட சர்வதேச ஜெனீவா பன்னாட்டு உடன்படிக்கைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் ஜெனீவா மாநாட்டுச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் இன அழிப்பு, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இந்தியர்கள் துணை போகக் கூடாது. ஆனால், இந்தச் சட்டத்தினை மோடியின் அரசு தனது தவறான பன்னாட்டுக் கொள்கையினால் முழுவதும் மீறி உள்ளது. இது அப்பட்டமான சட்ட மீறல். சுப்ரீம் கோர்ட் கடந்த காலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் மனித உரிமை, சுதந்திரம் பாதுகாக்கக் குரல் கொடுக்கும் வரலாற்றுக் கடமையைச் செய்யாமல் அரசுக்குச் சாதகமான நிலைபாட்டில் நின்றது. ரொகின்ஹா முஸ்லிம் அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட பல வழக்குகளைக் கூற முடியும். உச்ச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்பும் இந்திய அரசின் கீழ் உள்ள தனியார் ஆயுத வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த அளவுக்குத் தீவிரமாக எடுக்கும் என்பது விவாதத்திற்கு உரியது.
ஆனால் அறமில்லா வணிகம் பாவச்செயல் எனக் கூறிய காந்தியின் குரல் இங்கே நினைவு கொள்ளப்பட வேண்டும். நமது மக்கள் பன்னாட்டு அமைதிக்கும், சமாதானம், மனித உரிமைகள் காக்கவும் குரல் எழுப்ப வேண்டும். லாபத்திற்காக இரத்தம் குடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராகச் சிறிதேனும் குரல் எழுப்புங்கள்.