இந்தியன் இரண்டு - விமர்சனம்!
ஒரே வார்த்தையில் சொல்வதானால் சில பலர் கழுவி ஊற்றும் அளவுக்கு மோசமில்லை.. நமக்கு இந்தப் படம் பிடித்து இருந்தது. படத்தில் பிரச்சனை மற்றும் குறைபாடுகள் இருக்கிறது தான் ஆனால் அதைத் தாண்டி என்னிடம் இன்னும் சரக்கு தீரவில்லை என ஷங்கர் அழுத்தமாகவாவும், உறுத்தும்படியும் சொல்லியிருக்கிறார். முதல் நாள் ரிவ்யூவர்களுக்கு ஒர் கவுட் ஆகவில்லை, ஆனால் படம் கண்டிப்பாக ஆடியன்ஸ்களுக்கு திருப்தியையே தரும்.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் டைரக்டராக திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர். அதுக்கு முக்கிய காரணம் இந்தியன் படம் தான் அதன் இரண்டாம் பாகம் எனும்போது, அதில் எத்தனை விமர்சனங்கள் வருமென்று தெரிந்தே தான் முயற்சித்திருக்கிறார். அவர் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கிறது ஆனால் அதைத்தாண்டி அவர் ஒரு அசத்தலான கமர்ஷியல் டைரக்டர். கிட்டதட்ட மாடர்ன் மெகா கமர்ஷியல் படங்களின் ப்ளூ பிரிண்ட் அவர் உருவாக்கியது தான், சமீபத்தில் வந்த ஜவான் பார்த்தாலே தெரியும். அவர் கடைசியாக கமர்ஷியலில் முழுமையாக செய்த படம் சிவாஜி தான். ஐ, 2.0 எல்லாம் தாங்க முடியவில்லை. இதில் முழுமையாக அவரின் சாயல் மீண்டும் தெரிந்தது சந்தோசமாக இருந்தது.
உண்மையிலேயே ஒரு அசத்தலான கதை எழுதியிருக்கிறார்கள் ஆனால் அதை இரண்டு பாகமாக உடைத்ததில் தான் பிரச்சனை. ஷங்கர் உண்மையில் கருத்து சொல்லும் சீரியஸ் டைரக்டர் எல்லாம் இல்லை, இந்தியனில் கூட மனிஷா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் என அனைத்தையும் கலவையாக கச்சிதமாக இணைத்து விடுவார். அவரின் எல்லாப்படங்களிலும் இது இருக்கும். கதை, சென்டிமெண்ட், காமெடி, பிரமாண்டம் எல்லாமே ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். அவர் காட்சியை உருவாக்கும் விதம் எப்பவும் எனக்கு பிரமிப்பு தரும். அது விளம்பரப்பட பாணி. உலகளவில் நிறைய விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஒரு சின்ன உணர்வுக்கு ஒரு நிமிடத்தில் எத்தனை பிரமாண்டம், எத்தனை ஷாட், எத்தனை கட்ஸ் என பிரமிப்பு தரும். ஒரு நல்ல விளம்பரம் பாருங்கள் அதில் எமோஷன் இருக்கும், சொல்ல வந்த கருத்து நறுக்கு தெரித்தாற் போல இருக்கும். அதே நேரம் பிரமாண்டம் இருக்கும். ஷங்கர் ஒவ்வொரு காட்சியையும் அப்படித்தான் அணுகுவார். இடையில் அவரிடம் கதை இல்லாத தவிப்பு இருந்தது ஆனால் இதில் நல்ல கதையோடுதான் வந்திருக்கிறார்.
இதன் முன்னரே சொன்ன ஒரே பிரச்சனை இரண்டு பாகம் மூன்று பாகம் ஆனது தான். இன்றைய நாட்டின் பிரச்சனைகளில் இளைஞர்கள் கொதிக்கும்போது, இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார். நாட்டை திருத்த இளைஞர்களுக்கு அவர் ஒரு அறிவுரை தருகிறார். இன்னொரு பக்கம் அவரும் அவர் வேலையைச் செய்கிறார். ஆனால் அந்த இந்தியனை மக்களே வெறுத்தால் என்னவாகும்? அது தான் இந்தியன் 2.
படத்தின் கேமரா அத்தனை அற்புதம் .ஆனால் அது தான் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கேவலமாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதிலும் தாத்தா கமலின் ஹேர் ஸ்டைல் , பிராஸ்தடிக்ஸ் என எல்லாமே படு செயற்கையாக எக்ஸ்போஸ் ஆகி படத்தின் குவாலிட்டியை குறைத்து விட்டது!
மியூசிக் ஆமாம் அனிருத், ஏ ஆரின் பக்கம் கூட வரவில்லை.
சுஜாதாவின் இழப்பும், வசனங்களில் தெரிகிறது ஒரு வசனம் கூட அழுத்தமாக இல்லை.
இதில் ஒரிஜினல் மிஸ்ஸிங் என்றால் மனிஷா, கவுண்டமணி செந்தில் எபிஸோடு தான். கவர்ச்சியும் இல்லை பெரிய அளவில் காமெடியும் இல்லை. இது தான் ஒரிஜினலான மைனஸ். சமீபத்தில் ஹரி கூட இதே தவறைச் செய்தார்.
ஒரு கமர்ஷியல் படத்திற்கு நார்மல் ஆடியன்ஸுக்கு படத்தில் இது இண்டும் இருப்பது மிக முக்கியம். இதை இரண்டு பாகமாக்கியதால் இன்டர்வெல்லை க்ளைமாக்ஸ் ஆக்கிவிட்டார்கள். அதனால் இண்டர்வெல் ஒர்க் ஆகவில்லை. படத்தின் க்ளைமாக்ஸ் எந்தப் பதட்டமும் இன்றி முடிகிறது. ஆனால் இத்தனை பிரச்சனைகள் தாண்டி ஷங்கர் தன் மேக்கிங்கில் 3 மணி நேர படத்தை சலிக்காமல் பார்க்க வைப்பதில் ஜெயித்து விட்டார்.
3 வது படத்திற்கான லீட் மிரமாண்டமாக இருந்தது. அதே சமயம் ஷங்கர் இந்த ஊழல் பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்து படம் செய்தால் அது தெறியாக இருக்கும் என்பது அடிசினல் சேதி.
மொத்ததில் இந்த இந்தியன் இரண்டு - பக்கா பேமிலி படமே
மார்க் 3.5/5