உலகக் கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் இந்திய அணி வீரர்கள்!
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று திறந்த வெளி பேருந்தில் உலகக் கோப்பையுடன் சுமார் 1 கி.மீ தூரம் தொலைவில் உள்ள வான்கடே மைதானத்திற்கு சென்ற கோலாகல நிகழ்வு நாளை மறுபடியும் நடக்க இருக்கிறது.
நடப்பாண்டில் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஒரு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும், தற்போது வரை இந்த கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.அதன்படி இந்திய அணி வீரர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூகத்தளத்தில் உலகக் கோப்பையுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் 3 நாட்களாக அமெரிக்காவில் முடங்கி இருந்தனர்
தற்போது, அங்கு இயல்பு வாழக்கை தொடங்கியவுடன் இந்தியா அணி இன்று பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘லாங் ரேஞ்ச்’ ஏர் இந்தியா விமானம் மூலம் நாளை இந்தியா திரும்பிவிடுவார்கள். இதற்கிடையில், இந்தியாவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாளை பிரம்மாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதனால் நாளை காலை 6 மணி அளவில் டெல்லியில் தரை இறங்கிய பின் இந்திய அணி முதலில் 9.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு செல்லவுள்ளனர். அதன்பின் பிரதமர் மோடியுடன் காலை உணவை முடித்து விட்டு, அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் மும்பை ஏர்போர்ட் வந்தடைவார்கள். அங்கிருந்து திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையுடன் சுமார் 1 கி.மீ தூரம் தொலைவில் உள்ள வான்கடே மைதானத்திற்கு செல்லவுள்ளனர்.
வான்கடே மைதானத்தில் வைத்து இந்தியா அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற உள்ளது. அங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷாவிடம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெற்றி பெற்ற டி20 உலகக்கோப்பையை அவரிடம் சமர்பிப்பார். அதன் பிறகு நாளை மாலை பொழுதில் இந்திய அணி விடைபெறவுள்ளனர்.
இது குறித்து பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா எக்ஸ் தள பதிவில், “இந்தியா அணியின் உலகக் கோப்பை வெற்றியை கௌரவிக்கும் வகையில் வெற்றி ஊர்வலத்தில் எங்களுடன் சேருங்கள்! ஜூலை 4 ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் மெரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வாருங்கள்.மேலும், எங்களுடன் கொண்டாடுங்கள். இந்த நாளை மறக்காமல் குறித்து வைத்து கொள்ளுங்கள்” என பதிவிட்டிருந்தார். தற்போது, இந்த நிகழ்வுக்கான தீவிர வேலையில் பிசிசிஐ இருந்து வருகிறது