இந்தியத் தேயிலைகளில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் என்பதால் விளைந்த பிரச்னை!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் தேயிலைகள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் இந்திய தேயிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதாக திருப்பி அனுப்பும் நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இலங்கையிலிருந்து தேயிலைகள் பெருவாரியாக சப்ளை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இலங்கை பெரும் பொருளாதார தட்டுப்பாட்டில் சிக்கி வருகிறது. இதனால் அந்நாடு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் தேயிலை மார்க்கெட்டை உலக அளவில் இந்தியா பிடிக்கலாம் என்று கருதி தேயிலை ஏற்றுமதியை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து தேயிலைச் சரக்குகள் நிராகரிக்கப்படுவதால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ல் இந்தியா 195.90 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது. எனவே இந்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய தேயிலை வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது காமன்வெல்த் ஆஃப் இன்டிபெண்டன்ட் ஸ்டேட்ஸ் (சிஐஎஸ்) நாடுகள் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிகளவில் தேயிலை ஏற்றுமதியை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய தேயிலைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாக பல நாடுகளில் இந்திய தேயிலையை திருப்பி அனுப்பி வருகின்றன. அதுமட்டுமின்றி உள்ளூரிலும் பல நிறுவனங்கள் தேயிலைகளை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்தியத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (ஐடிஇஏ) தலைவர் அன்ஷுமான் கனோரியா, "நாட்டில் விற்கப்படும் அனைத்து தேயிலை பொருட்களும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது பல நாடுகள் தேயிலைக்கான கடுமையான நுழைவு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத் தரநிலைகளை பின்பற்றுகின்றன, அவை எஃப்எஸ்எஸ்ஏஐ விதிகளை விட மிகவும் கடுமையானவை.
சட்டத்திற்கு இணங்குவதற்குப் பதிலாக, எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும் என்று பல உற்பத்தியாளர்கள் அரசை வற்புறுத்துகின்றனர். தேயிலை பானம் ஒரு ஆரோக்கிய பானமாக கருதப்படுவதால் விதிகளைத் தளர்த்துவது தவறான விளைவுகளை உருவாக்கும். எனவே உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்" அவர் தெரிவித்தார்.