தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்திய செய்தித் தாள் தினம்!

06:39 AM Jan 29, 2024 IST | admin
Advertisement

கொஞ்சம் மிகை என்றாலும் ஜனநாயகத்தின் நான்காவது தூண்தான் பத்திரிகை .உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம்....!மக்களை உயர்த்தி செல்லும் பெருமை பத்திரிகைகளுக்கு உண்டு. இன்னும் பத்திரிக்கைகள் உலக மக்களை ஒரே இனமாகக் கருதும் ஒருமைப்பாடு வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன.உலகியல‌றிவு, மொழி பயிற்சி, வாழ்வாங்கு வாழும் வழி, நகை, உடை. உவகை, வீரம், சோகம் போன்ற பல‌வகை உள்ளச் சுவைகளும் படிப்பதால் அமைகின்றது. தொழில் வளரவும், செழிக்கவும், வாணிகம் தழைக்கவும், பொருளாதாரம் செழிக்கவும் செய்தித்தாள்கள் உதவுகின்றன. கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்ற பழமொழிக்கிணங்க, மாணவர்கள் செய்தித்தாள்களைப் பிறர் சொல்வதற்காக அல்லாமல் தமக்காகவே தினமும் ஆர்வத்துடன் கற்க வேண்டும். முக்கிய அரசியல், விஞ்ஞான, இலக்கிய விளக்கங்களையும் புள்ளி விவரங்களையும் குறிப்பெடுத்து, தம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.அன்றாட அரசியல் செய்திகளே வரலாறாகப் பிற்காலத்தில் அமைபவை.

Advertisement

உள்ளங்கையில் அடங்கிவிட்ட செல்லிடபேசியின் தொழில்நுட்ப வளர்ச்சி என்னதான் இன்று வளர்ந்து, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன், லேப்டாப் , கம்ப்யூட்டர் என தொழில்நுட்பக் கருவிகள் வாயிலாகவும் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பார்க்க முடியும் என்றாலும், காலைப் பொழுதில் செய்தித்தாள் படிப்பதுடன் அன்றைய நாளைத் தொடங்குவது என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் பழக்கமாக இருக்கிறது.வீட்டில் அமர்ந்து சூடான காபி குடித்துக் கொண்டு நாளேடுகளைப் புரட்டுவதும், தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு தேநீர் குடித்துக்கொண்டு நாளேட்டைப் பார்த்து உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை பேசுவதும் நாளேடுகள் இருந்தால் மட்டுமே முடியும். மக்களின் மனதோடு நெருக்கமானது, அலாதி சுகம் தரக்கூடியது செய்தித்தாள்.

Advertisement

செய்தித்தாள்கள் படிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பழக்கமானது மாணவர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன. செய்தித்தாள் படிப்பதன் பரவலான நன்மைகளை பல மாணவர்கள் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் பல விஷயங்களை இழக்கிறார்கள். செய்தித்தாளை தொடர்ச்சியாக படிப்பதால் பொது அறிவு சம்பந்தமாக மட்டுமின்றி பாட ரீதியாகவும் எத்தகைய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை மாணவர் சமூகம் உணர்ந்து கொண்டால், அதிக நன்மைகளைப் பெற முடியும்.

*🗞️ தமது படிப்பு, பள்ளி, குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய குறுகிய வட்டத்தை தாண்டி, தாம் வாழும் உலகம் எவ்வளவு பெரியது, எவ்வளவு அம்🗞️சங்களை உள்ளடக்கியது என்ற ஒரு பார்வையை செய்தித்தாள்களின் மூலமே மாணவர்கள் எளிதில் பெற முடியும்.

*🗞️செய்தித்தாள்களை தினமும் படிப்பதன் மூலம் படிக்கும் வேகமும், படிக்கும்போது புரிந்துகொள்ளும் வேகமும் அதிகரிக்கிறது. இந்த இரண்டு திறன்களும் படிப்பிற்கு பெரிதும் பயன்படுகின்றன.

*🗞️ ஒரு செய்தித்தாளில் பலதுறை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் கருத்துக்களும், அத்துறை சம்பந்தமான தகவல்களும் இடம்பெறுகின்றன. எனவே அவற்றை படிக்கும்போது மாணவர்களின் அறிவு விரிவடைந்து, பாடங்களை படிக்கையில் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

*🗞️ தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் தேர்வு சம்பந்தமான மாதிரி வினாத்தாள்கள் வருகின்றன. அது மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கிறது. மேலும் மொழியறிவை வளர்த்துக்கொள்வது சம்பந்தமாய் பல ஆலோசனைகள் மற்றும் உதவிக் குறிப்புகள் இடம்பெறுகின்றன.

*🗞️செய்தித்தாளில் பூகம்பம் அல்லது வெள்ளம் அல்லது கலவரம் போன்ற ஏதேனும் ஒன்றைப் பற்றி நீங்கள் ஆர்வத்துடன் படிக்கையில், தேர்வின்போது அதுசம்பந்தமாக கட்டுரைகள் கேட்கப்படும்போது உங்களுக்கு யோசித்து எழுத எளிதாக இருக்கும்.

*🗞️ ஆங்கில செய்தித்தாள்களை படிக்கும்போது ஏராளமான புதிய வார்த்தைகள் நமக்கு அறிமுகமாகும். வழக்கமாக படிக்கும்போது அவை நம் நினைவிலும் நின்றுவிடும். இதன்மூலம் நமது மொழியறிவு வளர்வதோடு, பாடம் சம்பந்தமாகவும் நன்மை ஏற்படும்.

*🗞️ மேலும் செய்தித்தாள்களில் புதிர் விளையாட்டுக்களும் இடம் பெறுகின்றன. இதன்மூலம் மூளைக்கு நல்ல வேலை கிடைக்கிறது. இதைத்தவிர எந்தெந்த விளையாட்டு எப்போது ஒளிபரப்பாகும், திரைப்படங்கள் மற்றும் இதர பொழுபோக்கு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் கொடுக்கப்பட்டிருப்பதால், உங்களின் ஓய்வு நேரத்தையும் திட்டமிட முடியும்.

*🗞️ செய்தித்தாளை தினமும் வீட்டில்தான் வாங்கி படிக்க வேண்டும் என்பதில்லை. பள்ளி, கல்லூரி நூலகத்திலோ அல்லது ஊரில் இருக்கும் அரசு மற்றும் தனியார் நூலகங்களிலோ, வாசக சாலைகளிலோ செய்தித்தாள்கள் கிடைக்கும். நம் வசதிக்கு தக்கபடி அமைத்துக் கொள்ளலாம்.

📰செய்தித் தாள் தோன்றிய வரலாறு

ஐரோப்பாவில் உள்ள‌ ரோம் நகரத்தில், ஜான்கூடன்பர்க் என்பவர் கி.பி.1450இல் அச்சடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அவர் முதல்முதலில் விவிலிய நூல் அச்சிட்டார்.

பின்னர் செய்தித்தாள் வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப செய்திகளை வெளியிடுவதிலும், செய்தித் தாள்களின் அமைப்பிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன.

செய்திகள் வெளியிடப்படும் கால அளவைக் கொண்டு செய்தித் தாள்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

📰செய்தித்தாள் வகைகள்

இன்று நம்நாட்டில் பல மொழிகளிலும் தினத்தாள், வார இதழ்கள், வாரம் இருமுறை, இரு வார இதழ் என மிகப்பல செய்தித்தாள் உள்ளன.

தினத்தாள் தினமும் ஆங்காங்கு நிகழும் செய்திகளைத் தரும். பிற இதழ்கள், கதைகள், கட்டுரைகள், நாடகம் முதலிவற்றை ஏந்திவரும்

ம் நாட்டைப் பொறுத்தவரை அதாவது இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவர் 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்டார். இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர்ச் செய்திகள் பத்திரிகையில் வெளி வந்தது. அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹாஸ்டிங்க்ஸின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்கும் நாளிதழாகச் செயல்பட்டது.அதனால் இந்தியாவில் கருத்து சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் வலியுறுத்திய முன்னோடியாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் வெளியான ஹிக்கிஸ் இதழ்கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும் அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனால்தான் இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடுகிறோம். ஏறக்குறைய 244 ஆண்டுகளில் இந்தியாவில் நாளேடுகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஏராளமான பரிணாம மாற்றங்களும் அடைந்திருக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாளேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகவல் சாதனங்களைப் பொறுத்தவரையில் சர்வதேச முழுக்க உள்ளடக்கத்தில் ஓரளவு வெளிநாடுகளையே பின்பற்றி வந்தாலும், அதன் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சற்று கூர்மையாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. சுதந்திரத் தீயை மூட்டுவனவாக பத்திரிகைகள் இருந்தன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பல பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. ஏராளமானவை அரசின் நெருக்கடியால் நின்று போயின. ஆயினும், அவை மூட்டிய தீ மக்களிடம் போய்ச் சேர்ந்து பெருந்தீயாக விஸ்வரூபம் எடுத்தது.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் இருண்ட ஆட்சியின்போது, ராஜாராம் மோகன் ராய் நடத்திய சம்பத் கவுமுதி, லோகமான்ய திலகர் நடத்திய கேசரி, மகாத்மா காந்தி நடத்தி வந்த நவஜீவன் ஆகிய பத்திரிகைகள் மக்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தன. தங்கள் வாழ்க்கை வசதிகளைத் துறந்து பல பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் வாழ்ந்தனர். அவர்கள் தங்களது செய்தித்தாள்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுதந்திரப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய பல செய்தித்தாள்கள் இந்திய மொழிகளில்தான் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால், ஆங்கிலேய அரசாங்கம் இந்திய மொழி இதழ்களைப் பார்த்துதான் அச்சமடைந்தன. அதனால், இந்திய பிராந்திய மொழிச் செய்தித்தாள்களின் கழுத்தை நெரிப்பதற்காக மொழிச் செய்தித்தாள்கள் சட்டம் 1878-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்த முன்னோடிகளின் உயர்ந்த லட்சியங்களின் காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பல செய்தித்தாள்கள் இன்றும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் செய்தித்தாள்கள் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் மொழியில் செய்திகளை வெளியிடுகின்றன. எளிய மக்களுக்கும்,படித்தவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், வலிமையில்லாத பிரிவினருக்கும் தேவையான தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன. செய்தித்தாள்களின் வலிமை, தாக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. மூலை முடுக்குகளுக்கும் அரசின் கொள்கைகள், குறிக்கோள்களை எடுத்துச் செல்லும் தூதர்களாகவும் அவை இருக்கின்றன. அதைப் போல மக்களின் எண்ணங்கள், உணர்வுகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் இருக்கின்றன.

மனிதகுலத்தின் அறிவுத் தேடல் மிகப் பழமையானது. அந்தத் தாகத்தைத் தணிக்க பத்திரிகைத் துறைதான் துணை புரிகிறது. இன்று, செய்தித்தாள்கள் வெறும் செய்திகளை மட்டும் தந்துவிடுவதில்லை. நமது சிந்தனையைச் செதுக்கி, உலகைப் பார்ப்பதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகின்றன. ஊடகம் என்பது சமுதாயத்தை மாற்றும் வழியாகும். அதனால்தான், ஊடகத்தை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறுகிறோம். பேனாவின் ஆற்றல், ஈட்டிமுனையைக் காட்டிலும் வலிமையானது எனக் கூறுகிறார்கள். பத்திரிகைகளுக்கு ஏராளமான சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சுதந்திரம் மக்கள் நலனுக்காக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் எழுத்துரிமையோடு எதை எழுதவேண்டும் என்று முடிவெடுப்பதும் துல்லியம் இல்லாததையோ எழுதுவதும் சுதந்திரம் ஆகாது. மகாத்மா காந்தி, “பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது. அது சக்தி மிக்கது என்பது நிச்சயம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்” எனத் தெரிவித்துள்ளார்

ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றபோதும், அவை மக்களுக்குச் சேவையாற்றுகின்றன. அமைதியாக சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான தூண்டுகோலாகச் செயல்படுகின்றன.ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, நீதித்துறையை போல பத்திரிகைகும் சமூகக் கடமை இருக்கிறது. அதன் செயல்பாடும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் பல செய்தித்தாள்கள் மூச்சுத் திணறி செத்து விட்டன. சுருங்கி வரும் வாசகர்கள், விளம்பர வருவாய், உயரும் செலவுகள், நம்பகத்தன்மை குறைதல் மற்றும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்குதல் ஆகியவை அவர்களின் நிதி ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி நாளிதழ் வாழ்க்கை சிதைந்து விட்டதென்னவோ நிஜம்!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
fake newsFifth EstateFourth EstateFreedom of the pressIndian Newspaper DayInfotainment Media biasnewsnewspaperPink-slime journalismPropaganda modelPublic relationsYellow journalism
Advertisement
Next Article