தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

எனர்கா கேமரிமேஜ் விழாவின் இந்திய ஜூரி -ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

06:20 PM Nov 08, 2023 IST | admin
Advertisement

விருதுகள், பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்கள் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கு புதிதல்ல. இவற்றுக்கு மகுடம் வைக்கும் அளவிலும் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் சர்வதேச புகழ் பெற்ற ஆஸ்கருக்கு இணையான எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31வது பதிப்பில் ரவி கே சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார்.

Advertisement

நாற்பது வருடங்களாக ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள ரவி கே சந்திரன், 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பிளாக்', 'மை நேம் இஸ் கான்' உள்ளிட்ட பல மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். “கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள திரை கலைஞர்களால் ஆஸ்கருக்கு சமமாக கருதப்படும் இந்த விழா, விருது பெறும் திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், ஆஸ்கரை போல் இல்லாமல், குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளை வழங்கி திரைப்பட உருவாக்க கலை மீது தனக்குள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது.

Advertisement

'மை நேம் இஸ் கான்' படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2010ம் ஆண்டில் எனர்கா கேமரிமேஜால் கோல்டன் ஃபிராக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஆவார். இந்த வருடத்தின் எனர்கா கேமரிமேஜ் விழா நவம்பர் 11 முதல் 18 வரை போலந்தில் உள்ள டோரன் நகரில் நடைபெறுகிறது. டேரன் அரோனோஃப்ஸ்கி, ரோஜர் டீக்கின்ஸ் மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற பல கலைஞர்கள் இவ்விழாவுக்கு இதற்கு முன்னர் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ எஸ் சி என்று அழைக்கப்படும் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி கே சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார். கேமரிமேஜ் ஜூரியாக மூத்த கலைஞர் ரவி கே சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை என்று கருதப்படுகிறது. மேலும், இந்தியத் திரைப்படத் துறை சர்வதேச அரங்கில் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு படியாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்றுள்ள ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
cinematographerEnergaCamerimage FestivaljuryPolandRavi K ChandranThug Life
Advertisement
Next Article