2023 மற்றும் 2024 இல் இந்திய பொருளாதாரத்தின் போக்கு & அலசல்!
முடிய இருக்கும் 2023இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி செயல்திறனை விவரிக்க, உலகளவில் பயன்படுத்தப்படும் சொல் ‘விரிதிறன்’ (Resilience) என்பதாகும். 2022-23 நிதியாண்டில், இந்தியா 7.2%வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் நேரத்தில், இந்தியா தன் வளர்ச்சி விகிதத்தை அமெரிக்கா, சீனாவைவிட 2% அதிகமும் ஜி20 நாடுகளின் வளர்ச்சியடைந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களின் (Emerging market economies) சராசரியைவிட இரு மடங்கு அதிகமாகவும் பதிவுசெய்ததே இந்தியாவின் வளர்ச்சியை ‘விரிதிறன்’ என்று குறிப்பிடுவதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டின் (2023-24) இரண்டாவது காலாண்டில் (Q2), 7.6% வளர்ச்சி விகிதத்தை எட்டியதால், வளர்ச்சியில் ஸ்திரத்தன்மை வலுப்பெற்றுள்ளது என்று கருதலாம்.இந்தச் சூழலில், சிக்கலான உலகளாவிய சவால்களின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைத் தொடரும் எனவும், நிதியாண்டு 2023-24க்கான ஜிடிபி வளர்ச்சி, 6.3%ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. குறிப்பாக இன்னும் ஓரிரு தினங்களில் வர இருக்கும் 2024 ஜனவரியில் தைவானில் இருந்து நவம்பரில் அமெரிக்கா வரை 40 நாடுகளில் தேர்தல் நடைபெறும் ஆண்டாக இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல்கள் எதிர்பார்க்கப் படுகின்றன, மேலும் வாக்கெடுப்பு மற்றும் புதிய அரசாங்கம் பொருளாதார நிகழ்ச்சி நிரலை மறுபரிசீலனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிலும் இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (GDP) 100% அதிகரிக்கும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது . காலநிலை நெருக்கடி மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்களுக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய சூழலில், இத்தகைய கடன் நெருக்கடி நீண்ட கால ஆபத்துகளை ஏற்படுத்தும் என அந்த அறிக்கை கூறியுள்ளது கொஞ்சம் கவலையயைத்தான் தருகிறது.
ஆனால் 2023-24ல் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும், 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைமைப் பொருளாதார ஆலோசகர், சிஇஏ டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2022-23ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதன் சிறப்பம்சங்கள் குறித்து புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் நாகேஸ்வரன், 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்த தசாப்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் தனது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி முன்னறிவிப்பை 6.8 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 6.1 சதவீதமாகவும் வைத்திருக்கிறது என்று டாக்டர் நாகேஸ்வரன் கூறினார். 2024-25ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார். பொருளாதாரத்தின் மீட்சி முழுமையானதாகவும், வங்கி அல்லாத மற்றும் பெருநிறுவனத் துறைகள் இப்போது ஆரோக்கியமான இருப்புநிலைகளைக் கொண்டுள்ளன என்றும் CEA மேலும் கூறியது. தொற்றுநோய் மீட்பு பற்றி இனி பேச வேண்டிய அவசியமில்லை, அடுத்த கட்டத்தை நாம் எதிர்நோக்க வேண்டும் என்றார்.
டாக்டர் நாகேஸ்வரன் கூறுகையில், பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2022-23 முதல் பாதியில் 10 துறைகளில் தனியார் முதலீடு 2021-22 முதல் பாதியில் இருந்ததை விட அதிகமாக உள்ளது. இதில் மருந்து, ஜவுளி, சிமெண்ட், இரசாயனங்கள் மற்றும் மூலதன பொருட்கள் அடங்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவைக்கான இலக்குகளை விட இந்தியா மிகவும் முன்னால் உள்ளது என்றும் அவர் கூறினார்.
பின்னர், ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்தியா 6.5 முதல் 7 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் பொருளாதாரமாகவும், 2030 ஆம் ஆண்டில் 7 டிரில்லியன் பொருளாதாரமாகவும் மாறும், பரிமாற்ற வீத ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியப் பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் வளர்ச்சி வாய்ப்புகளைத் தடுக்கக்கூடிய ஒரு பெரிய ஆபத்தாகப் பணவீக்கம் இருக்கிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி குறைந்த மொத்த விலைக் குறியீட்டில் (WPI) பிரதிபலிக்கும் அதே வேளையில், நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் பணவீக்கம் 6.2% முதல் 6.7% வரை அதிகமாக உள்ளது. ஆனால், இப்போதைய கணிப்பு, பணவீக்க விகிதங்கள் ஸ்திரப்படுத்தப்பட்டு, ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பான 2-4%-க்குள் கொண்டுவரப்படும் என்பதுதான். எவ்வாறாயினும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி (FED), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற மத்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இது பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எதிர்காலத்தில் பணவீக்கத்தின் சாத்தியமான அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய மந்தநிலை குறுகிய காலத்தில் மற்றொரு பெரிய ஆபத்து ஆகும், இது ஏற்றுமதித் தேவையைப் பாதிக்கலாம்.
பிற குறுகிய-நடுத்தர கால அபாயங்களில், மனித மூலதனத்தில் போதுமான முதலீடு இல்லாதது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஓர் அடிப்படை ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்திய நகரங்கள் சீராக வளர்ந்துவந்தாலும், இந்தியா இன்னும் கிராமப்புறமாகவே உள்ளது. இந்தியாவின் வடக்கு-தெற்குப் பகுதிகளில் கல்வியறிவு விகிதம், கருவுறுதல் விகிதம், மக்கள்தொகை அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடுகள் உள்ளன. எனவே, ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்தியாவின் கிராமப்புறங்களில் மனித மூலதனத்தில் ‘பெரிய உந்துதல்’ (Big push) முதலீடுகள்தேவை. மனித மூலதனம், மனித மூலதனத்தின் இறுதி நிர்ணயம் செய்யும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெரிய உந்துதல் முதலீடு மட்டுமே பொருளாதார வளர்ச்சியை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும். கடந்த காலப் போக்கை முறியடிக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிப் பாதையைப் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் சமத்துவமாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதே சமய்ம், பொருளாதார வல்லுநர்கள், தேர்தல்கள் நெருங்கும் போது, அரசாங்கத்தின் வளர்ச்சியின் வேகத்தில் ஒரு சாத்தியமான மந்தநிலையை கணித்துள்ளனர். இது அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி விளைவுகளை கட்டுப்படுத்தலாம். கிராமப்புற வளர்ச்சியின் மந்தநிலையை மோசமாக்கலாம், நுகர்வுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துமாம். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே நெருக்கடிகளைச் சமாளிக்க தனியார் துறைகளில் அதிக அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் நாடுகளிடையே நிதி கண்காணிப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக சர்வதேச அறிக்கை வெளியாகியுள்ளது.அது தவிர, இதனால் நீண்ட கால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால், இந்திய அரசு புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் மோசமான சூழல்கள் இத்தகைய நிலைமையால் ஏற்படும் என இடைக்கால அறிக்கையாக இதை வெளியிட்டுள்ளது ஐ.எம்.எஃப்.
இந்திய அரசும் நம் நாட்டு பொருளாதார வல்லுநர்களும் சொல்வது போல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லையா? அல்லது இது இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையா? என்று கேட்டால் முதலில் இந்த அறிக்கை பொது அரசாங்க கடன் குறித்துப் பேசுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதாவது மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கடன் அளவைச் சேர்த்து 100 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி எவ்வளவு கடன் வைத்திருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாகச் சட்டத்தின்கீழ் (FRBM Act-எஃப்.ஆர்.பி.எம்) இந்த அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் நிதி பொறுப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இந்த சட்டத்தின்கீழ், பொது அரசாங்கக் கடன் 60 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய அரசின் கடன் 40 சதவீதமாகவும் மாநில அரசுகளின் கடன் 20 சதவீதத்திற்கு உள்ளும் இருக்க வேண்டும்.ஆனால், 2023 மார்ச் மாதத்திலேயே இந்த அளவு தாண்டிவிட்டது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் 155.6 லட்சம் கோடி ரூபாயாகவும் அல்லது 57.1% என்ற விகிதத்திலும் மாநில அரசுகளின் கடன் 28% எனும் விகிதத்திலும் இருப்பதாக, ‘மின்ட்’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இரண்டும் சேர்ந்து 85% கடன் உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்குமா, இல்லையா என்பதில் குளறுபடியான விளக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி கடன் அதிகமாக வாங்கினால் வட்டியை வருவாயில் இருந்து அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் வேறு செலவுகளைச் செய்ய முடியாது. முதலீடுகளைச் செய்ய முடியாது. கடன் தொடர்ந்து அதிகரிக்கும்போது மற்றவர்கள் கடன் தர மாட்டார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதும் கடினமாக இருக்கும். இப்படி கடன் வாங்கிக்கொண்டே இருப்பது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடனைக் குறைப்பது தொடர்பாக இந்திய அரசு பல வழிகளை ஆலோசித்து வருவதாகவும் வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களால் கடனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார் என்றாலும் கவலை வரத்தான் செய்கிறது.
அகஸ்தீஸ்வரன்