தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்த தேர்தலில் ஜெயித்தது இந்திய ஜனநாயகம்!

07:31 PM Jun 05, 2024 IST | admin
Advertisement

பாஜக 1989ல் நடந்த தேர்தலில் 88 சீட்டுகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தது. அப்போது அதை வர்ணித்து எல் கே அத்வானி பேசுகையில் 'Winner comes second!' என்றார். அதாவது இரண்டாவது வந்தவர்தான் வெற்றியாளர் ஆகிறார் என்று அர்த்தம். அப்போது அது உண்மைதான். காரணம், அதற்கு முந்தைய தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுகள் வென்றிருந்த பாஜக ஐந்தே ஆண்டுகளில் 85 சீட்டுகள் பெற்றது ஒரு மகா அதிசயம். அதற்குப் பின்னணியில் ராமர் கோயில் இயக்கம் இருந்தது என்றாலும், இந்திய வரலாறு அதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாய்ச்சல் அது. விளைவு, 197 சீட் எடுத்து Single Largest Partyயாக வந்த காங்கிரசாரிடம் உற்சாகம் இருக்கவில்லை. ஆனால் 85 எடுத்த பாஜகவினர் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Advertisement

இந்தத் தேர்தல் முடிவும் ஏறக்குறைய அது போலவே அமைந்திருக்கிறது. ஆட்சி அமைக்கும் அளவுக்கு single largest party யாக வந்திருக்கும் பாஜகவினரிடம் பெரிய உற்சாகத்தைக் காணோம். மாறாக, இரண்டாம் இடத்துக்கு வந்திருக்கும் காங்கிரஸ் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.

இதற்குக் காரணம் இருக்கிறது. காங்கிரஸ் தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருக்கிறது. பாஜகவுடன் நேரடிப் போட்டியில் இருந்த தொகுதிகளில் தனது வெற்றி விகிதத்தை (strike rate) அதிகரித்திருக்கிறது. தலித் மற்றும் ஆதிவாசி தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்துத்துவத்தின் பட்டறை எனப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு செக் வைத்திருக்கிறது. பாஜக வென்ற தொகுதிகளில் கூட 23 இடங்களில் வாக்கு வித்தியாசம் வெறும் 1 முதல் 2.5 சதவிகிதம்தான் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டணித் தலைவர்களை நம்பி இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு பாஜகவைக் கொண்டு வந்திருக்கிறது. 'அடுத்த மாசம் NRC கொண்டு வர்றோம்; அடுத்த வருசம் பொது சிவில் சட்டம், அதுக்கு அடுத்த வருசம் நாட்டோட பேரை பாரதம்னு மாத்தறோம், அப்புறம் ஸ்ட்ரைட்டா இந்து ராஷ்டிரம்தான்,' என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்த இந்துத்துவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. இவை எதுவுமே இனிமேல் நிகழ வாய்ப்பில்லை. சொல்லப் போனால், இப்போது இருக்கும் சிஏஏ கூடத் தொடருமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

Advertisement

இதில் கூடுதல் சுவாரசியம், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது தெலுகு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. மாறாக, 'உங்க பொண்டாட்டி தாலியை அறுத்து முஸ்லிம்ஸ்சுக்கு கொடுத்துருவாங்க!' என்று பிரச்சாரத்தில் பயமுறுத்தியவர் மோடி. வரும் மாதங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் நாயுடு இந்த 4% இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தும் போது, மோடி என்ன செய்யப் போகிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இதெல்லாம் போக, தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு நிறைவாக இருக்கும் ஒன்று, இந்திய செக்யூலசரிசத்துக்கு வந்த ஆபத்து இனி இருக்காது என்பதுதான். இனி மோடி என்ன, அமித் ஷா என்ன, யோகியே நினைத்தால் கூட இந்தியாவின் சிறுபான்மையினர் மீது சுலபத்தில் கை வைத்து விட முடியாது. நிதிஷ், நாயுடு மற்றும் வலுவான எதிர்க் கட்சிகள் தொட விட மாட்டார்கள். ஊடகங்களின் சுதந்திரம் மறு கட்டமைக்கப்படும். அமுலாக்கத் துறையையும், வருமான வரித் துறையையும் கண்ட மேனிக்கு துஷ்பிரயோகம் செய்வது குறையும். 'புல்டோசர் பாபா' இனிமேல் புல்டோசரைத் தொட முடியாது. ராம நவமி அன்று மசூதிகள் மேல் ஏறி காவிக்கொடி கட்ட முடியாது. கங்கையில் ஆரத்தி எடுப்பது, குமரியில் தியானம் செய்வது, போன்ற வெத்துவேட்டு ஸ்டண்ட்களை எல்லாம் நிறுத்தி விட்டு உண்மையான அரசுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டி வரும்.

இவை எல்லாம் பாஜகவினருக்குத் தெரிந்திருப்பதால்தான் சோகமாக இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்ய விடாமல் பாஜகவை தடுத்து நிறுத்தியதால்தான் எதிர்க் கட்சிகள் வெற்றிப் பெருமிதத்தில் இருக்கிறார்கள். Therefore, this time too, the Winner came second!

பாஜக ஜெயித்ததோ, காங்கிரஸ் ஜெயித்ததோ, கடைசியில் இந்திய ஜனநாயகம் ஜெயித்தது. செக்யூலரிசம் ஜெயித்தது. நேரு கனவு கண்ட 'India is a sovereign, socialist, secular democratic republic' என்பதை மீட்டுருவாக்கிய இந்திய மக்களுக்கு நன்றிகள் பல.

ஷாலி

Tags :
BjpcongressDemocracyelectionresultஜனநாயகம்தேர்தல் முடிவுகள்
Advertisement
Next Article