இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார்-பிரீத்தி ரஜத்!
நம் இந்திய ராணுவத்தில் விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக், கடந்த 2022 டிசம்பர் மாதம் இணைந்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு சுபேதாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் ராணுவத்தில் சேர்ந்தார். சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பிரீத்தி ரஜக் இடம் பெற்றிருந்த மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. அதைத் தொடர்ந்து , ஹவில்தாராக இருந்த பிரீத்தி ரஜக், சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தற்போது மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவில் 6வது இடத்தில் உள்ள சுபேதார் ப்ரீத்தி ரஜக், 2024ம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ராணுவ மார்க்ஸ்மேன்ஷிப் பிரிவில் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "பிரீத்தி ரஜக்கின் மகத்தான சாதனை பல தலைமுறை இளம் பெண்களை இந்திய ராணுவத்தில் சேரவும், தொழில்முறை துப்பாக்கி சுடுதலில் தங்களுக்கென ஓர் இடத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.