நம்ப முடியாத வெற்றியை பெற்ற இந்தியா, பாகிஸ்தானை சுருட்டி அபார ஆட்டம்!
கடுகு சிறுசானாலும் காரம் பெருசாக்கும் என்பது போல, டார்கெட் சிறுசானாலும் மானம் பெருசு என ரோசம் கண்டு ஆடியிருக்கிறது இந்தியா! பேட்டிங்கில் 119 ரன்கள் மட்டுமே எடுக்க எல்லோருமே டிவியை அனைத்துவிட்டு படுக்கத்தான் சென்றிருப்பார்கள். அதுவும் முதல் 2 ஓவர்கள் பாகிஸ்தான் இன்னிங்சை பார்த்து உறுதியாக தூங்கியே இருப்பார்கள்.
தூங்கியவர்களை தட்டி எழுப்பும் விதமாக, இந்தியாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது. நண்பர் ஒருவர் 130 ரன்களே இந்த ஆடுகளத்திற்கு போதுமானது என்றார். அது சரி தான் என்பது போலவே ஆட்டமும் நகர்ந்தது. 17 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுக்க ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ஹார்டிக் பாண்டியா 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றி அவரது பங்கை நிறைவு செய்தார்.
3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவை, களத்தில் எப்போ வேண்டுமானாலும் அதிரடியாக ஆடும் இப்திகார் அஹமது, இமாத் வசீம்.. 18 ஆவது ஓவரில் சிராஜ் நோபாலை வீச சேதாரம் பெருசா இருக்குமோ என நினைத்தால், அடுத்து ஒரு வைடும் போட்டு சோதித்தார். எப்படியோ 9 ரன்களுக்குள் ஓவரைக் கட்டுப்படுத்திவிட்டார். அவர் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
2 ஓவர்களுக்கு 21 ரன்கள் தேவை.. 19 ஆவது ஓவரை பும்ரா வீசவோ இந்தியாவின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. முதல் 4 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே கொடுத்தவர் அடுத்த 2 பந்துகளில் 1 ரன்களை மட்டுமே கொடுத்து, இப்திகார் விக்கெட்டை எடுக்க, 4 ஓவர்களை 3 விக்கெட்டுடன் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக வீசி அசத்தினார்.
1 ஓவருக்கு 18 ரன்கள் தேவை
20 ஆவது ஓவரை அர்ஷதீப் வீச வந்தார். இப்போட்டியில் அதிக ரன்களை கொடுத்தவராக 3 ஓவர்களில் 21 ரன்களை வழங்கியிருந்தார். முதல் பந்திலே பாண்ட் கணிப்பில் துல்லியமாக ரிவிவ் எடுத்து இமாத் வசீம் அனுப்பப்பட்டார். அடுத்த இரண்டு பந்தில் 2 ரன்கள், 4, 5 ஆவது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடிக்க, இறுதி பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 1 ரன் மட்டுமே கொடுக்க இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியை இந்தியா வென்றால் உலகக்கோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களை அடித்து கட்டுப்படுத்திய அணி என்ற பெருமையை இலங்கை அணியுடன் பகிரும் என்றதொரு நிலை இருந்தது. 2014 இல் நியூசி அணிக்கு எதிராக 119 ரன்களை அடித்து, இலங்கை அணி வென்றிருந்தது. அந்த சாதனை இந்தியா வசம் வந்தது. இப்போட்டியில் அக்சர், ஜடேஜாவும் தலா 2 ஓவர்களை சிறப்பாக வீசி அசத்தினார்கள். பந்துவீச்சில் ஒட்டுமொத்த அணியாக இணைந்து வெற்றியை இந்தியா வசமாக்கினார்கள்.
ரிஷப் பண்ட் பேட்டிங் மட்டுமல்ல கீப்பிங்கிலும் சிறப்பான கேட்ச்களை செய்து மிரட்டினார்.