உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பின்னடைவில் இந்தியா!
மனிதர்கள் வாழ தகுதி உள்ள இந்த உலகில் சுமார் 195 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் பொருளாதார நிலை, வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் முன்னிலையாக இருக்கும். உலக அளவில் விண்வெளி, வணிகம் போன்ற துறைகளில் தங்கள் சக்தியை பிற நாடுகளுக்கு ஒவ்வொரு நாடும் வெளிப்படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவை பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. இந்த போர்களால் உலக அளவில் பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.உலக நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் சர்வதேச அளவில் சிறந்த நாடுகள் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவை சோ்ந்த நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் உலகின் சிறந்த நாடுகளுக்கான பட்டியலை தயாரித்து இருந்தது. தற்போது அந்த பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில்அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.
வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு பட்டியலில் இந்தியா 30-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது.டாப் 25 நாடுகள் பட்டியலில் கூட இந்தியா வரவில்லை. இதற்கு காரணம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சி ஆகியவற்றில் அதிக கவனம் தேவை என்பதை காட்டு கிறது. அதே சமயம் சீனா, வடகொரியா ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் முதல் 25 இடங்களுக்குள் இருப்பிடத்தை தேடி கொண்டன.
மேலும் இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலிருந்து ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 17-வது இடத்திலும் கத்தார் 25-வது இடத்திலும் உள்ளன.