அதிகரித்து வரும் கிட்டப்பார்வை!
சில பல ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஒரு சிலரே கண்ணாடி அணிந்திருப்பார்கள். ஆனால், இன்றோ பலர் கண்ணாடி அணிந்திருக்கும் சூழல் நிலவுகிறது. இத்தகைய அதிகரிப்புக்குக் கல்வியின் தற்போதைய சூழலே முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இன்றைய போட்டி சூழலில், குழந்தைகள் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒருபுறம் அதிகமான வீட்டுப்பாடம். இன்னொருபுறம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிவகுப்பு. அத்துடன் ஓவியம் போன்றவற்றிற்குச் சிறப்புப் பயிற்சி. எல்லாவற்றையும் முடித்துவிட்டு இரவு 9 மணிக்குமேல் வீட்டுக்குத் திரும்பியவுடன் மறுநாள் வீட்டுப்பாடம்; படித்துவிட்டுத் தூங்கப்போவதற்கு 11 அல்லது 12 மணியாகிவிடுகிறது. தூக்கம் பாதிக்கப்படும்போது நம் உடலின் சர்க்காடியன் இசைவு ( circadian rhythm) பாதிக்கப்படும்; விழித்திரையைப் பாதிக்கும்; கிட்டப்பார்வையையும் ஏற்படுத்தலாம்.
கண்பார்வை குறைபாடு தேசிய அளவில் ஏற்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. மையோபியா எனப்படும் கிட்டப்பார்வை குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்றைக்கு சிங்கப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினரிடம் 80 சதவிதம் அளவுக்கு கிட்டப்பார்வை குறைபாடு அதிகரித்திருக்கிறது. "உலகின் கிட்டப்பார்வை தலைநகராக" சிங்கப்பூர் உள்ளது.
"இந்த விஷயத்தில் 20 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறோம். ஆகவே நாங்கள் உணர்வற்ற நிலையில் இருக்கின்றோம்," என சொல்கிறார் சிங்கப்பூர் தேசிய கண் மையத்தின் இணை பேராசிரியரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான ஆட்ரி சியா . "ஏறக்குறைய சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. வெளித்தோற்றத்துக்கு உலக நாடுகள் முழுவதும் வித்தியாசமான வாழ்க்கை சூழலைக் கொண்டவைதான். ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கிட்டப்பார்வை குறைபாடு என்பது நாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து நாடுகளிலும் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக கவனிக்கத்தக்க நிகழ்வாக இருக்கிறது. இளம்பிள்ளைகள் 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது விரல்களின் நீளம் மாறுபடுவதைப் போல, அவர்களது கண் அளவும் மாறுபடும். அதனால் கண்களில் கிட்டப் பார்வை (Myopia), தூரப் பார்வை (Hypermetropia), சிதறல் பார்வை (Astigmatism) போன்ற பார்வைக் குறைபாடுகள் ஏற்படலாம். பெரும்பாலும் தூரப் பார்வையால்தான் பலர் பாதிக்கப்படுவார்கள்.
படம் பிடிக்கும் கேமராவைப் போலத்தான் நம் கண்களும். நாம் பார்க்கும் பிம்பங்கள் ஒளியாக நம் கண்களின் கருவிழி (cornea) லென்ஸ் வழியாகச் சென்று, கண் விழித்திரையின் (Retina) மையப் பகுதியில் விழுந்து, அங்குள்ள பார்வை நரம்பு (Optic nerve) வழியாக மூளையை அடைந்து, அது நமக்குக் காட்சியாகத் தெரிகிறது.
கண்ணில் விழித்திரையின் மையப் பகுதியில் விழ வேண்டிய ஒளியானது, மையப் பகுதிக்கு முன்பாகவே விழுந்தால் அது கிட்டப் பார்வை என்றும், மையப் பகுதிக்குப் பின்பாக விழுந்தால் அது தூரப் பார்வை என்றும், சிதறி விழுந்தால் அது சிதறல் பார்வை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதன் மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள்தாம்.
இவர்களில் 12 சதவீதத்தினர் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, சிதறல் பார்வை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.
பார்வைக் குறைபாட்டைத் தடுக்க…
# ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கும் முன் மற்றும் வருடம் ஒரு முறை என முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
# குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக் கூடாது.
# வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.
டாக்டர். செந்தில் வசந்த்