தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நாளேடுகளில் அதிகரித்து வரும் பிழைகள்!

12:33 PM Feb 25, 2024 IST | admin
Advertisement

நாளேடுகளில் பரவலாக, பிழைகள் அதிகரித்து வருகின்றன. அதற்குச் செய்திகளைப் பதிவிடவேண்டிய அவசியம், நெருக்கடி முதல் காரணம். இரண்டாவதாக, மொழிப் பயிற்சி இன்றைய தலைமுறைக்கு போதிய அளவு இல்லை. அது ஆங்கிலத்திலும் உள்ளது. அதை வேறு வல்லுநர்கள் பேசட்டும். மூன்றாவதாக செய்திகளைத் தர வேண்டியதில் கூடுதல் கவனம் செலுத்தும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ள செய்தியாளர்களால் மொழியில் கவனம் செலுத்துவதற்குப் போதிய அவகாசமே இருப்பதில்லை. ஒரு செய்தியைச் சொல்லி முடித்துவிட்டு, மூச்சுக் கூட வாங்க முடியாது. அடுத்து இன்னொரு செய்தி வந்து அவரைத் துரத்தும். இப்படித்தான் செய்தியாளர் வாழ்க்கையும் இருக்கிறது. அவற்றை எடிட் செய்யும் உதவி ஆசிரியர்களின் கைகளில் பொறுப்பு இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியதால் இதோ சில கருத்துகள்…………!

Advertisement

எல்லா நாளேடுகளும் “இந்தாண்டு அதிகளவில் மழை பெய்யும்” என்று ஒரு செய்தியில் இரு பிழைகள். இந்தாண்டு என்பதைப் பிரித்தால் இம் = தாண்டு என வரும். இதில் இம் என்பது ஒலிக்குறிப்பேயன்றி, பொருளில்லை. தாண்டு என்பதன் பொருள் எல்லோருக்கும் தெரியும். எனவே, இத்தொடரை “இந்த ஆண்டு” அழகாகச் சொற்களைப் பிரித்துப் பதிவிட்டாலே போதும்..

அடுத்து, அதிகளவில் என்ற சொல்லை உடைத்தால்,, அதி களவில் என்றாகும். ஏராளமாகக் களவு (திருட்டு என்றும் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்). ஏராளமான திருட்டு என்பதுதான் பொருளாகும். இச்சொல்லை “அதிக அளவில்” என்று அழகாகப் பிரித்துப் போட்டால் படிக்கவும் நன்றாக இருக்கும். பேசவும் அழகாக இருக்கும்.

Advertisement

அருகாமை என்ற சொல் நேரடி எதிர்ப்பொருளைத்தான் குறிக்கும். பொறுமை என்பதன் எதிர்ச்சொல் பொறாமை. முயலுதல் என்ற சொல்லுக்கு எதிரானது முயலாமை. இப்படித்தான் சொற்கள் அமையும். அப்படியானால், அருகாமை என்றால் அருகில் இல்லாமை என்பதுதான் பொருள். அருகில் என்பதே சரியானது. அருகாமை என்ற சொல்லை அருகில் என்று நினைத்துக் கொண்டு எழுதுகிறோம் பேசுகிறோம். அருகமை என்பது கூட ஓரளவு பொருத்தமானதே. அருகு அமை (அதாவது அருகில் அமைதல் என்று பொருள்). எதற்குக் குழப்பம் வேண்டாமே.. பேசாமல் அருகில் என்றே எழுதுவதே சரி. தொலைவு என்பதையும் அப்படியே பயன்படுத்தினால் நல்லதுதானே…

லஞ்ச லாவண்யம் என்ற சொல் “காத்துக் கறுப்பு”, “தலைகால்”, “குப்பை கூளம்”, “பட்டி தொட்டி” என வரும் அடுக்குத் தொடர் போலத் தெரியும். ஆனால், அவையெல்லாம் ஓரளவேனும் தொடர்புள்ளவை. லஞ்சத்துக்கும் லாவண்யத்துக்கும் என்ன சம்பந்தம். லாவண்யம் என்றால் அழகு என்பது பொருளல்லவா.. லாவண்யா என்று பெண்களுக்குப் பெயர் சூட்டவில்லையா.. இங்கே லஞ்சத்துக்கும் லாவண்யத்துக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. பேசாமல் கையூட்டு என்ற அழகான சொல் போதும். அதில் எல்லாமே அடங்கும்.

ஊழல் என்பது விரிவான பொருளைக் கொண்டது. ஊழல் என்பதைப் பிரிக்கும்போது “ஊழ் அல்” என்றே அமையும் என்று தமிழாசான் பேராசிரியர் தி. வேணுகோபால் (நாகநந்தி) கூறியிருக்கிறார். ஊழ் என்றால் முறையானது. முறையற்றது ஊழல் என்ற சொல்லாகும். முறைகேடாகத் திரட்டிய பொருள், சொத்தும் எல்லாமே ஊழலால் ஈட்டியது என்று தெரிவிக்கும். ஊழல் என்பது பரவலான விரிவான பொருள் கொண்டது. அதில் கையூட்டும் அடக்கம்.

இனி, றன்னகர (அதாவது இரண்டுசுழி ன), டண்ணகர (மூன்று சுழி ண), தந்நகர (ந) ஆகியவை தவறாகக் கையாளப்படுவது குறித்து பின்னொரு நாளில் வரும்.!

பா. கிருஷ்ணன்

Tags :
errorsIncreasingjournals!mistalkesproofmistaketamil news paper
Advertisement
Next Article