For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னையில் அதிகரிக்கும் காற்றின் மாசுபாடு .. ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

05:17 PM Oct 26, 2023 IST | admin
சென்னையில் அதிகரிக்கும் காற்றின் மாசுபாடு    ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Advertisement

பெங்களூருவை சேர்ந்த அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கான மையம் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே சென்னையில் அதிக காற்று மாசு பதிவாகி இருந்தது. அதாவது, தூத்துக்குடியை விட சென்னையில் இருமடங்கு அதிக காற்று மாசு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் தற்போது இருப்பதை போலவே தொடர்ந்தால், 2030ஆம் ஆண்டு பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.அதாவது, இதேநிலை நீடித்தால் வரும் 2030ஆம் ஆண்டில் சென்னை மற்றும் திருச்சியில் 27 சதவீதம் வரையும், மதுரையில் 20 சதவீதம் வரையும் தூத்துக்குடியில் 16 சதவீதம் வரையும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது போல் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் காற்று தரக் குறியீடு 117 முதல் 195 வரை பதிவாகியுள்ளது.

Advertisement

காற்று மாசுப்பட்டால் இதய பிரச்னை, நுரையீரல் தொற்றுகள், மூளை பாதிப்பு, சிறுநீரகங்கள் பாதிப்பு, சர்க்கரை நோய், பேறுகால பாதிப்புகள்-குறைப்பிரசவம், குழந்தையின் எடை குறைதல், கருக்கலைப்பு, குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை நிகழும் என ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.சென்னை பெருநகர திட்டம் 2020ன்படி மாசை முறையாக அளக்க ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டும், அதில் பெரும்பான்மைப் பணம் கட்டிட வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.மேலும் மோட்டார்கள் இல்லாத வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் பயன்பாட்டிற்கு வரவில்லை . மாசுபாட்டை குறைக்கும் மாற்று நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உரிய திட்டங்களும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வில்லை..சட்டப்படி சுத்தமான காற்றை சுவாசிப்பது அனைவரின் அடிப்படை உரிமை என்பதாலும், மாசை எற்படுத்துவோர் அதற்கான பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதும் சட்டத்தில் இருந்தும், நடைமுறை முற்றிலும் வேறாக உள்ளது.

Advertisement

பொதுவாகக் காற்றில் உள்ள துகள்கள் அவற்றின் சைஸ் பொறுத்து அவை வரையறுக்கப்படுகிறது. அதன்படி 10 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM10) கொண்ட துகள்கள் நுரையீரல் உள்ளே செல்லும். இது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM2.5) கொண்ட துகள்கள் நுண்ணிய துகள்கள் என வரையறுக்கப்படுகிறது. சென்னையில் கடந்த கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நகரில் சராசரி PM10 அளவு என்பது 45.9 μg/m³ ஆக இருக்கிறது. இது பாதுகாப்பான அளவை (15 μg/m³) காட்டிலும் 3.1 மடங்கு அதிகமாகும். அதேபோல சென்னையில் சராசரி நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை காட்டிலும் 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று முன்னரே செய்திகள் வந்தது.

இந்நிலையில் சிங்காரச் சென்னையில் 23.10.2023 தேதியிலிருந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தரக் குறியீட்டு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சென்னையில் எ இடங்களில் உள்ள காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களைக் கொண்டு காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. வாரியம் வெளியிடும் அன்றாட காற்று தரக் குறியீடு அறிக்கையின்படி, சென்னையில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான சராசரி காற்று தரக் குறியீடு 109 ஆகவும், 24ஆம் தேதி 121 ஆகவும், 25ஆம் தேதி 127 ஆகவும் பதிவாகியுள்ளது.

26ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி சென்னையின் காற்று தரக் குறியீடு

இடம்                                                               காற்று தரக் குறியீடு
மணலி 192
ஆலந்தூர் பேருந்து பணிமனை                          104
கொடுங்கையூர்                                                           119
அரும்பாக்கம்                                                               111
ராயபுரம்                                                                          103
பெருங்குடி                                                                      152
வேளச்சேரி                                                                       71

வங்கதேசத்தை ஒட்டி வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஹாமூன் புயலின் தாக்கத்தால் சென்னைக்கு வடக்கிலிருந்து காற்று வீசுவதே காற்றின் தரம் குறைந்ததற்கு காரணம் என்கிறார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் “ஹாமூன் புயல் வலுவிழந்து அதன் தாக்கம் குறைந்த பின்னர் இந்த நிலைமை மாறும் எனவும் சென்னைக்கு கிழக்கத்திய காற்று வீசும்போது காற்று மாசுபாட்டின் அளவு குறையும்” என அவர் தெரிவித்தார்.

மிக தீவிர புயலான ஹாமூன் நேற்று மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்து 25.10.2023 காலை 0130-0230 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங் (Chittagong) க்கு அருகில் கடந்தது. இதன் தாக்கத்தால் வடக்கிலிருந்து வந்த குளிர் காற்று சென்னையின் இரவு நேர வெப்ப நிலையையும் குறைத்துள்ளது. வானிலையின் தாக்கம் ஒருபுறமிருக்க இது தீபாவளி காலம் என்பதால் இப்போதே பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது. காற்றின் தரத்தில் ஏற்பட்ட இம்மாறுபாட்டை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உன்னிப்பாக கவனித்து வருவதாக வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் தீபாவளி முடியும் வரை கவனமாக இருப்பதே நல்லது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான காரணிகளையும் அதற்கு யார் பொறுப்பு, எப்படிக் கட்டுப்படுத்துவது என்பன போன்ற விவரங்களையும் மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள், அரசு நடவடிக்கை எடுக்கும். இவைபோக, வாகனங்களின் கரிம உமிழ்வு அளவுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி முற்றிலுமாக முறைப்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement