For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

08:02 AM Jun 18, 2024 IST | admin
பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
Advertisement

மீபகாலமாக குழ்ந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதீத உடல் வலி, சளி, இருமல், கண்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 'இன்ப்ளூயன்ஸா, நிமோனியா, டெங்கு' உள்ளிட்ட காய்ச்சலால், தினமும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள குழந்தைகளுக்கும்தான், பருவநிலை மாறும்போது உடனடியாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் காய்ச்சலில் உள் காய்ச்சல், வெளிக் காய்ச்சல் என எதுவும் கிடையாது. உங்கள் கை என்பது தெர்மாமீட்டர் கிடையாது. கையால் கழுத்தில், நெற்றியில், வயிற்றில் வைத்துப் பார்த்து உடல் சூடாக இருப்பதால் காய்ச்சல் என முடிவுக்கு வருவது தவறு.காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்த தெர்மாமீட்டர்தான் பயன்படுத்த வேண்டும். இப்போது நிறைய வகை தெர்மா மீட்டர்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் காய்ச்சலை உறுதிசெய்ய வேண்டும். உடல் வெப்பநிலை 100.4 டிகிரிக்கு மேல் இருப்பதுதான் காய்ச்சலாகக் கருதப்படும். இது குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பொருந்தும். மற்றபடி வெளியில் உடல் சூடாக இருப்பதாக உணர்வதெல்லாம் காய்ச்சலில் அடங்காது. வெளியில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால் உடல் சூடாக இருப்பது போலத் தோன்றும். அதுவே வெளியில் சூடாக இருந்தால் உடல் குளிர்ச்சியாகத் தெரியலாம். எனவே அதையெல்லாம் காய்ச்சல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertisement

அதே சமயம் தமிழ்நாட்டில் சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன், மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரணமாக ஒரு கிளினிக்கிற்கு 15 பேர் வந்த நிலையில்,தற்போது 50 பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு, குளிர் மற்றும் மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் காரணமாக உள்ளன. பள்ளிகள் வாயிலாகவும் மாணவர்களிடையே தொற்றுகள் பரவல் அதிகரித்துள்ளது.

இது குறித்து, குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தவை:

பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். இதனால், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்த பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. எந்த வகை வைரஸ், பாக்டீரியா தொற்றாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம். அதில், பள்ளி வளாகங்களை கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்தி வைத்திருத்தல் அவசியம். கழிப்பறையை சுகாதாரமாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சிய நீரை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

தனிநபர் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க, அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றால், பாதிப்பின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Tags :
Advertisement