தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வருங்காலத்தில் விஜய்யும் மாவீரர் நாள் நடத்தக் கூடும்!

05:26 AM Nov 28, 2024 IST | admin
Advertisement

ந்திய நிலப் பரப்பில் வடக்கே காங்கிரசு, இந்துத்துவம், கம்யூனிசம், தலித்தியம் ஆகிய கோட்பாடுகளை உள்வாங்கிய அரசியலையே எல்லோரும் செய்தார்கள். தெற்கே திராவிடம் என்ற கோட்பாட்டின் ஊடாக பல அரசியல் இயக்கங்கள், கட்சிகள் பரிணமித்தன. இவற்றிலிருந்து விலகி, 2009க்குப் பிறகான காலகட்டத்தில் வலுவாகி வெகுசன மக்கள் மத்தியில் பேசு படுபொருளாக மாறி, இன்று கட்சி துவங்கி இருக்கும் விஜய் வரை "தமிழ்த்தேசியம்" என்பது தவிர்க்க முடியாத சொல்லாக மாறி இருப்பதிலிருந்தே அதன் வலிமையும், தேவையும் புரியும். நெடுங்காலமாக பேசி வந்த மேற்கண்ட முதன்மையான 5 அரசியல் கோட்பாட்டு முழக்கங்களில் இருந்து விலகி தனித்துவமான தத்துவம் மற்றும் வரலாற்று பாடங்களால் இன்று தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருக்கிறது அந்த தத்துவம். அதற்கு விதை போட்ட ஈழ விடுதலை போராட்டத்தையும், அதற்காக உயிர்நீத்த மாவீரர்களையும், இயக்கத்தின் தலைவரையும் போற்றாதார் இல்லை.

Advertisement

ஈழம் தான் புலிகள் புலிகள் தான் ஈழம் என்று பட்டிதொட்டி எங்கும் பேசியவர் தான் டாக்டர். தொல். திருமாவளவன். திராவிட இயக்க தோழர்களின் பங்களிப்பும், செயல்பாடுகளும் மறுக்க முடியாதவை. . சீமான் இன்று இருக்கும் தமிழ் இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபாகரனை அதிகம் அறிமுகப்படுத்துகிறார். இப்படி தமிழக அரசியல் களத்தில் அந்த கோட்பாட்டிற்கு என்று ஒரு தளம் உருவாகி இருப்பதை உணர முடிகிறது. அதனால் தான் நேற்று கட்சி துவங்கிய .விஜய் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை தொட்டு விட்டு சென்றார்.

Advertisement

குறிப்பாக பிற்போக்கு கோட்பாடுகள் தமிழ்நாட்டில் நீடித்து இருந்ததாக வரலாறு இல்லை. அதனால் தான் சாதி ஒழிப்பையும், இன விடுதலையையும் இதற்கு முதன்மையாக கூறுகளாகக் கொண்டியங்குகிறார்கள். மற்றொரு கோட்பாட்டை எதிர்த்து மட்டுமோ, தலைவர்களை எதிர்த்து மட்டுமோ இயங்குவது அந்த தத்துவத்தை பின்னோக்கி தான் இட்டுச் செல்லும். அதையும் விட குடிவாதம் பேசுவது மிகக் கொடுமை. சாதிப் பெயரை போட்டுக்கொண்டு தமிழ்த்தேசியம் பேச முற்படுவது என்பது மலத்தை பூசிக்கொண்டு கோயிலுக்குள் நுழைவதற்கு ஈடானது. இதற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையும், ஆதிக்கமும் என்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்று நிறுவ தேவையானது சாதிவாரி கணக்கெடுப்பு தானே ஒழிய சாதிப்பெயர் சேர்ப்பது அல்ல. தன்னியல்பிலேயே ஏற்றத்தாழ்வை வைத்திருக்கும் சாதி ஒருநாளும் ஒற்றுமைக்கும், தமிழ்த்தேசியத்திற்கும் வித்திடாது. அதனால் தான் சாதி ஒழிப்பையும், விடுதலை கோட்பாடுகளையும் முன்னிறுத்தி களமாடிய புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் ஆகியோரை சீமான் தொட்டுப் பேசுகிறார்.

மேலும், ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்று வைதீக ஆரிய பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு எதிராக தமிழ்த் தேசியம் தனக்கான பாதையை முன்னரே வகுத்து வந்திருக்கிறது. அதனால் ஆரியத்திற்கு நேர் எதிர் தமிழ்த்தேசியம் தான் என்றும் இடையில் திராவிடம் என்று பேசி தமிழர்களின் அடையாளத்தை மறைத்து விட்டார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல என்றும், இந்த மண்ணுக்கான அரசியல் தத்துவம் தமிழ்த் தேசியமே என்றும் பேசுகிறார்கள். ஆனால், கள அரசியலில் கடும் சிக்கல் இவற்றுக்குள் இருக்கிறது. அதே சமயம் இந்த வாதம் கொஞ்சம் கொஞ்சமாக எடுபட்டும் வருகிறது.

அதில் ஒரு பகுதியாகவே திராவிட எதிர்ப்பை பேசுபவர்களை ஆரியம் உள்வாங்க முயற்சிக்கும். உதாரணமாக, டாக்டர்.திருமாவை மத்திய அமைச்சராக்குவதற்கு தயார் என்று பட்டுக்கம்பளம் விரித்தது பாஜக. சீமானை முதல்வராக்கவும் தயார் என்று சொல்லி இருந்தால் அது இதன் நீட்சி தான். அதை இவர்கள் எப்படி டீல் செய்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் அரசியல் எதிர்காலம் அமையும்.

ஒருமுறை கி. வெ அவர்கள் பேசுகிற போது தான் பங்கெடுத்த ஒரு விவாத நிகழ்ச்சியில் உடன் கலந்து கொண்ட இந்திய ராணுவ வீரர் "இவர்களை போல தமிழ்த் தேசியம் பேசுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்" என்று குறிப்பிட்டதாக சொன்னார். சுமார் 2000 - 2005ல் அந்த நிகழ்ச்சி நடந்த போது "நாங்கள் இருப்பதே மிக சிறிய எண்ணிக்கை தானே.. எங்கள ஏன் இப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு "நீங்கள் எல்லாம் இன்றைக்கு small force ஆ இருக்கலாம். ஆனால், potential force ஆ இருப்பவர்கள்" என்று கூறியதை நினைவு கூர்ந்தார். அது இப்போது கண்முன்னே நடப்பது போல தெரிகிறது.

மாவீரர் நாளையொட்டி பொதுக்கூட்டம் போட்டிருக்கிறது விசிக. வழக்கம்போல் சீமானும் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக திருச்சியிலும் ஒரு பொதுக்கூட்டம். வருங்காலத்தில் விஜய்யும் அதை நடத்தக் கூடும். தொடுக்கப்படும் தாக்குதல்களை சாமர்த்தியமாக சமாளிப்பவர் எவரோ அவரே வெல்வார். யார் வெல்வார் என்பதை காலம் சொல்லும்.

~அருள்

Tags :
Maaveerar naalnaam tamilarVCKVijayமாவீரர் நாள்விஜய்
Advertisement
Next Article