தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விளையாடத் தடை!
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. மேலும் அதிகப்படியான பணத்தை இழப்பதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக சட்டங்கள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆன்லைன் கேமிங் (விளையாட்டு) ஆணையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை தற்போது எடுத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பயனாளர்கள் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளில் உள்நுழைய ஆதார் அட்டை எண் கட்டாயம். நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு பயனாளர்களை அனுமதிக் கூடாது.பயனாளர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விளையாடினால் 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய விதிகள் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.