மணிப்பூரில், மதுவிலக்கை நீக்கிய பாஜக அரசு, அதற்கென டாஸ்மாக் போன்ற நிறுவனத்தைத் தொடங்க முடிவு!
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக அமுலில் இருந்த மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருப்பது போல மதுபான தயாரிப்பு, விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நிறுவனம் ஒன்றையும் அம்மாநில பாஜக அரசு உருவாக்கியுள்ளதுதான் ஹைலைட்.
மணிப்பூர் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. எனினும் 2002ஆம் ஆண்டு அம்மாநில அரசு 5 மலைப்பகுதிகளிலுள்ள மாவட்டங்களில் மட்டும் இந்தத் தடைக்கு விலக்கு அளித்தது. இதன்பின்னர் இந்தியாவில் அதிகளவில் மது அருந்துபவர்கள் பட்டியலில் மணிப்பூர் மூன்றாவது இடத்தை பிடித்தது. தற்போது அங்கு மது விற்பனையை சட்டபடி ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் நலன் அமைப்புகள் தீவிர எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையிலும் மணிப்பூரில் சட்டவிரோத கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு மதுவிலக்கை கைவிடுவது என முடிவு செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கொள்முதலுக்கான டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது போல மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மதுபானங்களுக்கான அரசு நிறுவனம் MSBCL உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1970களில் இருந்தே மணிப்பூரில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. ஆனால் 1991-ம் ஆண்டு முதல்தான் மணிப்பூரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பாரம்பரிய மது தயாரிப்புக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது.மணிப்பூர் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மணிப்பூரில் முழுமையாக மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மணிப்பூர் அமைச்சரவை வழங்கி இருக்கிறது.
இப்படி மணிப்பூரில் பாஜக அரசு மதுவிலக்கு கொள்கையை கைவிட்டு டாஸ்மாக் பாணி நிறுவனம் உருவாக்கப்படுவது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் பாஜக ஆளும் மணிப்பூரில் 30 ஆண்டுகால மதுவிலக்கு திரும்பப்பெறப்பட்டிருப்பது குறித்து கடும் விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் கலவரம் கட்டுப்படுத்தாத சூழலில் இந்த முடிவு தேவையா? என்கிறார்கள்.