ஓவியர் மணியம்!
1924 ஆம் ஆண்டு பிறந்த மணியம் இள வயதிலேயே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை ஓவியக்கலை கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அதனை முழுவதும் முடிக்கும் முன்னரே ஆசிரியர் கல்கியால் அடையாளம் காணப்பட்டு கல்கி இதழுக்கு படம் வரைய துவங்கினார்.
அதாவது 1941ம் ஆண்டு கல்கி அவர்களின் அறிமுகம் மாணவர் சுப்பிரமணியத்துக்குக் கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த அந்த அறிமுகத்தில், கல்கி பத்திரிகையில் ஓவியம் வரைய வாய்ப்பு கோருகிறார் இளைஞர் சுப்பிரமணியம். அவர் ஓவியர்தான் என்பதற்கு அடையாளமாக அந்த இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஓவியங்கள் வரையப்பட்ட ஒரு நோட்டுப் புத்தகமே சாட்சியாக இருந்தது. அதை வாங்கிப் பார்த்த ஆசிரியர் கல்கி அவர்கள், அந்த இளைஞரின் ஓவிய ஆர்வத்தைக் கண்டு, ‘‘இப்படி ஓவியம் வரைவதற்கு வாய்ப்பு கேட்பதற்கு பதிலாக, பேசாமல் கல்கி பத்திரிகையிலேயே ஓவியராக சேர்ந்து விடு. மாதாமாதம் சம்பளம் கிடைக்கும்” என்று கூறுகிறார்.
அந்த மாணவர் சுப்பிரமணியமோ, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் யோசித்த அந்த இளைஞர், ‘‘ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் எனது படிப்பு முடிந்தால் எனக்கு டிப்ளமோ சான்றிதழ் கிடைக்குமே’’ என்று அப்பாவியாகக் கூறுகிறார். அதைக் கேட்ட ஆசிரியர் கல்கி அவர்கள், “ஓவியக் கல்லூரியில் நீ வாங்கப்போகும் டிப்ளமோ சான்றிதழ் ஓவியம் வரையப் போகிறதா? அல்லது நீ ஓவியம் வரையப் போகிறாயா? ஓவியக் கல்லூரியில் உனக்குக் கிடைக்கும் பயிற்சியை விடவும், இந்தப் பத்திரிகையில் ஓவியனாகப் பணியாற்றுவதால் உனக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். உனக்கு சான்றிதழ் முக்கியமா அல்லது பத்திரிகை வேலை முக்கியமா என்பதை நீயே யோசித்து முடிவு செய்துகொள்” என்று முடிவை அந்த மாணவர் சுப்பிரமணியத்தின் வசமே விட்டு விடுகிறார்.
சற்று நேரம் யோசித்த அந்த மாணவர் சுப்பிரமணியம், ‘ஓவியக் கல்லூரி சான்றிதழை விடவும், அலுவலக ஓவியப் பணியே முக்கியம் என்று முடிவு செய்து, கல்கி அலுவலகப் பணிக்கு ஒப்புக்கொள்கிறார். இப்படித்தான் ஓவியத்தின் மீது அவருக்கு இருந்த தீராத காதல் கல்லூரி சான்றிதழை விடவும், பத்திரிகையில் ஓவியம் வரைவது முக்கியம் என அவரை உந்தித் தள்ளியது.
அன்றிலிருந்து மாணவர் சுப்பிரமணியம், ஓவியர் மணியம் ஆக உருமாற்றம் பெறுகிறார். அந்த நிமிடம் அவருக்கு ஓவியராக வேலை மட்டும் கிடைக்கவில்லை; அவரது வாழ்க்கையையே மாற்றப்போகும் கல்கி என்கிற ஒரு நல்ல குருவும் அவருக்குக் கிடைக்கிறார். சிஷ்யனுக்கு ஒரு நல்ல குரு கிடைப்பதைப் போலவே, குருவுக்கும் ஒரு நல்ல சிஷ்யன் அமைய வேண்டும். அப்படி குருவுக்கேற்ற சிஷ்யனாகவும், சிஷ்யனுக்கேற்ற குருவாகவும் அவர்கள் இருவரது எண்ண அலைகளும் ஒன்றாகவே இருந்தது வியப்புக்குரிய விஷயம்.
அதன் பிறகு அவர் மனதில் அவருடைய முதல் ஓவிய குரு ராய் சௌத்ரி, இரண்டாவது குரு ஆசிரியர் கல்கி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
ஆசிரியர் கல்கி தான் எழுதிய சரித்திர புதினங்களை அவை நடந்த இடத்திற்கே சென்று அந்த சூழ்நிலையை அனுபவித்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் .மணியம் அவருடன் சேர்ந்த பிறகு அவர் சென்ற எல்லா சரித்திர இடங்களுக்கும் மணியத்தை உடன் அழைத்துச் சென்று அல்லது தனியே அனுப்பித்து படங்களை வரையச் செய்தார்.
ஸ்பாட் ஓவியங்கள் என்று சொல்லப்படும் பாணியில் (ஒரு பொருளை அது இருக்கும் இடத்திற்கே சென்று அருகில் இருந்து பார்த்து வரைவது) ஓவியர் மணியம் வல்லுனராக இருந்தார். பாதாமி, ஹம்பி, அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள், மாமல்லபுர சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில் என அவர் வரைந்த ஸ்பாட் ஓவியங்கள் ஏராளம். அந்த இடத்திற்கு சென்று பார்க்க முடியாதவர்கள் அனைவருக்கும் அதை உயிர்ப்பித்து அவர்கள் தொட்டு உணர்ந்து ரசிக்கும் அளவிற்கு கல்கியில் வெளியிட்டு தீபாவளி மலர் புத்தகங்களில் உயிர் பெற்று உலா வந்தன.
பொன்னியின் செல்வன் என்னும் மாபெரும் சரித்திர புதினத்தை கல்கி எவ்வளவு நாள் யோசித்து எழுதினாரோ அதை விடவும் இரண்டு மடங்கு உழைப்பை போட்டு அதன் 37 கதாபாத்திரங்களையும் தனித்தனியே முகபாவனை, நகை, நடை உடைகள் என மாறு படுத்தி காட்டி அந்தந்த வாரத்தில் அவர்களை பல்வேறு முக பாவங்களில் அதன் தொடர்ச்சியும் இருக்கச் செய்து, வாசகர்களை, பொன்னியின் செல்வனில் முதல் வரியில் கல்கி செல்வது போல் "கால ஓடத்தில் ஏறி இன்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாசகர்களை அழைத்துச் செல்ல இருக்கிறேன்" என்பதை நிஜமாக்கி அதை நிரூபித்தும் காட்டினார்.
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள்.என்றுள்ளதே இவர் ஓவியத்துக்கு கிடைத்துள்ள பெரிய சான்றிதழ் அல்லவா?
அப்பேர்ப்பட்டவரின் பிறந்த நாளில் ஆந்தை ரிப்போர்ட்டர் கை தொழுகிறது🙏