For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கள்ளச்சாராயம் ஒரு சமூக பிரச்சனை!

05:18 PM Jun 24, 2024 IST | admin
கள்ளச்சாராயம் ஒரு சமூக பிரச்சனை
Advertisement

ற்போது கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவங்களில் ஒன்றாக உள்ளது.யார் அதிகப் போதை தரும் சாராயத்தை விற்கிறார்கள் ? என்ற போட்டியில் மெத்தனால் கலந்து விற்கும் நிலை சில இடங்களில் காணப்படுவதாக இதில் மூழ்கியிருக்கும் அன்றாடக் குடிகாரர்கள் கூறுகிறார்கள். இவை மலிவு விலை சமாச்சாரம் என்பதால் தினக்கூலி சாமானியனுக்கு விருப்பமானதாக இருக்கிறது!குறிப்பாக விவசாயக் கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, பெயிண்டிங், பிளம்பிங், கொத்தனார், சித்தாள், காவலாளி போன்ற வேலைகளை செய்பவர்கள் பணிக்கு செல்லும் அதிகாலையிலும் வேலைமுடித்து இரவு வீட்டிற்கு திரும்பும் முன்பும் இவர்கள் இந்த கள்ளச்சாராயப் போதைக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

Advertisement

மது போதை இருந்தால் மட்டுமே இது போன்ற கடினமான பணிகளில் ஈடுபட முடியுமா? இதுவரை வடகிழக்கு பகுதியில் இருந்து தமிழகத்தில் பணிகளுக்காக வந்த இளைஞர் எவரும் போதையுடன் மட்டுமே பணியாற்ற முடியும் எனக் கூறியதே கிடையாது! மதுசாராய பார்களில் கூட அவர்கள் குழுமி குடித்து மயங்கி மந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்தது கிடையாது, ஆகக் கடின வேலைகளுக்கும் மகிழ்ச்சிக் கொண்டாடங்களுக்கும் தேவையற்றது மதுசாராயம்!

Advertisement

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை 20% அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்பு நடந்த சம்பவங்கள் ….

2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலீசாரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்தது.

2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை தடுப்பது தமிழ்நாடு மதுவிலக்கு கலால் பிரிவு காவல்துறையின் பொறுப்பாகும். கடந்த 2021 முதல் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 565 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வருடம் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய மரணத்தில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் 21 பேரை கைது செய்ததுடன் அதில் 8 பேரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தினசரி ரூ 500 சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி கூட டாஸ்மாக் கடைக்குச் சென்று 120 முதல் 150 ரூபாய் செலவழித்து மதுபானம் அருந்த விரும்புவதில்லை.

மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் எல்லாத் தரப்பு மக்களின் நிதி வசதிக்கு ஏற்ப விலைகளில் மது பானங்கள் இருந்தும் எல்லா பொருட்களுக்கும் ‘விசேச’ பிரீமியம் குறைந்தது ரூ.5 முதல் ரூ 60 வரை தரப்பட வேண்டிய நிலையில் இப்படிப்பட்ட மலிவு விலையில் அதிமிஞ்சிய போதை தரும் வஸ்துக்கள் கிடைப்பதால் அவை வரவேற்பு பெறுவது ஏன் என்று புரிகிறது, அதற்கான விலைதான் இப்படிப்பட்ட கொடூர சாவுகள்.

தமிழக காவல்துறை சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த ‘கிராமக் காவலர்கள்’ திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடக்கும் பிரச்னைகள், சந்தேக நபர்களின் நடமாட்டம், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. கள்ளச்சாராயத்தின் ஆபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் அரசு எதிர்பார்த்த அளவில் மக்களிடையே சென்று சேரவில்லை என்பதையே கள்ளக்குறிச்சிச் சம்பவம் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இந்தக் கிராமக் காவல் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் ஆகியோரை காவல்துறை தொடர்பு கொண்டு அந்தந்த கிராமத்தில் முறைகேடாகச் சாராயம் விற்பது குறித்தும் அதில் ஈடுபடுவோர் குறித்தும் தகவல் அளிக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் கிராம அளவில் சாராயத்தை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை காவல்துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி பல ஊர்களிலும் 24 மணிநேரமும் இந்த கள்ளச்சாராயம் கிடைப்பதாகவும் அதுவும் ஆட்டோ, இருசக்கர வாகனம் என பலவற்றிலும் கொண்டு வந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகும் வழக்கம் உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் கதறுகிறார்கள்.

பாக்கெட் ஒன்றின் விலையோ வெறும் ரூ50! பால் பாக்கெட்டின் விலையை விட சற்றே கூடுதல்…!தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனை தொடரக் காரணம் புரிகிறதா? மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கள்ளச்சாராய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். கள்ளச்சாராயம் ஒரு சமூக பிரச்சனை என்பதை நாம் உணரந்து அதன் விற்பனைக்கும் அதைக் குடிப்பவர்கள் மனமாற்றத்துக்கும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆர். முத்துகுமார்

Tags :
Advertisement