தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பெரியாரைப் பாடினால், சங்கீதத்தின் புனிதம் கெட்டு விடுமா?

01:57 PM Mar 28, 2024 IST | admin
Advertisement

புனிதமான கர்நாடக சங்கீதத்தைத் தீட்டுப்படுத்தி விட்டாராம் டி.எம். கிருஷ்ணா. அப்படிப்பட்டவருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது கொடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். ‘அது அகாடமியின் உரிமை. அதில் நாங்கள் தலையிடவில்லை. என்றாலும் அதில் எங்களுக்குச் சம்மதமில்லை. அதனால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொள்ளவோ, பாடவோ போவதில்லை’யென்று சில சங்கீத மாமிகளும் மாமாக்களும் பிரகடனப்படுத்தி விட்டார்கள். டி.எம். கிருஷ்ணாவின் இந்த அடாத செயலை, வெளிநாட்டுக் கிறிஸ்துவ மாப்பிள்ளைக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்த விசால மனமுடைய ஒரு சங்கீத மாமியால்கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் வேடிக்கை.

Advertisement

சரி, கர்நாடக சங்கீதத்தை டி.எம். கிருஷ்ணா எந்த வகையில் தீட்டுப்படுத்தி விட்டார்?

‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார் - தந்தை பெரியார்.. சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார் -தந்தை பெரியார்…’ - என்று தொடங்கும் ஒரு பாடல். ‘மாதொரு பாகன்’ புகழ் பெருமாள் முருகன் எழுதியது. இதை டி.எம். கிருஷ்ணா கர்நாட சங்கீதத்தில் இசையமைத்துப் பாடிவிட்டார் என்பதுதான் இவர்களுக்குப் பிரச்னை. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய சங்கீத மும்மூர்த்திகளின் புனிதமான கீர்த்தனைகளைப் பாட வேண்டிய வாயால் பெரியாரைப் பாடி, சங்கீதத்தின் புனிதத்தைக் கெடுக்கலாமா என்பதுதான் இவர்களின் ஆதங்கம்.

Advertisement

இந்தக் கூட்டத்திடம் நமக்கு ஒரேயொரு கேள்விதான். கோவில்களில் ஆடப்பட்ட ‘சதுர்’ ஆட்டத்தைப் புனிதப்படுத்தி, பரத நாட்டியமாக்கி நீங்களே எடுத்துக் கொண்டீர்கள். வாய்ப்பாட்டும் உங்கள் வசம். புனிதமாகப் போற்றப்படுகிற பசுக்களில் பக்குவமான பசுக்களைத் தேர்ந்தெடுத்து, அதன் தோலினால் செய்யப்படும் மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்களில் ‘பறை’யை மட்டும் விலக்கிவிட்டு, மற்ற அனைத்தையும் உங்கள் வசப்படுத்திக் கொண்டீர்கள். வீணை, வயலின் போன்ற தந்தி வாத்தியங்களும் உங்கள் வசம்.

ஆனால், காற்று வாத்தியங்களில் புல்லாங்குழலை மட்டும் எடுத்துக் கொண்டு, நாதஸ்வரத்தை உங்களிடமிருந்து சுத்தமாக ஒதுக்கி வைத்திருப்பதேன்? உங்களில் யாரையாவது நாதஸ்வர வித்துவான் என்று அடையாளம் காட்ட முடியுமா? ஏனில்லை? அதற்கு மட்டும் காருக்குறிச்சி அருணாசலம், டி.என். ராஜரத்தினம் பிள்ளை. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், எம்.பி.என். சேதுராமன் - பொன்னுசாமி, ஷேக் சின்ன மெளலானா என்றுதான் போக வேண்டுமா? புனிதமான கர்நாடக சங்கீதம் வாசித்தாலும் உங்களைப் பொருத்தவரை நாதஸ்வரம் என்பது தீண்டத்தகாத வாத்தியம்தானே!

கடைசியாக, பெரியாரைக் கொச்சைப் படுத்த இன்னொன்றையும் சொல்லுவீர்கள். மகள் வயதுடைய மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் என்பீர்கள். 72 வயதான பெரியார் 27 வயதான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது வரலாற்று உண்மை. அதுவொன்றும் குழந்தைத் திருமணமுமல்ல. அவர்கள் செய்து கொண்டது இல்லறம் நடத்துவதற்கான காதல் திருமணமும் அல்ல. இருவரும் ஒருவருக்கொருவர் கருத்தியல் ரீதியாகப் புரிந்து கொண்டு, பெரியாருக்குப் பணிவிடை செய்வதற்கான சட்டபூர்வமான வாழ்க்கை ஒப்பந்தம். அவ்வளவே. இதைத்தான் கொச்சைப் படுத்துகிறீர்கள். ஆனால், 42 வதான அருண்டேல் 16 வயது ருக்மிணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதை மட்டும் ‘காதல் திருமணம்’ என்று புனிதப்படுத்திக் கொண்டாடுகிறீர்களே, அது எப்படி?

செ. இளங்கோவன்

Tags :
Music AcadamyTM Krishnaசங்கீதம்பெரியார்மியூசிக் அகாடமி
Advertisement
Next Article