For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'மீண்டும் பிறப்பேன்'...- வீரத்தியாகி குதிராம் போஸ்!

06:07 PM Aug 11, 2024 IST | admin
 மீண்டும் பிறப்பேன்      வீரத்தியாகி குதிராம் போஸ்
Advertisement

1908 ஆகஸ்ட் 10....முசாஃபர்பூர் சிறைச்சாலை...தனிக் கொட்டடியில் அந்தக் கல்லூரி மாணவன் குதிராம் போஸ்... அப்போது அவனுக்கு வயது 17 தான்... தூக்குக் கயிற்றில் தொங்கப் போகிறான். ஆனால் எந்தக் கவலையுமின்றி அவன் ஒரு புத்தகத்தைக் கவனத்துடன் படித்துக் கொண்டிருக்கிறான்... இந்த மாணவன் எதற்காக இந்தச் சிறையில் வாழ்கிறான்? எதற்காக அவனுக்குத் தூக்குத் தண்டனை?

Advertisement

வங்காளத்தில் மிதனப்பூர் மாவட்டத்தில் 'ஹபிப்பூர்' என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் அந்த மாணவன் பிறந்தான். அவனுக்கு 13 வயது நடந்து கொண்டிருந்தபோது வங்கத்தில் சுதந்திரப் போராட்டம் பெரும் நெருப்பானது. அரவிந்தர், நிவேதிதா ஆகியோரின் விடுதலை முழக்கங்களைக் கேட்டு, அந்த மாணவன் விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டான். மிதனப்பூர் கல்லூரியில் அந்த மாணவன் படித்துக் கொண்டிருந்த போது, அங்கே பணியாற்றிய பேராசிரியர் சத்தியேந்திர நாத் போஸின் தொடர்பு அந்த மாணவனுக்குப் பல புரட்சியாளர்களை அறிமுகம் செய்தது. இதன் விளைவால் அரவிந்தரின் இளைய சகோதரர் பரீந்திர குமார் கோஷ் நட்பும், அவருடைய 'அநுசீலம் சமிதி' என்ற அமைப்பின் உறுப்பினர் தகுதியும் அந்த மாணவனுக்குக் கிடைத்தது.

Advertisement

1905 - ல் பிரிட்டிஷார் வங்கத்தைப் பிரிக்க முயன்றபோது தேச பக்தர்கள் அதைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட அந்த மாணவன் காவல் நிலையங்களின் மீது குண்டுகளை வீசி, வெள்ளை அதிகாரிகளைக் கலங்கடித்தான். காவல் துறையினர் அந்த மாணவனை வலை போட்டுத் தேடியபோதும் அவர்களுடைய கண்களில் சிக்காமல் காவல் நிலையங்களை அந்த மாணவன் தொடர்ந்து தாக்கி வந்தான். முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றிய 'கிங்ஸ் போர்டு' என்ற நீதிபதி தேச பக்தர்களுக்குக் கொடும் தண்டனைகளைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இவனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்த 'அநுசீலம் சமிதி' அமைப்பு, அந்தப் பொறுப்பை அந்த மாணவனுக்கு வழங்கியது.

ஒரு புத்தகத்தை வாங்கி, அதில் வெடி குண்டை வைத்துப் பார்சலாக்கி, அதில் 'அன்பளிப்பு' என்று எழுதி, நீதிபதி கிங்ஸ் போர்டுக்கு அந்த மாணவன் அனுப்பி வைத்தான். அந்தப் பார்சலைப் பிரித்திருந்தால், குண்டு வெடித்து நீதிபதி கிங்ஸ் போர்டு மரணத்தைத் தழுவி இருப்பான். ஆனால் அந்தப் பார்சலை நீதிபதி கிங்ஸ் போர்டு தொட்டுக் கூடப் பார்க்காததால் சாவிலிருந்து தப்பித்துக் கொண்டான். எடுத்த முடிவின்படி அந்த நீதிபதியை சாகடித்தாக வேண்டும் என்ற குறிக் கோளைக் கொண்ட அந்த மாணவன், நண்பன் பிரஃபுல்ல சாஹியை அழைத்துக் கொண்டு நீதிபதி கிங்ஸ் போர்டு தங்கியிருந்த முசாஃபர்பூர் பங்களாவிற்கே சென்று, அதன் அருகில் ஒரு சத்திரத்தில் தங்கிக் கொண்டு, நீதிபதி கிங்ஸ் போர்டின் அன்றாடப் பணிகளைக் கண்காணித்தான்.

1908 ஏப்ரல் 30 அன்று ஒரு ஐரோப்பிய கிளப்பிலிருந்து நீதிபதி கிங்ஸ் போர்டின் வாகனம் வந்தது. அதன் மீது நண்பன் பிரஃபுல்ல சாஹியுடன் சேர்ந்து அந்த மாணவன் வெடி குண்டுகளை வீசினான். அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அந்த வாகனத்தில் பயணித்த நீதிபதி கிங்ஸ் போர்டின் மனைவியும் மகளும் மடிந்தனர். நீதிபதி கிங்ஸ் போர்டு அதில் பயணிக்காததால் இப்போதும் சாவிலிருந்து தப்பித்துக் கொண்டான்!இந்தக் குண்டு வெடிப்பிற்குப் பின் அந்த மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அந்த மாணவனைக் காட்டிக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று ஆளுவோர் அறிவிப்புகளும் செய்தனர். இருப்பினும் அந்த மாணவன் காவல் துறையிடம் சிக்கவில்லை.பல இடங்களில் தலைமறைவாக வாழ்ந்த அந்த மாணவனும் அவனுடைய நண்பன் பிரஃபுல்லா சாஹியும் சமஸ்திர்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைக்க, அங்கிருந்து எப்படியோ அந்த மாணவன் மட்டும் தப்பித்து விட்டான். ஆனால் அவனுடைய நண்பன் பிரஃபுல்ல சாஹியால் தப்ப இயலவில்லை. அதனால் காவலர்களை பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட, அது குறி தவறி வெடித்தது. இனி தப்ப முடியாது என்ற முடிவுக்கு வந்த பிரஃபுல்ல சாஹி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மண்ணில் சரிந்தான். பிரஃபுல்ல சாஹியின் உயிரற்ற உடலைத்தான் காவல் துறையினரால் கைது செய்ய முடிந்தது.

1908 மே 1 அன்று ஒரு டீக்கடையில் இருந்த அந்த மாணவனைக் காவல் துறையினர் சூழ்ந்தனர். காவலர்களைச் சுட்டு வீழ்த்தவும், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் அந்த மாணவன் முயன்றது வெற்றி பெறவில்லை. இறுதியில் காவல் துறையிடம் அந்த மாணவன் சிக்கினான். சிறையில் அவனை அடைத்து வைத்து வழக்கு நடத்தினர். அந்த மாணவனுக்காக எந்த வழக்குரைஞரும் வழக்காட அஞ்சியபோது 'காளிம் போஸ்' என்ற வழக்குரைஞர் அந்த மாணவனுக்காக வாதிட்டார். இருப்பினும் நீதிமன்றம் அந்த மாணவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது.

1908 ஆகஸ்ட் 10 இரவு... அந்த மாணவனுக்குத் தூக்கம் வரவில்லை... எழுதுவதற்குப் பேனா, பேப்பர் தேடுகிறான். எதுவும் கிடைக்கவில்லை... இறுதியில் ஒரு கரித்துண்டு மட்டும் அவனுக்குக் கிடைக்கிறது... அதைக் கொண்டு அந்த சிறைச் சுவரில்,

"அம்மா! நான் உன் வயிற்றில் பிறந்ததற்கு மகிழ்கிறேன். அதே நேரத்தில் இந்தத் தேசத்திற்காகத் தூக்கில் தொங்கப் போவதை நினைத்து நான் அதைவிட மகிழ்கிறேன். என்னுடைய சாவை நினைத்து நீ கவலைப்படாதே! இந்தத் தேசத்தில் வாழ்கின்ற ஏதாவதொரு தாயின் வயிற்றிலிருந்து மீண்டும் நான் பிறப்பேன். அந்தக் குழந்தை நான்தானா என்பதை நீ அறிய விரும்பினால், அந்தக் குழந்தையின் கழுத்தைத் தடவிப் பார். அங்கே தூக்குக் கயிற்றின் தழும்பு இருக்கும்" என்று அந்த மாணவன் எழுதி முடித்தான்.

இதோ! 1908 ஆகஸ்ட் 11... வெள்ளையர் அரசு அவனைத் தூக்கிலிட்டு மகிழ்ந்தது. அந்த மாணவனின் விருப்பப்படி அவனுடைய உடல், அவனுக்காக வாதாடிய வழக்குரைஞர் காளி போஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மாணவனின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த மாணவன் உடல் தீக்கிரையான பின் அவனுடைய சாம்பலை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து மக்கள் வணங்கிய நிகழ்வுகளும் இந்தத் தேசத்தில் நடந்தது. அந்த மாணவன் தான் இந்தியாவிலேயே தேச விடுதலைக்காக மிகச் சின்னஞ்சிறு வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட குதிராம் போஸ்!

- இன்று மாவீரன் குதிராம் போஸ் நினைவு நாள்

ஜீவபாரதி

Tags :
Advertisement