For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கரைச் சேர்ப்பேன்!-தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா விஜய்காந்த் பேச்சு - முழு விபரம்!

07:29 PM Dec 14, 2023 IST | admin
கரைச் சேர்ப்பேன்  தே மு தி க  பொதுச் செயலாளரான பிரேமலதா விஜய்காந்த் பேச்சு   முழு விபரம்
Advertisement

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அனைவரிடத்தின் அன்பாக பழகிய விஜயகாந்த், அரசியல் களத்திலும் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்திலேயே மிகவும் துணிச்சலாக கட்சி தொடங்கினார். மேலும் அதிமுகவுடன் 2011 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மாறி மாறி கூட்டணி அமைத்தது, முக்கிய நிர்வாகிகள் விலகல் என அக்கட்சி சரிவை நோக்கி சென்றது. இப்படியான நிலையில் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அண்மையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா வீடியோ மூலம் விஜயகாந்த் நலமாக இருப்பதாக உறுதிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement

இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர் - பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரேமலதா தேமுதிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். தேமுதிகவின் நிறுவனத் தலைவராக மட்டுமே இனி விஜயகாந்த் தொடர்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

> தன் முழு அஸ்திரத்தையும் வழங்கி கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்த தேமுதிக மாவீரர்கள், முன்னோடிகள் இவர்களின் மரணச்செய்தி கேட்டு நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் மனது கலக்கமடைந்துள்ளனர். தேமுதிக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறது.

> தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான முதல்வராக வளம்வரவேண்டி பிராத்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பொதுக்குழு தனது முழுமனதான நன்றியை தெரிவிப்பதோடு, அந்த பிரார்த்தனையில் தன்னையும் இணைத்துக்கொள்கிறது.

சமீபத்தில் தமிழக தலைநகரையே புரட்டிப் போட்ட மிகஜாம் புயலால் தமிழகம் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. தமிழகமக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். எத்துணை அளவிலும் அவர்களது துயரத்தை அளவிட முடியாது. அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் தேமுதிக என்றைக்குமே துணைநிற்கும் என்ற வாக்குறுதியோடு, பாதித்த மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.15,000/-மும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் பத்து லட்சமும், உடனடியாக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

> இயற்கை பேரிடர் என்பது அசாதாரணமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை முழுதாக பாதுகாக்கின்ற கடமை அதற்கு உள்ளது. எதோ தேங்கி நிற்கின்ற தண்ணீரில் நின்று காட்சிதருவதாலும், இடைக்கால நிவாரணம் தருவதாலும் மட்டுமே இயற்கை பேரிடத்திலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது. தற்போதைய கஷ்டங்களில் இருந்து மக்களை விடுவிக்க திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எத்தனை பேரிடர் வந்தாலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் தண்ணீர் தேங்காமல் தொலைநோக்கு பார்வையோடு நிறைவான நிரந்தர வடிவால் அமைத்து செயல்பட சரியான திட்டமிட்டு உடனடியாக செயல்பட தேமுதிக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

நிரந்தரமான தீர்வுக்கு சில எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டாலும், மக்களை இதிலிருந்து பாதுகாத்திட உடனடியாக செயல்பட வேண்டுமென தேமுதிக பொதுகுழு வற்புறுத்துகிறது. அதன் முன்னோடியாக முதல் கட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செலுத்தி, "இயற்கை பேரிடர் மக்கள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம்" ஏற்படுத்தி மக்களை பாதுகாத்திட தமிழக அரசை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

> ஒரு அங்குல நிலம்கூட மாற்றுப்பணிக்காக அரசு எழுதிக்கொள்ள தேமுதிக அனுமதிக்காது. அதற்காக பல்வேறு போராட்டங்களை, பல காலங்களில் தேமுதிக முதன்மை கட்சியாக முன்னோடியாக நடத்தி இருக்கிறது. அந்த வகையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற நெய்வேலி விளை மண்ணை கையகப்படுத்த தேமுதிக அனுமதிக்காமல் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பணியினை நிறுத்திட்ட பிரேமலதாவை பாராட்டுவதோடு, இனிவரும் காலங்களில் அரசு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் தேமுதிக மிகப்பெரிய போராட்டத்தினை நடத்த வேண்டி வரும் "என இந்த பொதுக்குழு திமுக அரசை எச்சரிக்கிறது.

> மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தை தகுதியான மகளிருக்கு மட்டும் தான் என்ற திமுகவின் அறிவிப்பு. மகளிர்களை பாகுபடுத்தி பிரித்து பார்க்க தேமுதிக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே மகளிர் குடும்பத்தலைவி உரிமைத் தொகையான ரூபாய் ஆயிரத்தை உடனடியாக அனைவருக்கும் வழங்க திமுக அரசை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

> காவிரியின் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கின்ற வகையில், உபரி நீரை நதியின் வழியாக மற்றும் கால்வாய்களை அமைத்து ஏரிகளில் நிரப்ப பல்வேறு பாசனத்திற்கு வழிவிடுத்திடவும், எடுத்துக்காட்டாக காவேரி தமிழ்நாட்டில் முதன் முதலாக நுழைகின்ற மாவட்டமான தருமபுரிக்கும் மற்றும் சேலம் மாவட்டத்திற்கும் எவ்வகையிலும் பயன்படவில்லை. உபரி நீரை கால்வாய் அமைத்து ஏரிகளை நிரப்பினால் தர்மபுரி இன்னொரு நெற்களஞ்சியமாக விளங்கும் என்பதை சுட்டிக்காட்டி, வீணாக கடலில் உபரிநீர் கலப்பதை தடுத்திட, திட்டங்கள் அமைத்திட தேமுதிக பொதுக்குழு வற்புறுத்துகிறது.

> தன்னுயிரை மதிக்காமல் தன்பிணி எதிர்நோக்காமல், பிற உயிர்காக்க தன்பணி சிறப்பாக செய்திட்ட கொரோன கால பணியாளர்களை தேமுதிக பொதுக்குழு பாராட்டுவதோடு, நாளைய வேலைவாய்ப்பில் கொரோனா பணியாளர்களுக்கு முன்னுரிமை தருமாறு இந்த பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

> நாளைய மண்ணில் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்குகின்ற வகையில், தம் பணிகளை சிறப்பாக செய்கின்ற ஆசிரியர்களை தேமுதிக பாராட்டுகிறது. அவர்கள் பணிகளை அங்கீகரிக்கின்ற வகையிலும், சிறப்பான பாராட்டை நல்குகின்ற வகையிலும், ஆசிரியர் போராட்டத்தினை முடிவு காணுகின்ற வகையில் அவர்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிட இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழுவேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்க்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை அடுத்து கட்சியின் பொருளாளராக இருந்து தற்போது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலாத விஜயகாந்த் கூட்டத்தில் பேசிய போது ,கேப்டன் விஜயகாந்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால், 24 மணி நேரமும் அவரின் அருகில் இருந்து கவனித்து வருவதாகக் கூறினார். தன் செல்லாத வெளிநாடு இல்லை, வெளியூர் இல்லை எல்லா இடங்களில் சிகிச்சையும் செய்து பார்த்து விட்டதாகவும் ஆனால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட இருமல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார். அதற்குள் எத்தனையோ பொய்கள் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியதாக கூறிய பிரேமலதா, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதாக தெரிவித்தார்.கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் வீடியோ வெளியிட்டதாகவும், எத்தனையோ வருத்தங்கள் இருந்தாலும் தான் எந்த இடத்திலும் கண்ணீர் சிந்தியது இல்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஆனால் இன்று சொல்கிறேன் கேப்டனை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அத்துடன் ஒரு தலைமை இடத்தில் இருப்பவர்கள் கண்ணீர் சிந்தினால், அது தொண்டனை பாதிக்கும் என்பதால் தான் எந்த இடத்திலும் அழுததில்லை எனத் தெரிவித்தார். திட்டமிட்டு வதங்கி பரப்பிய youtube சேனல்கள் அனைத்தையும் வன்மையாக கண்டிப்பதாகக் கூறினார். பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள தான் 24 நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன் என்றும் 2024 இல் தேமுதிக எம்பிக்கள் டெல்லிக்கு செல்வது உறுதி எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது: "இன்றைய உலகில், இனிமேல் நமது தலைவரைப் போல ஒருவர் பிறந்து வந்தால்கூட, தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் போன்ற மனிதரை, புனிதரை யாரும் பார்க்க முடியாது. அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சி சாதாரண கட்சி இல்லை. அவருடைய லட்சியம், கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. தலைவர் விஜயகாந்த், எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த லட்சியத்தை கொள்கையை எப்போது நாம் அடைவோம். தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைக்கும் நாள்தான், நமது தலைவரின் லட்சியமும், கொள்கையும் வென்றதற்கான அர்த்தம். நான் இதை வெறும் வார்த்தைகளுக்காக சொல்லமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு இணைந்து நீங்கள் அனைவரும் உண்மையாக, ஒற்றுமையாக உழைக்க தயாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. காரணம், பலர் என் முன்னால் ஒன்று பேசுகிறீர்கள். நான் இல்லாதபோது பலர் வேறு ஒன்று பேசுகிறீர்கள். அனைத்தும் எனக்கு தெரியும். யார் யார் என்ன பேசுகிறீர்கள், என் முதுகுக்கு பின்னால் என்ன பேசுகிறீர்கள் என்று எல்லாம் எனக்கு தெரியும். அது தெரிந்தும், நான் அமைதி காப்பது எதற்காக தெரியுமா? தலைவர் விஜயகாந்த் ஆரம்பித்த இந்தக் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற உறுதிதானே, தவிர வேறு எதுவுமே கிடையாது.

இன்று எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப்பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கு அஞ்சமாட்டேன். சவால் என்று வந்தால், சவால்தான்.

உங்கள் அனைவரையும் மிகப் பெரிய பதவிகளில் அமர வைத்து பெருமைப்படும் நாள்தான், நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் பொதுச் செயலாளர் பதவிக்கு கிடைக்கப்போகும் பெருமை. எப்படி, 2011-ல், எதிர்க்கட்சித் தலைவராக தலைவருடன் 29 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்கு சென்றீர்களோ, அந்த வரலாற்றை மீண்டும் திரும்ப வரவைப்பேன். அதற்காக உங்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம், உண்மையாக, நேர்மையாக தேமுதிகவுக்காக உழைக்கக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Tags :
Advertisement